Last Updated : 06 Nov, 2014 08:09 AM

 

Published : 06 Nov 2014 08:09 AM
Last Updated : 06 Nov 2014 08:09 AM

மீண்டும் குறும்படங்களை இயக்கப் போகிறேன்: கார்த்திக் சுப்புராஜின் புதிய திட்டங்கள்

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களைத் தொடர்ந்து தனது மூன்றாவது படைப்பான ‘இறைவி’ படத்தை ஜனவரியில் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில் தற்போது ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்.

நவம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள தனது புதிய நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ நிறு வனத்தை எந்த நோக்கத்தில் தொடங்கு கிறீர்கள்?

குறும்படங்களால் செதுக்கப்பட்ட வன், நான். தொடர்ந்து நிறைய குறும் படங்கள் எடுக்கும்போது அதற்கான மார்க்கெட்டிங் இருப்பதை நன்கு அறிய முடிந்தது. இதை ஆர்வமுள்ள மற்ற கலைஞர்களுக்கும் பயனுள்ள வகையில் கொண்டுபோகலாமே என்கிற முனைப்பில் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஸ்டோன் பென்ச்’. இந்த நிறு வனத்தின் மூலம் நல்ல நல்ல குறும் படங்கள் வெளிக்கொண்டுவரப்படும், நடிப்பு ஆசைக்கும், நடிகர்களாவதற் கான வாய்ப்புக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்கான முயற்சி இது.

‘இறைவி’ எந்த நிலையில் இருக்கிறது?

‘இறைவி’ படத்தின் கதை வேலை கள் தீவிரமாக நடக்கிறது. இப்போ தைக்கு கதையை டிசைன் பண்ணும் வேலை நடப்பதால் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பதைக்கூட யூகிக்க முடியவில்லை. முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய பயணமாக இந்தப்படம் இருக்கும்.

‘ஜிகர்தண்டா’படத்தின் வெற்றிக்கொண் டாட்டங்கள் எப்படி போய்க்கொண்டி ருக்கிறது?

நவம்பர் 21 - ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ள தெற்காசிய சர்வதேச திரைப்படவிழாவில் ‘ஜிகர்தண்டா’ திரையிடப்பட உள்ளது. இதற்கு முன்பு ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் இங்கு திரையிடப்பட்டுள்ளது.

‘ஜிகர்தண்டா’ 50 நாட்களைக் கடந்தபோது, அதற்காக பெரிய புரமோஷன் எதுவும் இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே?

ஆமாம். மனதில் பட்டதை வெளிப் படுத்தினேன். ஓடாத படங்களுக்கு கூட பெரிய அளவில் போஸ்டர், புரமோஷன் என்று செய்கிறார்கள். 50 நாட்கள் கடந்து நன்றாக பேசப்பட்டு வரும் ஒரு படத்துக்கு உரிய அங்கீகாரம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இல்லையே என்பதை ஒரு படைப்பாளிக்கே உரிய அக்கறையோடு வெளிப்படுத்தினேன். அது சரிதானே.

குறும்படம் எடுத்து குவித்த இயக்குநர் நீங்கள். இப்போது பெரிய படங்களை இயக்கி வருவதால் மீண்டும் அந்தப் பாதையில் பயணம் செய்வீர்களா?

விரைவில் அதற்கான வேலைகளை தொடங்குகிறேன். ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனத்திலேயே எனக்குப் பிடித்த மாதிரியான குறும்படங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டிருக்கிறேன். குறும்படங்களையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, உரிய கட்டணம் நிர்ணயித்து டிக்கெட் பெற்று பார்க்கும் விதமாக செய்வது உள்ளிட்ட சில திட்டங்கள்தான் என் நிறுவனம் நடைமுறைப்படுத்தப் போகிறது.

உங்கள் மனைவி எந்த அளவுக்கு உங்கள் திரையுலகப் பயணத்துக்கு உதவியாக இருக்கிறார்?

‘பீட்சா’ படத்தை எடுப்பதற்கு முன்பே என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அவர். எல்லாவகையிலும் எனக்கு அவங்களோட துணை ஆதரவாக இருக்கிறது.

உங்களுடைய படங்களை மணிரத்னம் ரொம்பவே கவனித்து பாராட்டுகிறாராமே?

‘ஜிகர்தண்டா’ படம் அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வாழ்த்தி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். நேரில் போய் பார்த்தேன். அவரது படங்கள் பற்றி பேசினேன். ‘ஜிகர்தண்டா’ போன்று வித்தியாசமாக யோசித்து படம் இயக்கச் சொன்னார்.

உலகில் யாருடைய இயக்கத்தின் மீதாவது உங்களுக்கு பிரமிப்பு ஏற்பட்டுள்ளதா?

மணிரத்னம், மகேந்திரன், அனுராக் காஷ்யப் ஆகியோரின் படங்களைப் பார்த்து பிரமித்துள்ளேன். அதேபோல் அமெரிக்க கலைஞன் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் பார்த்தும் பிரமித்துள்ளேன். இப்போது இவருக்கு வயது 80-க்கும் மேல். மாஸ் ஹீரோ, இயக்குநர் என்று பல பரிமாணம் கொண்டவர். அடுத்த ஆண்டுகூட இவருடைய படம் வெளிவரவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x