Published : 08 Sep 2016 05:14 PM
Last Updated : 08 Sep 2016 05:14 PM
சட்டவிரோத ஊக்க மருந்து உற்பத்தியையும், கடத்தலையும் தடுக்கப் போராடும் உளவுப் பிரிவு அதிகாரியின் முனைப்பும் முயற்சியுமே 'இருமுகன்'.
70 வயது முதியவர் இன்ஹேலர் பயன்படுத்தியதும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்த்ததும் இறந்துவிடுகிறார். அந்த முதியவருக்கு அவ்வளவு பலம் எப்படி வந்தது என்ற விசாரணை தொடர்கிறது. அது குறித்த உண்மையைக் கண்டறியும் பொறுப்பு உளவுப் பிரிவு அதிகாரி விக்ரமுக்கு வழங்கப்படுகிறது. இடைநீக்கத்தில் இருந்த விக்ரம் அந்த பொறுப்பை ஏன் எப்படி ஏற்கிறார், அதற்கு காரணம் யார், அந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, அந்த குழுவால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன, விக்ரம் அந்த நெட்வொர்க்கை என்ன செய்கிறார் என்பதே இருமுகன் கதையும், திரைக்கதையும்.
'அரிமா நம்பி ' தந்து அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குநர் ஆனந்த் ஷங்கரின் இரண்டாவது படம் 'இருமுகன்'. சட்ட விரோதமாகத் தயாரிக்கப்படும் ஊக்க மருந்து குறித்த நிழல் உலகத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு எந்த அதிர்ச்சியையும், ஆபத்துகளின் விளைவுகளையும் உணர வைக்காமல் வெறுமனே கடந்துபோவதுதான் வருத்தம்.
அகிலன் வினோத், லவ் என்ற இரு கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். உளவுப் பிரிவு அதிகாரியாக மிடுக்குடன் இருப்பது, புத்திசாலித்தனமாய் முடிவெடுப்பது, நெருக்கடி சூழலில் சமயோசிதமாய் செயல்படுவது, ஆக்ஷன் காட்சிகளில் மெனக்கெடல், காதலில் கிறங்குவது என விக்ரம் உளவுப் பிரிவு அதிகாரி பாத்திரத்தில் செம ஃபிட். டப்பிங் பேசியதில் கூட விக்ரம் கூடுதல் அக்கறை செலுத்தியது கவனிக்க வைக்கிறது. ஆனால், முகத்தில் முதிர்ச்சியும், கொஞ்சம் தொப்பையுமாக அவர் காட்டும் நடன அசைவுகள்தான் கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது.
லவ் கதாபாத்திரத்தில் வரும் விக்ரம் பார்வை, பாவனையில் மட்டும் வெரைட்டி காட்டியிருக்கிறார். நடிப்பில் அகிலனுக்கும், லவ்வுக்கும் ஆறு வித்தியாசங்கள் என்னவென்று கேட்காமலேயே சொல்லிவிடலாம். இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது படத்தையோ பார்வையாளர்களையோ ஒன்றும் செய்யவில்லை. குறைந்தபட்ச மேஜிக் கூட நிகழவில்லை.
கிளாமர் பாதி, நடிப்பு மீதி என்று நயன்தாரா ஒரு கட்டத்தில் திரையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். நயனின் கதாபாத்திரம் கதை நகர்த்தலுக்கு முக்கிய கருவியாக செயல்படுகிறது. நித்யா மேனன் நிறைய இடங்களில் வந்தாலும், நடிப்பதற்கு பெரிதாய் எந்த வேலையும் இல்லை. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.
'செவனேன்னு இல்லனா செருப்பாலயே அடிப்பேன்' என தன் கையையே பார்த்து நொந்துகொண்டு பேசும் தம்பி ராமய்யா சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். நாசர், ரித்விகா, கருணாகரன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளனர்.
ஆர்.டி.ராஜசேகரின் கேமரா மலேசியாவை கண்முன் நிறுத்துகிறது. சேஸிங், ஆக்ஷன் காட்சிகளில் நம் தோள்களில் ஏறிப் பயணிக்கும் அளவுக்கு ஒளிப்பதிவில் துல்லியம். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஹெலனா பாடல் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. மற்ற பாடல்கள் தேவையில்லாத இடங்களில் துருத்திக்கொண்டு நிற்கின்றன. ஒரு கார் பயணத்தில் கூட அதிர வைக்கும் பின்னணி இசையைக் கொடுத்து பொருந்தாமல் செய்துவிடுகிறார் ஹாரீஸ். அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கங்க பாஸ்!
எடிட்டர் புவன் சீனிவாசனிடம், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் கொஞ்சம் கறார் காட்டி கத்தரி போடச் சொல்லி இருக்கலாம். பரபர இடங்களில் நறநற ஆக்கிவிட்டதுதான் இழுவையாக மாறிவிட்டது.
ஹிட்லர் கூட ஊக்க மருந்தை இரண்டால் உலகப் போரில் தன் வீரர்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் என்று ஹிஸ்டரியில் இருந்து டாபிகல் சுவாரஸ்யம் தேடி இருக்கும் இயக்குநர், அதை படம் முழுக்க பரவாமல் தவறிவிட்டார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். படத்தில் இருக்கும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களால் படத்தோடு பார்வையாளர்கள் எந்த விதத்திலும் ஒன்றமுடியவில்லை.
கருணாகரன் கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை. எந்த மிரட்டலும், டீலிங்கும் இல்லாமல் எப்படி உடனே அப்ரூவர் லெவலுக்கு கருணாகரனால் மாற முடிகிறது. போதிய விளக்கத்தை வசனங்களால் கொடுத்த பிறகும் அந்த ஆசிட் டெமோவும், விரிவான விளக்கமும் ஏன் இடைசெருகலாக நிற்கிறது, இன்ஹேலர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என தெரிந்த போலீஸார் எப்படி சிறையிலேயே அதை 'லவ்' பயன்படுத்தக் கொடுக்கிறார்கள்?
சிறையில் இருக்கும் கைதியே அங்கு இருக்கும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும் அளவுக்கா சிறை நிர்வாகமும், பாதுகாப்பும் இருக்கும், சிறையிலிருந்து தப்பிய 'லவ்' எங்கு சென்றார் என்று போலீஸ் தேடவே தேடாதா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிரிகளைக் கொல்வதில் குறிக்கோளாக இருக்கும் வில்லன் ஏன் ஹீரோவை மட்டும் விட்டுவிடுகிறார். இதனிடையே கதாபாத்திரங்கள் டீட்டெய்லிங் தருகிறேன் என்று பேசித் தீர்ப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் எந்த சுரத்தும் இல்லாமல் போகிறது.
மொத்தத்தில் 'இருமுகன்' இறுக்கமான இறங்குமுகமாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT