Published : 28 Apr 2017 06:05 PM
Last Updated : 28 Apr 2017 06:05 PM
தன் வரலாறு அறிந்த இளைஞன் படையைத் திரட்டி, பழி தீர்த்து தலைவன் ஆகும் கதையே 'பாகுபலி 2'.
பங்காளிச் சண்டையில் அரியாசனத்தை இழந்து உயிரை விடுகிறார் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). கணவர் இறந்ததும் தன் மகன் வருவான், பழி தீர்ப்பான், மகிழ்மதியை ஆள்வான் என சபதம் எடுக்கிறார் தேவசேனை (அனுஷ்கா). இந்த வரலாறு மகன் மகேந்திர பாகுபலிக்கு (பிரபாஸ்) தெரிய வருகிறது. அதற்குப் பிறகு எப்படி படைபலம் திரட்டுகிறார், பல்வாள்தேவனை (ராணா) எப்படி எதிர்கொள்கிறார், பகையை முடித்தாரா என திரைக்கதை விரிகிறது.
முதல் பாகத்தில் மிகப் பெரிய ட்விஸ்ட் வைத்து அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வைத்த விதத்திலும், அதை சரியாக சினிமா மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்திய விதத்திலும் இயக்குநர் ராஜமௌலி நிமிர்ந்து நிற்கிறார்.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார், சிவகாமி ஏன் அந்தப் பச்சிளம் குழந்தையை ஆற்றில் தத்தளித்தபடி வந்து உயிர்த் தியாகம் செய்து காப்பாற்றுகிறார் என்பதே பாகுபலி முதல் பாகம் எழுப்பும் இரு முக்கிய கேள்விகள். அதற்கான பதிலை சூழலுடன் பொருந்துகிற மாதிரியும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இயக்குநர் ராஜமௌலி பதிவு செய்திருக்கிறார்.
பிரபாஸ் இரண்டு தோற்றங்களிலும் மிகச் சரியான பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடை, உடை, பாவனையில் காட்டும் கம்பீரம், பெண்மையை மதிக்கும் குணம், அறிவுரை சொல்லும் நிதானம், வாள் சுழற்றும் வீரம், வாக்கை காப்பாற்றப் போராடும் மன உறுதி, எதிர்த்து நிற்கும் துணிச்சல் என கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறார். மகன் பிரபாஸ் உணர்வுகளின் சிக்கலையும், விவேகத்தையும் வெளிப்படுத்துகிறார்.
தேவசேனை கதாபாத்திரத்தில் அனுஷ்கா வசீகரிக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் அரண்மனையில் பேசும் காட்சி, பிரபாஸிடம் கைதியாக வர மாட்டேன் என தன் ஆளுமையை நிறுவும் காட்சி, தனக்கு வேண்டிய பரிசை சொல்லும் காட்சி என கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார்.
தன்னை எதிர்க்கும் பிரபாஸை ரம்யா கிருஷ்ணன் அணுகும் விதம், மகன் பிரபாஸ் களங்கமற்றவன் என உணரும் விதம் இரு விதமான பரிமாணங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மிளிர்கிறார்.
வழக்கமான கொம்பு சீவி விடும் கதாபாத்திரம்தான் என்றாலும் அதில் ராஜதந்திரத்துடன் செயல்படுவது, வஞ்சகத்துடன் அணுகுவது என நாசர் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
கள்ளம் கபடமில்லாமல் பிரபாஸுடன் பழகுவது, அவர் காதலுக்கு உதவுவது, சூழ்ச்சி, சதித் திட்டம் என எதுவுமே செய்யாமல் கட்டளைக்குப் பணிவது, அதற்காக கலங்குவது என எல்லா தருணங்களிலும் பல பரிமாணங்கள் தாண்டி அநாயசமான நடிப்பில் சத்யராஜ் கவர்கிறார். ரம்யாகிருஷ்ணனை 'சிவகாமி' என பெயர் சொல்லி அழைக்கும் அந்த இடத்தில் சத்யராஜூக்கு கிடைக்கும் கரவொலிகள் கணக்கில் அடங்காது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் சத்யராஜூக்கு விருதுகள் நிச்சயம்.
பலம் பொருந்திய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ராணா நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். குமார வர்மாவாக வரும் சுப்பாராஜூவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
தமன்னா, ரோகிணிக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.
இதிகாசம், சரித்திரம் என்று கதைக்கான பின்னணியோ, சம்பவங்களோ நினைவூட்டுவதாக அல்லது தொடர்புபடுத்திக்கொள்வதாக இருந்தாலும் அதை ஒரு கதையாக வடிவமைத்து, திரைக்கதையாக செதுக்கி, நுட்பமாகவும் துல்லியமாகவும் திரைமொழியில் வெளிப்படுத்துவது சாதாரணமல்ல. அந்த விதத்தில் இயக்குநர் ராஜமௌலி சாதித்திருக்கிறார்.
ஒரு சாகச வீரனின் கதை என்று படத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் நிறுவுவது அவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ஒற்றை நபராக தேர் இழுப்பது என மக்கள் ரசனையை அத்தோடு நிற்க விடாமல், மதம் கொண்ட யானையை அடக்க செய்யும் முயற்சிகளும், அதற்கான துல்லியமான காட்சிப் பதிவுகளும் ஆச்சரியத்தை வரவழைக்கின்றன. பிரபாஸ் அம்பு எய்தும் சாகசம், அனுஷ்கா பிரபாஸ் தோள்களில் ஏறி படகில் ஏறும் லாவகம் உட்பட பல்வேறு அம்சங்கள் ரசனைக்குரியவை. சறுக்கல், சரிவு இல்லாமல் நேர்த்தியான நம்பகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், மரகதமணியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தேவையில்லாத ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெங்கடேஸ்வர ராவ் செதுக்கி இருக்கிறார்.
ஆக்ஷன் படத்துக்கான சங்கதிகளை அப்படியே அள்ளி வந்து சண்டைக் காட்சிகளில் கொட்டியிருக்கிறார் பீட்டர் ஹெய்ன். சாபுசிரிலின் அரங்க அமைப்பும், கமலக் கண்ணனின் கிராபிக்ஸும் அசத்தல்.
திக் விஜயம் செய்வது, பட்டாபிஷேகம், போர் வியூகம், பெண்ணின் சபதம் என நுட்பமான பதிவுகள் அர்த்தமும் அழுத்தமும் மிக்கவை.
பட்டாபிஷேகத்தின் போது சத்யராஜ் எங்கே போனார், நாசரின் நிலைக்கான காரணம் என்ன, தமன்னாவின் வரலாறு ஆகியவற்றை போகிற போக்கில் காட்சிப்படுத்தியிருந்தாலோ அல்லது வசனமாக சொல்லியிருந்தாலோ இன்னும் நிறைவு பெற்றிருக்கும்.
இதை தவிர்த்துப் பார்த்தாலும் 'பாகுபலி 2' பெருமித சினிமாவாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT