Published : 03 Feb 2014 06:32 PM
Last Updated : 03 Feb 2014 06:32 PM

`தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பில்லை’: இயக்குனர் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், வியாபார சினிமாவில் ஒழுங்கு முறை இல்லை என்றும் திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி குற்றம் சாட்டினார்.

பாரதி புத்தகாலயம், பின்னல் புத்தக அறக்கட்டளை ஆகியவை சார்பில் 11-வது புத்தகத் திருவிழா திருப்பூரில் நடைபெற்றது. இந்திய சினிமா நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியம் தலைமையில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

திரைப்பட தொகுப்பாளர் பீ.லெனின், இயக்குநர் சீனுராமசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.நன்மாறன் உள்ளிட்டோர் பேசினர். சினிமாவின் பூர்வீகம் 1935-ல் திருப்பூரைச் சேர்ந்த சோமு, கீரனூர் மொய்தீனுடன் சேர்ந்து திருப்பூர் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

அந்த நிறுவனம்தான் என்.எஸ்.கிருஷ்ணன், பி.யு.சின்னப்பா, திரைக்கதை வசனகர்த்தா மு.கருணாநிதி மற்றும் கதாநாயகனாக எம்.ஜி.ஆர்., நடிகையாக வி.என்.ஜானகி, திரைப்பட பாடலாசிரியராக கண்ணதாசன், பின்னணி பாடகராக டி.எம்.சௌந்தரராஜன், இயக்குநராக ஸ்ரீதர் உள்ளிட்ட பிரபலங்களை அறிமுகப்படுத்தியது. 30 ஆண்டு காலம் தமிழ் சினிமாவின் ஆணிவேராக திருப்பூர் திகழ்ந்தது என்றார் வி.டி.சுப்பிரமணியம்.

சிறு தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி

1980-ம் ஆண்டுகளில் பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்டோர் சிறு கலைஞர்களை வைத்து சிறந்த படைப்புகளை அளித்தனர். தற்போது ஒரு படம் வந்த 3 நாட்களுக்குள் திரையரங்கிலிருந்து எடுக்கப்படும் நிலையே உள்ளது. தரம் வாரியாக தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரிந்திருக்கிறார்கள். வியாபார சினிமாவில் ஒழுங்கு முறை வர வேண்டும். தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு செயலாற்றுவோர்தான் கலைஞர்கள்; அவரவர் விருப்பத்துக்கு அல்ல. எனினும் தொழில்நுட்ப மாற்றத்தால் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் சினிமா நம்பிக்கை அளிக்கிறது என்றார் திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி.

ஆவணப்படுத்துதல் அவசியம்

ஆரம்பக் காலத்தில் நகரங்களில் மட்டும்தான் முதலாளிகள் சினிமா எடுக்க வந்தார்கள். பல முறை தோல்விகள் வந்தாலும் சிறந்த திரைப்பட கலைஞர்களால் வெற்றி பெற முடியும். கேரளா, கல்கத்தாவில் காலத்திற்கேற்ற சிறந்த திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியம் என திரைப்பட தொகுப்பாளர் பீ.லெனின் கூறினார்.

சினிமா என்ற அற்புதம்

மனிதர்கள் மொழியை கண்டடைந்ததையடுத்து இயல், இசை, கூத்து என கலை வளர்ந்தது. இந்த மூன்றின் கலவையாக சினிமா என்ற அற்புதம் பிறந்தது. கதை நாயகர்களை மட்டும் பேசும் இடத்தில் கதைமாந்தர்களை முன்னிறுத்தக் கூடாது என்ற தொல்காப்பிய இலக்கணத்தை உடைத்து வேலைக்காரி, பூக்காரி, ரிக்ஷாகாரன் என சாமானியர்களை பேச வைத்தது சினிமா என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மூத்த தலைவர்களில் ஒருவரான என்.நன்மாறன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x