Published : 13 Nov 2014 08:54 AM
Last Updated : 13 Nov 2014 08:54 AM
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர விருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.
‘‘ரஜினிக்கு பாடல் எழுதுவது கூடுதல் பொறுப்பு. கூடுதல் மகிழ்ச்சி. அவருக்கு பாடல் எழுதுவது கடினம் மாதிரி தெரியும். ஆனால் எளிது. ரஜினிக்குள்ளேயே பாடலுக்கான உள்ளடக்கமும் இருக்கும். எழுதும் பாடல் பிடித்துவிட்டால் உடனே பாராட்டிவிடுவார். இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகனுக்கு நிச்சயம் தீனி” என்று சொல்லும் வைரமுத்து, ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடல் உருவான சூழலையும் பகிர்ந்தார்.
‘‘படத்தில் ரஜினி நன்மை செய்து தீமை வாங்குகிறார். அந்தத் துயரத்தை அவரால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. தீமை செய்தவர்கள் மீது போர்த் தொடுக்கவும் அவர் விரும்பவில்லை. ‘வாய்மையே வெல்லும்’ என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.
அந்தத் துயரத்தை வாங்கி இந்தப் பாடலின் வழியே தமிழ் பேசுகிறது. பாடலைப் படித்துவிட்டு ரஜினி நெகிழ்ந்து போனார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதையின் சூழல்தான் இந்தப் பாடலுக்கு அடிப்படையாக அமைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் ஒலிப்பதிவின்போது நானும் உடன் இருந்தேன். இந்தப் பாட்டின் மீது இருந்த அக்கறையே அதற்குக் காரணம். படத்தில் மூன்று இடங்களில் இந்தப் பாடல் வரிகள் இடம்பெறுகிறது’’ என்கிறார் வைரமுத்து.
அந்தப் பாடல் வரிகள்...
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று
ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று
நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை
உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு
அடிகள் புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
சிரித்துவரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம்தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே!
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன்
புன்னகையைக் கொள்ளையிட முடியாது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT