Published : 31 Oct 2013 07:25 PM
Last Updated : 31 Oct 2013 07:25 PM
சென்னை: நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகள் உள்பட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தினர்.
தீபாவளி பண்டிகையையொட்டிய அஜித் மற்றும் ஆர்யா நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷால் நடித்த பாண்டியநாடு ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னையில் 23 இடங்கள், கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் 29 இடங்களிலும், ஐதராபாத்தில் ஒரு வீட்டிலும் சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
சென்னையில் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகள், அலுவலகம், உறவினர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.
சென்னை - ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் உள்ள நடிகர் சந்தானத்தின் வீடு, தியாகராய நகரில் உள்ள ஆர்.பி.சவுத்ரியின் அலுவலகம், பாண்டிபஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அலுவலகம், சாலிகிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் வீடு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்கள், ஆந்திராவில் ஒரு தயாரிப்பாளரின் வீடு என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தீபாவளிக்கு ரிலீசான சில படங்களின் தயாரிப்பு செலவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஒவ்வொரு இடத்திலும் ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இதற்காக கோவை மற்றும் சேலத்தில் இருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்திருந்தனர்.
சோதனை நடந்த அனைத்து இடங்களில் இருந்தும் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிள்ளனர். தீபாவளி முடிந்த பிறகே இதுதொடர்பான விசாரணை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் 'கதிர்வேலன் காதல்' படத்தில் நடிகர் சந்தானமும் நடிக்கிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக இருந்தது.
இந்நிலையில் அவரது வீட்டுக்கு காலையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள்சென்று விட்டதால் சந்தானம் படப்பிடிப்புக்கு செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT