Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சிவாஜி கணேசன் நடித்த ‘பாசமலர்’, ‘கர்ணன்’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பழைய மலையாளப் படங்களும் டிஜிட்டலாக மாற்றப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் 60 நாடுகளைச் சேர்ந்த 212 படங்கள் கலந்துகொண்டுள்ளன. இதில் இந்திய சினிமா நூற்றாண்டை நினைவூட்டும் வகையில் ‘கட்ணன்’, ‘பாசமலர்’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. இப்படங்கள் உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியூர் ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.. பின்னர் இந்திய சினிமா நூற்றாண்டை ஒட்டி நடைபெற்ற கருத்தரங்கில் இப்படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பங்களுக்கு மாற்றிய அனுபவத்தை பிரசாத் லேப் நிறுவனத்தினர் பகிர்ந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பேசிய சினிமா ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, “ இந்திய சினிமாவை ஆவணப்படுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் சினிமாவுக்கான அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டியது அவசியம்” எனக் கேட்டுக்கொண்டார். பத்திரிகையாளர் அருணா வாசுதேவ், “இன்றைக்கு உள்ள சினிமாவின் வளர்ச்சிக்கு நம்முடைய பழைய சினிமாக்களைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம்” என்றார்.
தமிழ் சினிமா ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன், சினிமா வரலாற்றில் அச்சுப் பிரதிகளில் பங்களிப்பு பற்றிப் பேசினார்.
இந்தக் கருத்தரங்கிற்கு தேசிய சினிமா ஆவணக் காப்பகத்தின் நிறுவனர் பி.கே.நாயர் தலைமை தாங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT