Published : 27 Jun 2017 10:04 AM
Last Updated : 27 Jun 2017 10:04 AM
கவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்தநாளை கவி விழாவாக சென்னை தி.நகர் வாணி மஹாலில் அவரது குடும்பத்தினர் நடத்தினர். விழாவில் இருந்து சில துளிகள்:
கண்ணதாசனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் பிறந்தது ஒரே நாளில்தான் என்பதால் இசையையும், தமிழையும் போற்றும் வகையில் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர். ‘ஒய்.ஜி. மெலடி மேக்கர்ஸ்’ குழுவினர் எம்எஸ்வி - கண்ணதாசன் இணையில் உருவான பாடல்களைப் பாடினர். சைந் தவி, கோவை முரளி, ஹாரி, பாலா, கல்பனா, ஜானகி, கலைமகன் உள் ளிட்ட பலர் பார்வையாளர்களை பழைய நினைவுகளில் மூழ்க வைத்தனர்.
வெறுமே பாடல்களை மட்டுமே பாடிக்கொண்டு போகாமல், அந்தப் பாடலையொட்டி அந்தக் காலத்தில் நடந்த சுவையான சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார் ஒய்.ஜி.மகேந்திரா. ‘யார் அந்த நிலவு?’ பாடலின் பின்னணி இசையை அவர் விசில் மூலமே வழங்கியதும், கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி பாடிய கச்சேரி மேடைக்கு அரிதான ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ பாடல் இடம்பெற்றதும், ‘பார்த்தேன் சிரித்தேன்’ பாடலை கீபோர்டு பயன்படுத்தாமல் வீணையின் நாதத்தை (உபயம்: ‘தி இந்து’ வி.பாலசுப்ரமணியன்) அச்சு அசலாக வழங்கியதும் இசை நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியது.
கண்ணதாசன் எழுத்துரு
கண்ணதாசனின் கையெழுத்தை அடியொட்டி ஓவியர் ராணா வடிவமைத்த ‘கண்ணதாசன் எழுத்துருவை’ (Fonts) வெளியிட்டுப் பேசினார் இளையராஜா.
‘‘கண்ணதாசனுக்கு சிலை வடிக்க எம்எஸ்வி அண்ணாதான் முன்முயற்சி எடுத்தார். நான், கே.வி.மகாதேவன் மாமா, எம்எஸ்வி மூவரும் மூன்று இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன்மூலம் கிடைத்த நிதியில் உருவானதுதான், இந்தத் தெருவில் கம்பீரமாக நிற்கும் கண்ணதாசன் சிலை. எம்எஸ்வி அண்ணா கண்ணதாசன் மீது கொண்டிருந்த அன்புக்கான சாட்சி அந்தச் சிலை!
60-களில் என் அண்ணன் பாவலர் கம்யூனிச மேடைகளில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது நேரு மறைவையொட்டி கண்ணதாசன் எழுதிய விருத்தத்தை ஒரு பத்திரிகையில் வெளியிட்டனர். இதை சென்னை சீரணி அரங்கத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியதாக செய்தி வந்தது. அவர் எந்த மெட்டில் பாடியிருப்பார் என்று நான் ஆர்மோனியம் வைத்துக்கொண்டு வீட்டில் பாடிப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். எதிர் அறையில் இருந்த பாவலர் அண்ணன் இதைக் கேட்டிருக்கிறார்.
நேரு மறைவு காரணமாக, வேதாரண்யத்தில் நடக்கவிருந்த கச்சேரிகளை ரத்து செய்துவிடலாம் என்று சிலர் கூற, என் அண்ணனோ, ‘‘நேருவுக்கான நினைவு அஞ்சலியாக நடத்தலாமே’’ என்று கூறினார். நான் வீட்டில் பயிற்சி செய்த கண்ணதாசனின் விருத்தப் பாடலை அந்த வேதாரண்யம் கச்சேரியில் பாடச் சொன்னார் என் அண்ணன். ஹார்மோனி யம் வாசித்தபடி, ‘சீரிய நெற்றி எங்கே, சிவந்த நல்இதழ்கள் எங்கே, கூரிய விழிகள் எங்கே, குறுநகை போனது எங்கே’ என்று தொடங்கும் விருத் தத்தை பாடினேன். ஆக, என் இசை வாழ்க்கையைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்தான்’’ என்றார் இளையராஜா நெகிழ்ச்சியுடன்.
விழாவுக்கு நல்லி குப்புசாமி தலைமை வகித்தார். காந்தி கண்ணதாசன் வரவேற்புரை ஆற்றினார். அண்ணாதுரை கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் சிவகுமார், கவிஞர் பழநிபாரதி, சுப்பு பஞ்சு அருணாசலம் ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT