Published : 19 Jan 2014 02:25 PM
Last Updated : 19 Jan 2014 02:25 PM
தமிழில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்ய கெளதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்தார். ரேஷ்மா கட்டாலா என்பவர் உதவியுடன் மொழிமாற்றும் பணி நடந்தது.
இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்தால் தனக்கு ரூ.99 லட்சம் ராயல்டி தர வேண்டும் என்று படத்தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்தார்.அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உதவியை அவர் நாடினார். போலீஸார் வழக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணைக் கமிஷனர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் ஜெயராமன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். மனுவை பரிசீலித்த நீதிபதி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைநாதன் வழக்குப்பதிவு செய்தார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ரேஷ்மா கட்டாலா, ராமானுஜம், வெங்கட் சோமசுந்தரம், சசிகலா தேவி ஆகிய 5 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், இதுபற்றி நான் இன்னும் இரண்டு, மூன்று தினங்களுக்கு பேச முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT