Published : 06 Aug 2016 10:12 AM
Last Updated : 06 Aug 2016 10:12 AM
உற்சாகமாக இருக்கிறார் விஜய் சேதுபதி. விரைவில் ரிலீஸாகவுள்ள ‘தர்மதுரை’ படமும், தனுஷுடன் நடிக்கும் ‘வடசென்னை’ படமும்தான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். “நான் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரு சிறிய காட்சியில் தனுஷ் சாருடன் நடித்திருப்பேன். இந்நிலையில் ‘வடசென்னை’ படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தனுஷ் சார் சொன்னதும் ரசிகர்கள் சிலர் ‘புதுப்பேட்டை’யில் நான் நடித்த காட்சியின் புகைப்படத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சேது’ என்று உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம்” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் விஜய் சேதுபதி.
'தர்மதுரை' படத்தை ஒப்புக் கொள்ள உங்களை கவர்ந்த அம்சம் எது?
இப்படத்தின் கதைக்களம் சொல்லப்பட்ட விதம் தான். 'தர்மதுரை' என்ற கதாபாத்திரம் அவனிடம் இருக்கும் அனைத்தையுமே கொடுத்துவிடுவான். அவனுடைய வாழ்க்கையில் பணத்தைப் பெரிதாக நினைக்காத ஒருவன். பேரன்பு கொண்டவன். இந்தப் படத்தில் அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் அனைவருமே அவன் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். படம் தொடங்கியவுடன் க்ளைமாக்ஸ் காட்சி தான். அதற்குப் பிறகு தான் கதையே விரியும். மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
தமன்னா இப்படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். 40 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பாராட்டுகிறார். எப்போதுமே ஒரு படத்தின் கதையில் எப்போதுமே நான் என்னை ஒப்படைத்துவிடுவேன். அது எப்போதுமே நம்மை அழகாக கொண்டு போகும். அப்படி என்னை அழகாக கொண்டுப் போன மற்றொரு படம் 'தர்மதுரை'.
'தென்மேற்கு பருவக்காற்று' தொடங்கி 'தர்மதுரை' வரை சீனு ராமசாமியிடம் என்ன மாற்றம் பார்க்கிறீர்கள்?
அவர் நிறைய மாறிவிட்டார். என்னை ரொம்ப நேசிக்கிறார். அவரை என்னை கண்டிக்கவே மாட்டார். நான் தப்பு பண்ணினால் கூட "சேது.. நீ இப்படி பண்ணக் கூடாதுடா" என்று சொல்வார். நாங்கள் இருவரும் சண்டையிட்டு பேசாமல் இருந்திருக்கிறோம். மறுபடியும் பேச ஆரம்பிக்கும் போது எங்கள் இருவருக்கும் காரணம் தேவைப்படவில்லை. கோபம் இருந்தால் உடனே வெளிக்காட்டி விடுவார், நானும் வருத்தம் இருந்தால் உடனே காட்டிவிடுவேன். எங்களுடைய உறவு எந்தவொரு காரணம் கொண்டும் உடையாது.
பெண்களை மிகவும் போற்றக்கூடிய படமான 'இறைவி'யில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
ஒரு ஆணாக நாம் அனைவருமே அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 'இறைவி' மாதிரி ஒரு படம் பண்ணுவது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த வரம். அப்படத்தின் திரைக்கதையை அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. கார்த்திக் சுப்புராஜை அதற்காக நான் பாராட்டுகிறேன். ஒரு காட்சிக்காக நாங்கள் நடிக்கவில்லை, அப்படத்தின் திரைக்கதை அமைப்புக்காக எல்லாம் நடித்தோம். நடிகனாக என்னை வேறு ஒரு இடத்துக்கு நகர்த்தியது 'இறைவி'.
ஒரு காட்சியில் அஞ்சலி என்னை மிகவும் திட்டுவார்கள். அக்காட்சியில் நான் எப்படி நடிப்பது என்று எனக்கு தெரியவில்லை. நிறைய பேசி பேசி அரை மணி நேரம் கழித்துத் தான் அக்காட்சியை நிறைவு செய்தோம். ஒரு இடத்துக்குப் போய் இக்காட்சியை நாம் எப்படி பண்ணப் போகிறோம் என்று யோசிக்கும் போது ஒரு நடிகனாக எனக்கு நம்பிக்கை அளித்தது. அதே மாதிரியான அனுபவங்கள் எனக்கு 'ஆண்டவன் கட்டளை' படத்திலும் ஏற்பட்டது.
'இறைவி' போதிய வரவேற்பைப் பெறவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..
இங்கு நிறைய அரசியல் இருக்கிறது. அதை தட்டிக் கேட்க எல்லாம் முடியாது. அது எனக்கு ரொம்ப வலிக்கிறது, வேதனையாக இருக்கிறது. 'இறைவி' மாதிரியான ஒரு நல்ல படத்தை யார் தவறாக பேசினாலும் தப்பு தான். அந்த படத்தில் பல பேருடைய உழைப்பு இருக்கிறது. 'இறைவி' ஒரு மைல்கல் படம். ரசிகர்கள் அப்படத்தை எப்படிக் கொண்டாடினார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
சினிமா என்பதற்கு முன்னால் நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை. நீங்கள் ஒரு சக மனிதனை ஏமாற்றலாம் ஆனால் ஒரு ஆன்மாவை ஏமாற்றக் கூடாது. 'இறைவி' படம் பற்றி பலரும் என்னுடைய ஃபேஸ்புக்கில் வந்து கருத்து தெரிவித்தார்கள். 90% பாராட்டி தான் பேசினார்கள். அவர்கள் பாராட்டியது எல்லாம் ரொம்ப ஆத்மார்த்தமாக இருந்தது. அவர்களுடைய அனைத்துப் பாராட்டும் கார்த்திக் சுப்புராஜை மட்டுமே சேரும்.
முன்பு வாய்ப்பு தேடி நீங்கள் நிறைய பேருடைய அலுவலகம் சென்றிருப்பீர்கள். ஆனால் இன்று பலர் உங்களை நாயகனாக வைத்து படம் பண்ண தேடி வருகிறார்கள். இந்த இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
இரண்டுமே இயல்பு தானே. நாளைக்கு இதில் என்ன வேண்டுமானாலும் மாற்றம் வரும். இதை நினைத்து நான் ரொம்ப ஃபீல் பண்ண மாட்டேன். அன்றைக்கு எனக்கு வேலை தேவை நான் தேடிப் போனேன். இன்றைக்கு நான் பிஸியான கொஞ்சம் தெரிந்த நடிகராக இருப்பதால், என்னை வைத்து படம் பண்ணலாம் என தேடி வருகிறார்கள். மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் திரையுலகில் இருக்க முடியும். நான் போய் மக்களுடைய மனதில் என்னை திணிக்க முடியாது. நான் சாதித்துவிட்டேன், கிழித்துவிட்டேன் என்று சொல்லவில்லை. நான் பண்ணிய படங்கள், அதை கொடுத்த இயக்குநர்கள், தயாரித்த தயாரிப்பாளர்கள், என்னுடன் நடித்த அத்தனை நடிகர்கள் என அனைவருமே என்னைக் கொண்டு போய் சேர்த்தார்கள். அவர்கள் பண்ணுவதை நாங்கள் அனுபவிக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT