Published : 19 Apr 2017 10:22 AM
Last Updated : 19 Apr 2017 10:22 AM
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இனிமேல் பணமின்றி படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரெய்லர்கள் வழங்குவது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் புதுமுடிவு எடுத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷால் தலைமையிலான 'நம்ம அணி' பெரும் வெற்றி பெற்றது. புதிய அணியினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருமான பெருக்குவதற்காக பல்வேறு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.
அதில் "அன்புள்ள திரைப்பட முதலாளிகளுக்கு நமது திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள், ட்ரெய்லர் மற்றும் கடிதம் எதுவும் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் இன்று முதல் இலவசமாக தர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மானம் காப்போம், வருமானம் பெருக்குவோம்" என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கம் அறிவுறித்திவுள்ளது.
இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகியிடம் பேசிய போது "சமீபகாலமாக எந்ததொரு படத்தின் தொலைக்காட்சி உரிமையும் விற்கவில்லை. மேலும், தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்து தயாரித்து, தொலைக்காட்சி உரிமையை வாங்க ஆளில்லை. ஆனால் இலவசமாக அப்படத்தின் பாடல் காட்சிகள், படக் காட்சிகள், ட்ரெய்லர் மட்டும் கொடுக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்?
மேலும், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் 30 நிமிடங்கள் மட்டும் தான் சினிமாவுக்கு என ஒதுக்குகிறார்கள். அவர்களால் எந்த ஒரு நன்மையும் இல்லை. ஆகவே, தற்போது எடுத்துள்ள முடிவில் தீர்மானமாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு குறித்து தொலைக்காட்சி நிறுவனங்களில் விசாரித்த போது, "எந்த நிறுவனம் தொலைக்காட்சி உரிமைப் பெறுகிறதோ அவர்களுக்கு மட்டும் அனைத்தையும் கொடுக்கவுள்ளார்கள். இது நல்ல முடிவு தான். ஆனால், இந்த முடிவால் சிறுபடங்கள் கடுமையாக பாதிக்கும்.
சிறுபடங்கள் வெளியீட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, அதன் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரெய்லரை 10 நாட்களுக்கு திரையிட்டு உதவுமாறு வேண்டுமானால் கொடுக்கலாம். முற்றிலுமாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவை சாத்தியப்படுத்துவது கடினம்.
ஏனென்றால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள், தயாரிப்பாளரின் கடிதத்தை வைத்துக் கொண்டு படத்தின் 30 நிமிடக் காட்சிகளைக் கூட திரையிடுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய முடிவுக்கு, சில தொலைக்காட்சி நிறுவனம் ஆதரவும் பல நிறுவனங்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT