Last Updated : 01 Mar, 2017 01:13 PM

 

Published : 01 Mar 2017 01:13 PM
Last Updated : 01 Mar 2017 01:13 PM

நெடுவாசல் போராட்டத்துக்கு துணை நிற்போம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

நெடுவாசலில் களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு என்றும் துணை நிற்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக் காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரி பொருள் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 13-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தமிழகம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் இன்றி இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. எதிர்வருகிற காலங்களும் மழை வந்து நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்ற நிலை பயப்படுத்துகிறது.

இந்நிலையில் ‘மீத்தேன்’ என்கிற திட்டம் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.

களமிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x