Published : 17 Apr 2015 07:55 PM
Last Updated : 17 Apr 2015 07:55 PM
'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மீண்டும் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் கூட்டணி, 20 வருடங்களுக்கு மேல் இசை வெள்ளம் பாய்ச்சும் ஏ.ஆர்.ரஹ்மான் என படத்தின் காம்போ ட்ரெய்லரிலேயே காதல் பல்ஸை ஏற்றியது.
'ஓ காதல் கண்மணி' திரைப்படம் வசப்படுத்தியதா?
திட்டமிட்டு இணைந்து வாழும் ஜோடிகள். தெகிட்டாமல் போகும் 'அந்த' வாழ்க்கை. மண வாழ்க்கையின் வல்லமையைச் சொல்லித் தரும் நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு. புது வாழ்க்கையைத் தொடங்கும் 'முடிவு'. இவற்றைக் காட்சிகளால் டபுள் ஓகே சொல்ல வைக்கிறது திரைக்கதை.
'அலைபாயுதே' திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகின்றன. அதற்குப் பிறகு முழுமையான காதல் படம் தந்து பேக் டு தி ஃபார்ம் ஆகி சின்ன சிரிப்போடு கை குலுக்கி இருக்கிறார் மணிரத்னம்.
டைட்டில் கார்டில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் பெயரைப் பார்க்கும்போது தியேட்டரில் அவ்வளவு விசில் பறக்கிறது. சிரிப்பும் சந்தோஷமுமாய் கலந்துகட்டி கை தட்டுகிறார்கள்.
ரயில்வே ஸ்டேஷனில் துல்கர் சல்மான் பதறியபடி நித்யா மேனனைப் பார்க்கிறார். நித்யா மேனன் ஹை ஹீல்ஸ் செருப்புடன் ஃபிளாட்பார்மில் இருந்து ரயில் வரும்நேரத்தில் விழுந்துவிடுவதைப் போல காட்டும்போது, துல்கர் பரபரப்பாகிறார்.
நல்லவேளை, நித்யா மேனன் டிராக்கில் விழவில்லை. இந்த மனவோட்டத்தில் ரசிகர்கள் அமைதியாய் படம் பார்க்க ஆரம்பித்தனர்.
சர்ச்சில் ஒரு திருமணம் நடக்கிறது. நித்யா மேனன் துல்கரைப் பார்த்து என்னை ஞாபகம் இருக்கா என கேட்கிறார். இருக்கு என்று சைகையில் சொல்கிறார். ரசிகர்கள் புன்னகையோடு படம் பார்க்கின்றனர்.
இங்கிருந்து படம் முழுக்க நித்யா மேனன் ஆட்சிதான். குண்டு கன்னங்களில், அழகான கண்களில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் செல்லமாய் சிணுங்கி ஃபெர்பாமன்ஸில் சிக்ஸர் அடிக்கிறார். வேண்டாம் என்பதைக் கூட சிரித்துக்கொண்டே சொல்லும்போது நித்யா மேனன் தனியாய் ஈர்க்கிறார்.
துள்ளலான துல்கர் சல்மானுக்கு ஓரளவே கைதட்டல் கிட்டியது. நித்யா மேனனுக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் படம் முழுக்கக் கைதட்டல்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. 'மௌனராகம்' கார்த்தி, 'இதயத்தைத் திருடாதே' அஞ்சலியின் அப்டேட் வெர்ஷனாக நித்யா மேனன் ஜொலித்தார்.
பிரகாஷ்ராஜ் அறிமுகக் காட்சியில் மட்டும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர். அதற்குப் பிறகு மனிதர் பின்னி எடுக்கிறார். பவானி அப்படிதான். காலையில கணபதின்னு கூப்பிடுவாங்க பாரு. அப்போ எல்லாம் சரியாகிடும் என ஜஸ்ட் லைக் தட்... போகிற போக்கில் சொல்லி அன்பை புரியவைக்கிறார்.
பிரகாஷ்ராஜ் மனைவியாக நடித்திருக்கும் லீலா சாம்சன் கவுன்டர் டயலாக் கொடுத்து அசத்தினார். கணபதி நீங்க ஓல்ட் ஃபேஷன். கார்ல போகும் போது சிக்னல்ல இண்டிகேட்டர் போட்ட பிறகும், கை காட்டிட்டு இருப்பீங்க என்ற கமென்டுக்கு தியேட்டரே வெடித்துச் சிரிக்கிறது.
சில வசனங்கள் கூட மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கின்றன.
"ரெண்டு பேரும் ஒரே அறையிலா தங்குறதா? இல்லை. ஒரே அறைதான் இருக்கு. நான் பக்கத்துல இருக்கும்போது நல்ல பையனா நடந்துப்பியா? முடியாதுதான்."
"நீ பக்கத்துல இருக்கும்போது நான் நல்ல பொண்ணா நடந்துக்க முடியுமா? முடியும்."
"நல்ல படத்துக்கு மொக்கை கிளைமாக்ஸ் மாதிரி இருக்கு நீ பேசுறது."
"தப்பு கண்டிபிடிச்சேன்னு சொல்லலை. தப்பு கண்டுபிடிக்காதேன்னு சொல்றேன்."
"ஆம்பளப் பையனை கெஞ்ச வைக்காதே."
மணிரத்னம் படத்தில் எல்லோரும் கொஞ்சம் கம்மியாய் பேசுவார்கள். இதில் ரொம்ப கம்மியாய் பேசவில்லை. ஆனால், வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன் என நித்யா மேனன் அம்மா பேசும் போது ரசிகர்கள்... உவ்வே.... மணிரத்னம் படத்தில் இப்படி ஒரு வசனமா என ஒவ்வாமையை வெளிப்படுத்தினர்.
துல்கர் - நித்யா மேனன் கெமிஸ்ட்ரி செம. ரசிகர்கள் உச் கொட்டும் அளவுக்கு நெருக்கமும், கிறக்கமும், கெஞ்சலும், கொஞ்சலுமாய் நடித்திருக்கிறார்கள்.
இடைவேளையில் எந்த ட்விஸ்ட்டும் இல்லை. ஆனால், சின்ன சிரிப்போடு கடக்க முடிகிறது.
கேன்டீனில் ரசிகர்கள் பாப்கார்ன் கொறித்தபடி பேசியபோது காதைக் கொடுத்தோம்.
''என்னப்பா கதையே இல்லை. இதுக்குப் போய் கூட்டிட்டு வந்த'' என ஒரு நண்பர் அலுத்துக்கொண்டார்.
''கதையா முக்கியம். ஜாலியா போச்சுல்ல. லவ் ஸ்டோரியில என்ன மச்சான் புதுசா எதிர்பார்க்கிற?'' என்று பதில் அளித்தார்.
''நித்யா மேனன் சான்ஸே இல்லைப்பா...'' என காதலியிடம் சொன்னவர் செம பல்பு வாங்கினார்.
''பழகிய காதல் காட்சிகள் இருந்தாலும் பார்க்க நல்லா இருக்கு'' என்றார் ஒருவர்.
மனைவியிடம் மனஸ்தாபத்தில் தனியாய் படம் பார்க்க வந்தவர் போல. படம் பார்த்த எஃபக்டில் போனில், காதலாகி கசிந்துருகிக் கொண்டிருந்தார்.
''யூத் பல்ஸை அப்படியே பதிவு பண்ணியிருக்கார் பாரு. அங்கே நிக்குறார் மணி சார்'' என்று சிலாகித்துக் கொண்டிருந்தார் ஒரு மணி ஃபேன்.
இடைவேளைக்குப் பிறகு படத்தில் பெரிய மாற்றம் இல்லை. துல்கர் அண்ணன் குடும்பம் திடீரென்று மும்பைக்கு விசிட் அடிக்கிறது. நித்யா மேனன் அம்மாவும் விசிட் அடிக்க இருவருக்கும் சின்ன மனஸ்தாபம்.
அதற்குப் பிறகு கொஞ்சம் நீளமாக இழுத்து கிளைமாக்ஸ். எந்த சேதாரமும் இல்லாமல் முடித்திருக்கிறார்கள்.
ரம்யா, வினோதினி, கனிகா, பேபி ரக்ஷனா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த திருப்தி என்ற சிரிப்போடு ஒரு ஜோடி கடந்து போனது.
காதல் புதுசு இல்லை. காட்சிகள் புதுசு இல்லை. வசனங்கள் கூட ரொம்ப புதுசு இல்லை. காதலர்களுக்கான உருக்க நெருக்கம் மட்டும் இருக்கு. அப்புறம் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?
காதலர்களின் எக்ஸ்பிரஷன்களை மட்டும் பாருங்கள். அந்த எனர்ஜியும், ரொமான்ஸூம் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். மணிரத்னம் எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களுக்கும் காதலைக் கடத்தி இருக்கிறார். 'காதல் கடத்துநர்'னு இனி மணி சாரை தாராளமாக அழைக்கலாம்.
படம் முடிந்து வெளியே வந்ததும் ஒருவர் போனில் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தார்.
"செல்லம்... நாளைக்கு ஓ.கே கண்மணி டிக்கெட் புக் பண்ணிட்டேன்... இந்தப் படம் பார்த்தா நமக்குள்ளே இனிமே சண்டையே வராது பாரேன்" என்றார் ஒருவர். எதிர்முனையில் என்ன ரியாக்ஷன் இருந்திருக்கும்?
சுருக்கமாகச் சொல்லணும்னா, காதல், காட்சி, வசனம், மேக்கிங் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்குள் காதலைப் பார்க்க வேண்டுமா?
ஓ.கே கண்மணி பார்க்கலாம்.
இல்லைப்பா. பத்து நாள் பட்டினியா இருக்கேன். ஒரு வேளை பிரியாணி கொடுத்து சமாதானம் பண்ணாதீங்க என்று சொல்பவரா நீங்கள்? ஸாரி பாஸ். உங்களுக்காக மட்டுமே அந்த மவுஸ் பிரச்னை இருக்கு. அந்தப் பக்கம் போய் விளையாடுங்க பாஸ்.
படத்தைப் பார்த்து முடித்தபின் நமக்குத் தோன்றியது இதுதான்...
'ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்துட்டு, 'அந்த அறிக்கையை அப்படியே டைப் பண்ணிக்கலாம்... தமிழ்க் கலாச்சாரம், இந்தியப் பண்பாடு, பாரதக் குடும்ப முறை' என்று தங்கள் ஆபிஸுக்குப் போன் அடிக்கும் காவலர்கள், இரண்டாம் பாதி முடித்த பிறகு அப்படியே யூ டர்ன் அடித்து, "படத்துக்கு யூ சர்டிபிகெட் கொடுக்கச் சொல்லி போராட்டத்தை மாத்திப்போம்" என்று கட்டளை இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT