Published : 26 May 2017 09:54 AM
Last Updated : 26 May 2017 09:54 AM
சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வந்த ‘சூப்பர் சேலன்ச்’ நிகழ்ச்சியை அடுத்து அதே நேரத்தில் வரத் தொடங்கியுள்ள ‘நட்சத்திர கபடி’, மலையாளத்தில் சூர்யா மியூசிக் சேனலுக்காக ‘யு அண்ட் மி’ நிகழ்ச்சி என்று பரபரப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் தியா.
‘‘சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியைப் போலவே நட்சத்திர கபடி நிகழ்ச்சியும் ஜாலியா போகுது. இப்போதான் ஆரம்பிச்சோம். வரும் வாரம் இறுதி சுற்றுக்கு வந்தாச்சு. இந்த நேரத்தில் மலையாள பூமியிலும் புதிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு!’’ என்று கலகலப்பாக பேட்டிக்குத் தயாரானார் தியா.
சன் டிவியை அடுத்து சூர்யா மியூசிக் மலையாள சேனலிலும் உங்களைப் பார்க்க முடிகிறதே?
அரவிந்த்சாமி, ஜெயம் ரவி மாதிரியான ஹீரோக்களுக்கு மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கு. அவங்களோட நேர்காணலை எடுத்து சூர்யா டிவியில் ஒளிபரப்பினோம். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு. அந்த அனுபவத்தோடு இப்போ சூர்யா மியூசிக் சேனலுக்குள்ள நுழைஞ்சிருக்கேன். ‘யு அண்ட் மி’ ஒரு கலகலப்பான காதல் நிகழ்ச்சி. அங்க இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
அப்படியே சினிமாவுக்கும் வந்திடலாமே?
பார்க்கலாம். சில குறும்படங்கள் நடிச்சிருக்கிறேன். ஆனா, தொடர்ந்து நடிக்கலாமான்னு அப்போ தோணினதே இல்லை. இப்போதான் ஆர்வம் வந்திருக்கு. நல்ல கதை என்றால் இறங்கலாம். சீரியலில் நடிக்க வாய்ப்பே இல்லை.
திருமணத்துக்கு பிறகு நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டீர்களா?
வாழ்க்கையின் பெரும்பகுதி பயணங்களாவே இருக்கு. சமீபத்துலகூட இந்தோனேஷியா போயிருந்தோம். ஒவ்வொரு ஊரையும் ஆசை தீர ரசிப்பதுதான் என்னோட பெரிய பொழுதுபோக்கு. இப்போக்கூட சன் டிவி நிகழ்ச்சிக்கான வேலையை முடிச்சுட்டு கோவை, மதுரை. சென்னை என்று பிரைவேட் ஈவண்ட்ஸ் முடிச்சுட்டு வந்திருக்கிறேன். இப்படி வேலைகூட சில நேரத்தில் பயணத்தை அதிகரிக்க வைக்குது. என் கணவர் கார்த்திக் சிங்கப்பூர் கிரிக்கெட் டீமில் கேப்டனா இருக்கிறார். மலேசியா, ஆஸ்திரேலியா என்று கிரிக்கெட் போட்டிகளுக்காக பறந்துகிட்டே இருப்பார். அவரை பார்க்கப் போகும்போதும் பயணங்கள் அமைந்துவிடும். கணவர் சிங்கப்பூர்ல இருப்பதால் சேனல் வேலையையும், பயணத்தையும் சரியாக கவனிக்க முடிகிறது. அவர் வேறு ஏதாவது ஒரு நாட்டில் இருந்தால் திருமணத்துக்கு பிறகு சின்னத்திரையில் இந்த அளவுக் காவது இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
கணவர் கார்த்திக்கின் கிரிக்கெட் போட்டிகளைத் தொகுத்து வழங்கவேண்டும் என்று தோன்றியதே இல்லையா?
முகநூலில் கார்த்திக் விளையாடிய சில போட்டிகளை நேரடியா தொகுத்து வழங்கியிருக்கேன். முக்கியமான போட்டிகள் நடக்கும்போது கண்டிப்பாக நானும் அங்கே இருப்பேன்.
சிவகார்த்திகேயன், மா.கா.பா. மாதிரி பெண் தொகுப்பாளர்கள் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான சூழல் இல்லையே?
பெண் தொகுப்பாளினிகள் நிறைய பேர் சினிமாவில் நடிக்கணும்னு இங்கே வருவதில்லை. பசங்கதான் தொகுப்பாளர் பணிக்கு அடுத்து என்ன என்ற திட்டத்தோடு சினிமாவுக்கு இடம்பெயர்கிறார்கள். பெரும்பாலான பெண் தொகுப் பாளினிகள் வேலையிலேயே சிறப்பான இடத்தைப் பிடித்தால் போதும் என்றுதான் யோசிக்கிறார்கள். அதோடு தொகுப்பாளராக இருக்கும்போது அது சொந்த வாழ்க்கையை பாதிக்காது. சினிமா, சீரியல் என்று போகும்போது நிச்சயம் அதுக்காகவே தனியே மெனக்கெட்டாக வேண்டும். வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழக்குற மாதிரியும் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT