Last Updated : 22 Jul, 2016 08:42 PM

 

Published : 22 Jul 2016 08:42 PM
Last Updated : 22 Jul 2016 08:42 PM

முதல் பார்வை: கபாலி - மகிழ்விக்கும் முயற்சி!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கபாலி' என்ற ஒற்றை வரி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மகிழ்ச்சியும், ஆச்சர்யமும், திகைப்பும் சொல்லித் தீராதது...சொல்லில் தீராதது.

அதே சமயம் ரஜினி நடிக்கும் 'கபாலி'யா? அல்லது ரஞ்சித் இயக்கும் 'கபாலி'யா? எதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். படத்தில் ரஜினியின் ராஜாங்கம் நடக்குமா? அல்லது ரஞ்சித்தின் எண்ணங்களை படம் பேசுமா என்ற தீரா கேள்வியுடன் 'கபாலி' பார்க்க விரும்பினோம்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டிக்கெட் கிடைக்க, அடித்துப் பிடித்து தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'கபாலி' கவர்ந்திழுத்ததா?

தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரு தனிமனிதன் 'கபாலி' கேங்ஸ்டராக வளர்ச்சி அடைகிறார். நல்லது செய்ய நினைக்கும் அந்த மக்கள் தலைவனை இன்னொரு கேங்ஸ்டர் கும்பல் அழிக்க நினைக்கிறது. இந்த கேங்ஸ்டர் ஆட்டத்தில் யார் என்ன ஆகிறார்கள்? 'கபாலி' குடும்பம் என்ன ஆகிறது? என்பது ரத்தம்... சத்தம் கலந்த மீதிக் கதை.

வழக்கமும் பழக்கமுமான ஒன் லைன் கதை தான். அதில் கொஞ்சம் எமோஷன், இனம், உரிமை என்று அரசியல் சாயம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ரஜினியின் இன்ட்ரோவில் வரும் சண்டைக் காட்சி தெறிக்கிறது. ரஜினியின் என்ட்ரி பாடல் என்றாலே துள்ளலும், உற்சாகமும் கொண்டாட்டமுமாய் இருக்கும். அந்த எனர்ஜி கபாலி படத்தில் இல்லாததாலேயே இது வழக்கமான ரஜினி படம் இல்லை என உணர வைத்தது.

படம் முழுக்க ரஜினி ஒற்றை ஆளுமையாக ஸ்கோர் செய்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, நுணுக்கமான தீர்க்கமான பார்வை, சில நொடிகளுக்குள் முகமொழியை மாற்றுவது, ஏக்கமும் தவிப்புமாய் மனைவி குறித்து யோசிப்பது, பிரிவின் துயரில் கலங்குவது என நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். ரஜினியின் தோற்றமும், உடையும் கூடுதல் வசீகரத்தை வழங்கியிருக்கிறது.

ராதிகா ஆப்தே கொஞ்சூண்டு இடத்திலும் நிறைவாய் நடித்திருக்கிறார். 'உன் கருப்பு கலரை என் உடம்பு முழுக்க பூசிக்கணும்' என்று கண்கள் நிறைய பேசும் ராதிகா, பாண்டி போர்ஷனில் கண்கள் கசிய பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ரஜினியின் கேங்ஸ்டர் பிம்பத்தை தனக்குள் கடத்திக் கொண்டதாலோ என்னவோ படம் முழுக்க தினேஷ் பதற்றமும், பரபரப்புமாய் இருக்கிறார். ரஜினி பேசும்போது அதற்கு தினேஷ் காட்டும் ரியாக்‌ஷன்களில் தினேஷின் ஒவ்வொரு அங்கமும் தனியாய் நடித்திருக்கிறது. அதனாலேயே வெடித்து சிரிக்கிறது தியேட்டர்.

தன்ஷிகா, ரித்விகா, ஜான் விஜய், கலையரசன், கிஷோர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

வில்லன் கதாபாத்திரத்துக்கு உரிய கம்பீரமும், பலமும் வின்ஸ்டன் சௌவுக்கு இல்லாதது பெருங்குறை.

முரளியின் கேமரா மலேசியாவின் பளபளக்கும் நகரங்கள், நிழல் உலகம் என எல்லா ஆங்கிளிலும் பளிச் ஸ்கோர் செய்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசை படத்துக்கு பெரும் பலம். நெருப்புடா பாடலில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார். மாயநதி பாடலில் மெல்லிசையில் சோகத்தைப் பாய்ச்சுகிறார்.

''காந்தி சட்டையை கழட்டுனதுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காரணம் இருக்கு. சும்மா இல்லை.'', ''நான் செத்து தான் போயிருந்தேன். நீ என்னை வந்து பார்க்கிற வரை'' போன்ற சில இடங்களில் மட்டுமே வசனங்கள் கூர்மையாக உள்ளன.

முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

படத்தின் ஒட்டு மொத்த உயிர்ப்பை எமோஷன் போர்ஷனில் மட்டுமே வைத்து, அதை ரசிகர்களுக்கும் கடத்திய விதத்தில் ரஞ்சித் ரசிக்க வைக்கிறார்.

சிகரெட் பிடிக்காத, அதிர அதிர பன்ச் டயலாக் பேசாத, டூயட் இல்லாத, துதிபாடிகள் இல்லாத ரஜினி படம் என்ற விதத்தில் வழக்கமான ரஜினி படத்துகுரிய முத்திரைகளை தகர்த்த ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

ஆனால், இது மட்டுமே போதுமா ரஞ்சித்? திக் திக் என்று இருக்க வேண்டிய திரைக்கதை பயணத்தில் சாதாரண ரெய்டு மட்டும் அடித்திருக்கிறீர்களே? அவ்வளவும் சமரசம் தானா ரஞ்சித்? காட்சிப்படுத்த வேண்டிய சங்கதிகளை வசனத்திலேயே சொல்லிவிட்டது ஏன்?

ரஞ்சித் படம் என்றாலே டீட்டெய்லிங் இருக்கும். அது இந்த படத்தில் எங்கே என்று தேட வேண்டிய சூழல் வந்துவிட்டது. ரஞ்சித் கொடுத்த ட்ரீட்மென்ட்டும் ரசிகர்களை எந்த விதத்திலும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புதிதும், புத்திசாலித்தனமும் இல்லாத திரைக்கதையால் இரண்டாம் பாதி சுணங்கி நிற்கிறது.

தொழிலாளர்கள் பிரச்சினையை அசலாக அழுத்தமாக பதிவு செய்யத் தவறிவிட்டார். கேங்ஸ்டர் ரஜினியை கட்டமைத்ததில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. ஒரு பள்ளிக்கூடம் நடத்தும் ரஜினி எப்போது எப்படி எங்கே கேங்ஸ்டராக உருவெடுத்தார்? எதிரிக் கூட்டத்தை அடிக்க ஒவ்வொரு முறையும் ரஜினியே கிளம்பி வருவாரா? அவரே அடித்து துவம்சம் செய்வாரா? ரத்தம் தெறிக்க, துப்பாக்கி வெடிக்க பழிவாங்குவாரா? அங்கே போலீஸ் என்ன செய்கிறது? என்று கேள்விகளின் பட்டியல் நீள்கிறது.

'கபாலி' முழுக்க ரஞ்சித் படமாகவும் இல்லை. ரஜினி படமாகவும் இல்லை. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ரஞ்சித் படம் என நாடி வந்தவர்களுக்கு இந்த முயற்சி மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்பது சந்தேகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x