Published : 05 Oct 2013 11:48 AM
Last Updated : 05 Oct 2013 11:48 AM
கண் முன்னே மகளின் காதல் முடிந்துபோனதில் இதயம் நொறுங்கி ‘ முதல் ஹார்ட் அட்டாக்’கை எதிர்கொள்ளும் உயர் தட்டு அப்பா. ஊருக்காக மகளின் காதலை எதிர்த்துவிட்டு, இரவோடு இரவாக பை நிறையப் பணம் கொடுத்துக் காதலனோடு மகளை அனுப்பிவைக்கும் முறுக்கு மீசை அப்பா. மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விதான் மாணவர்களின் எதிர்காலம் என்று நம்பி, கடைசியில் தனது மாணவனின் தனித்திறமைக்கு மண்டியிடும் பேராசிரியர்...
வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகிப் பிறகு நாயகனாகப் பரிணமித்த சத்யராஜின் தற்போதைய மென்மையான திரை முகங்கள்தான் இவை. ‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் சத்தியாராஜின் குணசித்திரம் பார்த்து, நம்ம அப்பாவும் இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஏங்காத இளம் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
பசுமை போர்த்திய கோவையில், தாவரவியல் பட்டதாரியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எம்.ஜிஆரின் தீவிர ரசிகராகச் சுற்றிக்கொண்டிருந்தார் ரங்கராஜ். கோவையை அடுத்த கோபிச்செட்டிப்ப்பாளைத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பு அவரைச் சுண்டி இழுத்துவிட்டது. பிறகு சென்னை வந்து, கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இணைந்தார். போதிய நாடக அனுபவங்கள் கிடைக்கும் முன்பே, சினிமா அரவணைத்துக்கொள்ள, ரங்கராஜ் சத்தியராஜ் ஆனார்.
1978இல் ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரை, ரசிகர்கள் சபிக்கும் அளவுக்குத் தமிழ் சினிமா வில்லன் கதாபாத்திரங்களில் வலிக்க வலிக்க முத்திரை குத்தியது. இவரது கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் ‘24 மணிநேரம்’ படத்தின் மூலம் இவரை திகிலான வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே?” என்று சத்தியராஜ் பேசிய வசனமும் அதைப் பேசிய விதமும், அவரது அடையாளமாகவே மாறிவிட்டன.
நக்கலும் பகடியும் மிக்க வில்லன்னாக வலம் வந்த சத்யராஜை அதே மணிவண்ணன் ‘முதல் வசந்தம்’ படத்தில் ‘குங்குமப் பொட்டு’ கவுண்டராக ஆக்கி, குணசித்திர வில்னனாக மாற்றினார். சத்தியராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் படத்தை.
“நடிகர் சத்தியராஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இல்லையென்றால் சத்தியராஜ் இல்லை. அவர் என்னை நடிகனாக மட்டும் ஆக்கவில்லை. வாசகனாகவும் மாற்றினார். சே குவேராவையும், ஹோசிமினையும் படிக்க வைத்தார். என்னை வரலாற்று மாணவன் ஆக்கினார்” என்று நெகிழும் சத்தியராஜுக்கு மணிவண்ணனின் இழப்பு பெரிய அடி. மணிவண்ணனும் சத்தியராஜும் கூட்டணி அமைத்த சுமார் 25 படங்கள், அவர்களுக்கேன்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கின. இவர்களது கூட்டணியில் உருவான ‘அமைதிப் படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் செய்தது. வால்டர் வெற்றிவேல், மக்கள் என்பக்கம், நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை வசூல் நாயகனாகவும் மாற்றின.
ஒரு கட்டத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பு பாணியிலிருந்து விடுபட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’ ஆகியவை சத்தியராஜின் நக்கல் பிம்பத்தைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கிப்போட்டன. “ என்னை கதாபாத்திரமாக மட்டுமே பார்த்து ஏ.எல். விஜய், பொன்.ராம், அட்லீ மாதிரியான இளம் இயக்குனர்கள் நடிக்க கூப்பிடறாங்க. ராஜாராணிக்குப் பிறகு மகளோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மாலுக்கு ஷாப்பிங் போனேன். பெண் பிள்ளைகள் ஒடிவந்து கையப் பிடிச்சுக்கிட்டு உருகுறாங்க. இந்த மாதிரியான ஒரு நெகிழ்ச்சி புதுசா இருக்கு” என்று சிலிர்க்கும் சத்யராஜ், “நிஜத்திலும் நான் நல்ல அப்பாதான்” என்று தன்க்கே உரிய முத்திரையுடன் முடிக்கிறார். தன் திரைப் பயணத்தை இதற்கு முன்பு மடைமாற்றிய மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று இயக்குநர் ஷங்கர் கேட்டபோது அவர் என் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்டதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தன் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாத சுதந்திரக் கலைஞர் சத்யராஜ். ஆனால் அதே ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அப்பாவாக நடித்து வித்தியாசமான வேடங்களில் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் காட்டினார். அதையடுத்து, முன்னணி நடிகைகளின் பாசமுள்ள அப்பாவாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். தீபிகா படுகோனே, ஸ்ரீவித்யா, நயன்தாரா என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது.
சத்யராஜ் தற்போது நடித்துவரும் படங்கள் ஹிட் ஆவதில், அப்பா கதாபாத்திரம் என்றால் சத்யராஜ் என்ற சென்டிமெண்ட் உருவாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற சென்டிமென்ட்களில் நம்பிக்கையில்லாத பெரியாரின் தொண்டரான சத்யராஜ் இதைப் பற்றி என்ன நினைப்பார்? ‘ராஜா ராணி’யில் ஒரு இடத்தில் அப்பா சத்யராஜ் சொல்வதுபோல சென்டிமென்ட் எல்லாம் அவருக்கு “செட் ஆகாது”. வில்லன், நாயகன் என்று மாறிவரும் திரை முகங்களில் இதுவும் ஒன்று என்று அவர் கலைப் பயணம் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT