Published : 04 Mar 2017 11:33 AM
Last Updated : 04 Mar 2017 11:33 AM
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியீட்டு வரும் ட்வீட்களால், தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு 'இது இவருடைய லீலை' என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது.
அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள், செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் என தொடர்ச்சியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியானது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.
தற்போது சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், இ-மெயில்கள் என அனைத்துமே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சின்மயி பற்றியும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சின்மயி, "இந்த சர்ச்சை ஆரம்பிக்கும்போதே நானும் ராகுலும் கார்த்திக் குமாரிடம் பேசினோம். சுசித்ராவுக்கு உடல்நலம் சரியில்லை என அவர் கூறியதும் உடனடியாக நிலையை புரிந்துகொண்டோம். யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
நேற்று கார்த்திக் குமார் பேஸ்புக்கில் ஆதரவு தருபவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவேற்றியிருந்தார். நாமே நேர்மையாக சிந்தித்தால் தெரியும், நம்மில் பலர் அதிக மன அழுத்தத்தை கடந்து வந்திருப்போம் அல்லது நமது குடும்பத்தினரில் யாராவது கடந்து வந்திருப்பார்கள். அது பற்றி நாம் பேச மாட்டோம். அவ்வளவே.
ஆனால், தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் தவறானது. (அவர் எப்போதோ என்னை அவரது பக்கத்திலிருந்து முடக்கிவிட்டார். காரணம் அவருக்கே வெளிச்சம்). எது நடந்தாலும் எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது. எது குறித்தும் நான் பயப்படத் தேவையில்லை. நான் நல்ல மனிதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "நான் திறமையை வைத்து மட்டுமே முன்னேறியுள்ளேன். யாருக்கும் அனுசரித்தல்ல. நம்மை மதிப்பிட்டுக்கொள்வது போல் தான் பிறரையும் மதிப்பிடுவோம் என கூறுவார்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். என்னுடையதை அல்ல. உங்களிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை எனத் தெரியும் சுசித்ரா. ஏனென்றால் அப்படி எதுவும் இல்லை. விரைவில் குணமடைவீர்கள் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
சுசித்ராவிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் நிலவி வரும் சர்ச்சைக்கு நடுவில், இந்த நிலையிலும் கிடைத்துவரும் ஆதரவும், புரிதலும் எனக்கும் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.
அதில் அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டனர். நடந்தது என்னவென்று தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சித்தனர். அது சுசித்ரா தற்போது அனுபவித்து வரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையின் வெளிப்பாடு என நானும் அவர்களிடம் நேர்மையாக நிலையை விளக்கியுள்ளேன். நாங்கள் ஒரு குடும்பமாக அவரது நிலையைப் புரிந்து கொள்ள, சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுசித்ரா, "இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஒரு முறை மகாசிவராத்திரி அன்று ஹேக் செய்யப்பட்டு, தனுஷுக்கு எதிரான விஷயங்களை பதிவிட்டு இருந்தார்கள். அப்போதே நான் சைபர் க்ரைமிற்கு தெரிவித்துவிட்டேன். இந்த முறையும் ஏற்கெனவே ஹேக் செய்யப்பட்ட இடத்திலிருந்தே நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. எதற்காக என்னுடைய ட்விட்டர் தளம் மூலமாக பதிவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயங்கள் தொடர்பாக தனுஷ் அலுவலகத்திலிருந்து என்னிடம் பேசி வருகிறார்கள்.
தற்போது தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகியுள்ளேன். ஏனென்றால் முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், தகவலால் சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT