Published : 31 Mar 2014 05:31 PM
Last Updated : 31 Mar 2014 05:31 PM
'இனம்' படத்திற்கான எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட 'அஞ்சான்' படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'இனம்' படத்தினை வாங்கி வெளியிட்டது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். அப்படத்திற்கு பல தரப்பினர் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மும்பையில் 'அஞ்சான்' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் 'அஞ்சான்' படத்தில் சூர்யா நாயகனாக நடித்து வருகிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். படப்பிடிப்பு நடைபெற்று வருவதைத் தெரிந்து கொண்ட மும்பையில் உள்ள 'நாம் தமிழர்' கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மதியம் 3 மணியளவில் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் திரண்டனர்.
லிங்குசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லிங்குசாமி படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். நேற்றிரவு அனைத்து திரையரங்கிலிருந்தும் 'இனம்' படத்தினை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார் இயக்குநர் லிங்குசாமி.
அதனைத் தொடர்ந்து இன்று காலை அதே பகுதியில் எவ்வித இடையூறுமின்றி 'அஞ்சான்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை 'அஞ்சான்' படத்தினை வாங்கி வெளியிடும் யு.டிவி நிறுவனத்தின் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT