Published : 20 Aug 2014 07:18 PM
Last Updated : 20 Aug 2014 07:18 PM

கத்தியை எதிர்ப்பது சரியா?- சீமான் சரமாரி கேள்வி

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கான எதிர்ப்பு தொடர்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

" 'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. லைக்கா நிறுவனத்தை எதிர்க்கிறார்களா அல்லது படத்தை எதிர்க்கிறார்களா? டெரரிஸ்ட், மல்லி, இனம் ஆகிய மூன்று படங்களை எடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். மூன்றையும் நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச் சிறந்த இயக்குநரோடு ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டே இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. சந்தோஷ் சிவன் என்ற ஒளிப்பதிவு கலைஞனோடு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவரது தனிப்பட்ட கருத்தை நான் எதிரிக்கிறேன்.

'அஞ்சான்' படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றி இருக்கிறார். 'இனம்' படத்தை எடுத்து விட்டு எப்படி நீ பணியாற்றலாம் என்று நான் போராடவில்லை. லைக்கா நிறுவனர், ராஜபக்சேவோடு வியாபார தொடர்பு வைத்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார் என்பதும் குற்றச்சாட்டு.

இந்தியாவில் இருந்து யாரும் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்று களத்தில் இறங்கி போராடினோம். அதே மாதிரி லைக்கா நிறுவனம் இருக்கும் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் எத்தனை?

'கத்தி' அப்படினு ஒரு படம் எடுப்பார்... அப்போ போராட்டம் நடத்தலாம் என்று காத்திருந்தீர்களா? அதுக்கு உங்களுக்கு சீமான் கிடைத்தானா? கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி இருக்கிறேன். எத்தனை பேர் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். ஏன் 'கத்தி' எதிராக சீமான் போராடவில்லை என்பவர்கள், நான் போராடிய போது எங்கு சென்றார்கள்?

நான் உங்களது அடிமை மாதிரியும், நீங்கள் வைத்த வேலை ஆள் மாதிரியும் இருக்கிறது. அதற்கான ஆள் நான் கிடையாது. எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து, முடிவெடுக்க தெரியாதவர்களா இவ்வளவு பெரிய பேரியக்கத்தை கட்டி காத்து வருகிறோம்.

தேர்தல் நேரத்தில் அவ்வளவு கூட்டங்களில் பேசினனே... அப்போது எல்லாம் எங்கே சென்றார்கள் இவர்கள். இந்தப் படத்தில் நடித்த விஜய்-க்கும், இயக்கிய முருகதாஸுக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஏற்கெனவே கருணா என்பவர் 'வில்லு' போன்ற படங்கள் எடுத்தவர் என்பதால் போய் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். கருணா என்பவர் பணத்துக்காக லைக்காவை இணைத்துக் கொண்டார்.

முதலிலே என்னிடம் இந்தத் தகவலைச் சொல்லி இருந்தார்கள் என்றால், 'விஜய் நீங்க நடிக்காதீங்க, முருகதாஸ் இயக்காதீங்க, ஐயங்கரன் நீங்க லைக்காவில் இருந்து வெளியே வந்து படம் பண்ணுங்க' என்று சொல்லி இருந்தால் விட்டுவிட்டு போயிருப்பார்கள். விஜய்யும், முருகதாஸூம் தயாரிப்பாளர்கள் இல்லாமலா லைக்காவில் படம் பண்ணுக்கிறார்கள். தொடக்கத்தில் விட்டுவிட்டு, பாதி படம் தாண்டியவுடன் என்ன போராட்டம். லைக்காவை எதிர்க்கிறீர்களா, விஜய்யை எதிர்க்கிறீர்களா, படத்தை எதிர்க்கிறீர்களா அது ரொம்ப முக்கியம். 'கத்தி' படத்தை லைக்கா எடுக்கவில்லை என்றால் என்ன பண்ணி இருப்பீர்கள். 'சண்டியர்' படம் மாதிரி ஆகியிருக்கும்.

புதுமுகங்கள் நடித்திருந்தால் எதிர்த்து போராடி இருப்பீர்களா? பதில் சொல்லுங்கள். அன்றைக்கு கமல்ஹாசன் நடிக்கும் போது 'சண்டியர்' தலைப்பு பெரிதாக இருந்தது. புதுமுகங்கள் நடிக்கும் போது பெரிதாக தெரியவில்லை.

லைக்கா நிறுவனத்தை எதிர்த்து போராடி, கம்பெனியை முற்றுகையிடுங்கள், நானும் களத்தில் இறங்கி போராடுகிறேன்.

எல்லாருக்கும் பிரச்சினை பண்ண தெரியும். பிரச்சினையை சரி பண்ணத் தெரிந்தவர்கள் நாங்கள். பிரச்சினையே பண்ணிக்கிட்டு இருக்கிற ஆட்கள் நாங்கள் அல்ல. ராஜபக்சே காசு கொடுத்து தமிழ் படம் எடுக்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா? எங்களை மீறி தவறான கருத்துள்ள படங்களை எடுத்து வெளியிட முடியுமா? 'கத்தி' அருமையான படமாக வரப்போகிறது. அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.

ஒரு வில்லன் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டுகிறான். வில்லனை வீழ்த்த வேண்டும் சரி தான். ஆனால் குழந்தையை காப்பாற்ற வேண்டும் அல்லவா? சேர்த்து கொல்வதுதான் தர்மமா. இதான் போராட்ட வடிவமா... முறையா..?

'கத்தி' படத்திற்கு போராட்ட களம் இங்கில்லை. லண்டனில் இருக்கிறது. இந்தப் படம் முடிந்தவுடன், நீ படம் எடுத்தது போதும் கிளம்பு என்று சொன்னால் போய்விட போகிறார்கள்?" என்றார் சீமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x