Published : 26 May 2017 05:07 PM
Last Updated : 26 May 2017 05:07 PM
ஆம்புலன்ஸ் டிரைவரின் கடமை தவறாத கண்ணியமும், ஆவேசமுமே 'தொண்டன்'.
வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைகிறார் டிரைவர் சமுத்திரக்கனி. காயம் பட்டவரை கொலை செய்யும் முயற்சியில் ஒரு கும்பல் சமுத்திரக்கனியை விரட்டுகிறது. அந்தத் தடைகளை மீறி அவரைக் காப்பாற்றுகிறார். இதனால் நமோ நாராயணனின் பகையை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்தப் பகை முற்றுகிறது. இந்நிலையில் நமோ நாராயணனை எப்படி எதிர்கொள்கிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.
வாழ்ந்ததற்கான அடையாளத்தை, பதிவை விட்டுச் செல்லுங்கள் என்று 'தொண்டன்' படத்தின் மூலம் கருத்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
உயிர் பிரச்சினையை சுமந்துகொண்டு ஓடும் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி சரியாய்ப் பொருந்துகிறார். உண்மையாக இருப்பது, தன்னைச் சுற்றி இருக்கும் பிறருக்கு உற்சாகத்தைக் கடத்துவது, ஊக்கம் கொடுப்பது என கனியின் கதாபாத்திரம் எக்ஸ்ட்ரா எனர்ஜி. பொறுமை காப்பதும், அதற்குப் பிறகு கோபத்தைக் கட்டுப்படுத்தி பிரச்சினையை திசை திருப்பும் விதத்தில் புத்திசாலித்தனத்தைக் காட்டும் விதமும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறது. காளைகளின் பெயர்களை பட்டியலிட்டுச் சொல்வது, பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆண்களிடம் அறிவுரை சொல்வது என சமுத்திரக்கனி பேசும் காட்சிகளுக்கு கரவொலிகள் கணக்கில்லாமல் கிடைக்கிறது.
கவுரவ தோற்றம் மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் சுனைனா அதை நிறைவாகச் செய்திருக்கிறார். விக்ராந்த் கதாபாத்திரம் செயற்கையாகவும், மிகை உணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இயல்பான அப்பாவாக வேல ராமமூர்த்தி ஈர்க்கிறார்.
கஞ்சா கருப்பு, அனில் முரளி, நமோ நாராயணன், திலீபன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. கு.ஞானசம்பந்தன், சவுந்தர்ராஜா, நாசத், ஈரோடு கோபால் கதாபாத்திரங்கள் சரியாக கட்டமைக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் நாடகத்தன்மையுடன் வலம் வருகிறார்கள். ஒரே காட்சியில் வந்து போனாலும் சூரியும், தம்பி ராமய்யாவும் மொத்தமாய் ஸ்கோர் செய்கிறார்கள்.
என்.கே.ஏகாம்பரம் - ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வாசமுள்ள பூ பாடல் மனதைக் கரைக்கிறது.
இரவு நேரத் திருடன் யார் என்பதை கடைசிவரை கண்டுபிடிக்கவும் இல்லை. அதைக் கண்டுபிடிக்க அமைக்கப்படும் குழு தொடர்பான காட்சிகளில் வறட்சி மட்டுமே மிஞ்சுகிறது. இழப்பு குறித்து நமோ நாராயணன் எதுவும் பேசாமல், வருத்தப்படாமல் சமுத்திரக்கனியுடன் மோதல் போக்கைக் கடைபிடிப்பது நம்பும்படியாக இல்லை.
ஆசிட் வீச்சு, ரயில் நிலையத்தில் கொலை, நெடுவாசல், வாடிவாசல், மாணவர் சக்தி, ஜல்லிக்கட்டு என படத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வசனம் பேசும் சமுத்திரக்கனி 'தொண்டன்' திரைப்படத்தை அணுகும் விதம் வசனம் நிறைந்ததாகவே உள்ளது.
இவற்றை தவிர்த்துப் பார்த்தால் 'நல்வழி'ப் பிரச்சாரங்களையே முன்னிறுத்திய விதத்தில் 'தொண்டன்' ஒரு பிரச்சாரகனாகத் திகழ்கிறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT