Published : 01 Mar 2017 03:56 PM
Last Updated : 01 Mar 2017 03:56 PM
பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து, வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை முன்வைத்து காட்டமாக பதிவிட்டிருந்தார். இப்பதிவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்கள் தினத்தன்று கையெழுத்து இயக்கம் ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பேசியது "அண்மையில் நான் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தேன். ஒரு நடிகையாக அல்ல.. ஒரு பெண்ணாக அதைப் பதிந்திருந்தேன். சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அதற்குக் காரணம். இப்போதுகூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சமூக மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றால் இனி எப்போதுமே அதை எட்ட முடியாது. வருங்கால சந்ததிகள் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
என்னுடைய பங்களிப்பாக ஒரு பிரச்சார உத்தியை முன்வைத்திருக்கிறேன். #saveshakthi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறேன். இதை ஒரு கையெழுத்து இயக்கமாக செயல்படுத்தி மாநில அரசுக்கு மனுவாக கொடுக்கவுள்ளேன். இந்த பிரச்சாரத்தின் இரு அம்சங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.
1) ஒவ்வொரு தாலுகாவிலும் மகளிர் நீதிமன்றம் துவங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் சூழல் உருவாகும்.
2) பாலியல் வன்முறை வழக்குகளில் துரிதமாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதாவது வழக்கு பதியப்பட்ட 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம், பாதிக்கப்பட்ட பெண் தன் வாழ்வில் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து செல்ல முடியும்.
இதனை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். அதில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டுகிறோம்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவே இருக்கிறது. அதேவேளையில், இங்கு பாலியல் வன்முறைகள் ஒன்றிரண்டு மட்டுமே நடக்கின்றன என்பது பெருமைப்படக் கூடிய விஷயமல்ல. அத்தகைய நிகழ்வு ஒன்றுகூட நடைபெறவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும்.
பாலியல் அத்துமீறல்களுக்கான தண்டனை விவரங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் பலரிடம் கேட்டு ஆலோசித்தேன். இங்கு சட்டங்கள் போதுமானதகாவே இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் நிலவுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் அதுகுறித்து பேசக் கூடாது என்ற பார்வையை சமூகம் கட்டமைத்துள்ளது. பெண்கள் அப்படி இருக்கக் கூடாது. பெண் கொடுமைகளை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர்ந்து பெண்கள் ஒரு போகப் பொருளாகவே பார்க்கப்படுவர்.
இன்று நான் இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பதற்குக் காரணம் ஒரு பிரபலர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்காகவும் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். அதேவேளையில், எண்ணற்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேசுவதற்கு அச்சப்பட்டு முடங்கிப்போய் இருக்கின்றனர். அவர்களைச் சுற்றியிருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.
இருந்தாலும், நான் சார்ந்த சினிமா துறைக்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்காகத் தான் பெஃப்சியிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.
பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும். அதில் நடிகைகள், நடன இயக்குநர்கள், துணை நடிகைகள் என யார் வேண்டுமானாலும் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதி பெறலாம். ஆனால், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் சினிமா துறையைச் சேர்ந்து யாரும் இருக்கக் கூடாது. ஓய்வு பெற்ற நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி அல்லது கல்வியாளர் என யாராவது அந்தக் குழுவின் தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அப்போதுதான், நீதி கிடைக்கும். நீதியை நிலைநாட்ட முடியும். அப்படிப்பட்டவர்களே அந்த அமைப்பின் தலைமையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் எண்ணிலடங்காதவை. இச்சமூகத்தில் ஆண்கள் எல்லாம் மிருகங்களாக மாறிவிட்டார்களோ என்று கடுமையாக எண்ணத் தோன்றுகிறது.
இப்போதே குரல் கொடுக்காவிட்டால், இனி எதிர்காலத்தில் நம் பெண் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் பலாத்கார கொடுமைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பெண்களை மதிக்க வேண்டும் என்ற பாடத்தை குடும்பத்திலிருந்தே கற்பிக்கத் தொடங்க வேண்டும். ஒரு பெண் எத்தகைய ஆடை அணிய வேண்டும் என்பதை கற்றுத்தருவதைக் காட்டிலும் ஒரு ஆண்மகன் தனது சக மனுஷியை எப்படி மதித்து நடக்க வேண்டும் என கற்றுக் கொடுங்கள்.
ஆண் பிள்ளைய தலையில் வைத்துக் கொண்டாடாதீர்கள். பாலின சமத்துவத்தை வீட்டில் இருந்தே போதியுங்கள்" என்று தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT