Last Updated : 03 Jan, 2014 03:31 PM

 

Published : 03 Jan 2014 03:31 PM
Last Updated : 03 Jan 2014 03:31 PM

ரஜினியைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை : நடிகர் சூரி

தனது பெயரில் சமூகவலைத்தளங்களில் இயங்கி வரும் கணக்குகளை முடக்க வேண்டும் என்று நடிகர் சூரி போலீசில் புகார்.

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது முக்கியமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார் சூரி. அவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை ஆரம்பித்து தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

சமீபத்தில், 'இவன் வேற மாதிரி' படத்திற்கு ரஜினி அளித்த பாராட்டு கடிதம் பற்றி இவரது பெயரில் இயங்கிவந்த ட்விட்டர் தளத்தில் கருத்து ஒன்று வெளியிடப்பட்டது. அக்கருத்தால், ரஜினியை அவதூறாக பேசிவிட்டார் சூரி என்று செய்திகள் பரவின.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அம்மனுவில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நான் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன்.

நான் பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி நான் அவதூறாக பேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.

பதறிப்போன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் ‘ஃபேஸ் புக்’ கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது.

ட்விட்டர், ஃபேஸ் புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, எனது பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். " என்று அம்மனுவில் சூரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x