Published : 30 Jan 2014 01:34 PM
Last Updated : 30 Jan 2014 01:34 PM
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கீரவாணி தனது ஒய்வினை அறிவித்திருக்கிறார்.
1990 ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் கீரவானி. தமிழில் மரகதமணி என்று இவரது பெயர் இடம்பெறும்.
1997ம் ஆண்டு 'அன்னமய்யா' என்ற படத்தின் இசைக்கு தேசிய விருது பெற்றார். ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார் கீரவானி. தமிழில் 'அழகன்' படத்தின் இசைக்காக 1991 தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்தது. பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
தமிழில் 'அழகன்', 'நீ பாதி நான் பாதி', 'வானமே எல்லை', 'ஜாதிமல்லி' உள்ளிட்ட படங்களில் இவரது இசை பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்துள்ள அனைத்து படங்களுக்குமே கீரவானி தான் இசையமைத்துள்ளார். ராஜமெளலி படங்கள் மட்டுமன்றி பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இவ்வாறு பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் கீரவானி தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருப்பது, "எனது முதல் பாடலை 9 டிசம்பர் 1989 சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கினேன். அன்றைய தினமே என்னுடைய ஓய்வு பெறும் நாளை தீர்மானித்து விட்டேன். அதன்படி 8 டிசம்பர் 2016ல் ஓய்வு பெறுவேன் என்று.
அந்நாளில் என்னோடு பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருடனும் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இதை கொண்டாடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றன. அதே வேளையில் என்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இவரது இந்த ஓய்வு பெறும் முடிவு பல்வேறு இசையமைப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment