Published : 09 Mar 2014 03:19 PM
Last Updated : 09 Mar 2014 03:19 PM
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி,ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்திருக்கும் 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். முரளி மனோகர் தயாரிக்க, ஈராஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது.
இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் 'கோச்சடையான்' என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான், கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். 'கோச்சடையான்' படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
"'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டு விழா அல்ல. இப்படம் உருவாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் விழா.
இப்போ நான் நிறைய பேசுறத விட, இந்த படத்தோட வெற்றி விழாவில் நான் நிறையப் பேச போகிறேன். முதல்ல இந்த படம் இப்படி உருவாகும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்ப இஷ்டம். ரொம்ப பிடிக்கும். 150 படங்கள் நான் பண்ணியிருந்தால்கூட, ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்துக்கிட்டே இருந்தது. இனிமேல் எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை. எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாமே நீங்க கொடுத்திருக்கீங்க.
இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில் கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா' படம் தொடங்கினேன். அந்தப் படத்தோட கதையை நான் 20 வருஷமா எனக்குள்ள ஒடிட்டு இருந்தேன். அந்தப் படம் தொடங்கின நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சு அப்படிங்குறது உங்களுக்கே தெரியும்.
ஆஸ்பித்திரியில் இருந்து திரும்பினாலும், 'ராணா' கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியாம போச்சு. ஒரு நாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி 'ராணா'வுக்கு மேலே கே.எஸ்.ரவிகுமார் 'கோச்சடையான்' அப்படினு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்கனு சொன்னாங்க. இப்போ பண்ண முடியாதே, 2 வருஷமாவது ஆகுமே அப்படினு சொன்னேன். இல்ல. நீங்க முதல்ல கேளுங்க. அதை எப்படி பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. சரி கேட்கிறேனு கேட்டேன்.
'ராணா'வே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. 'ராணா'வை விட எனக்கு 'கோச்சடையான்' கதை ரொம்ப பிடிச்சது. நல்லாயிருக்கு ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கேட்டேன். நீங்க சரினு சொன்னீங்கன்னா ஒரு ஐடியா இருக்கு. 'சுல்தான்'னு ஒரு படம் ஏற்கனவே செளந்தர்யா பண்ணியிருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. எனக்கு நம்பிக்கை வேற இல்லை.
தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும், ரொம்ப பெருசா பண்ணனும் முடிவு பண்ணினேன். இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பேர்கிட்ட கேட்டேன், பேசினேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகுமேனு சொன்னாங்க. இல்ல. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு சொன்னாங்க.
உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். என்னம்மா... பெரிய பொறுப்பு இருக்குமே. பண்ண முடியுமானு கேட்டேன். நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான். இந்தப் படத்துக்கு பட்ட கஷ்டத்தை வாயால எல்லாம் சொல்ல முடியாது. இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்குன்னா அதற்கு உழைச்சவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு 100% நம்பிக்கை இருக்கு.
இசை வெளியீடு விழா பிரம்மாண்டமா பண்ணனும்னு சொன்னாங்க. நான் தான் வேண்டாம், வெற்றி விழா பிரம்மாண்டமா பண்ணலாம்னு சொல்லியிருக்கேன். செளந்தர்யா, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர் தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்றேன்.
இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். அதே நேரத்தில், குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு ஆகுற வரைக்கும் நல்ல பாத்துட்டு, அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து.
என் பொண்ணு செளந்தர்யா ரொம்ப கஷ்டப்பட்டுருக்கு. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துருச்சு. ரவிக்குமார் சார்.. நீங்க வாங்க.. இவரு ஆக்ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்" என்றார் ரஜினிகாந்த்.
இந்நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் 3டி-யிலும், ரஜினி ருத்ரதாண்டவம் ஆடிய காட்சிகளும் திரையிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT