Last Updated : 15 Sep, 2016 10:08 AM

 

Published : 15 Sep 2016 10:08 AM
Last Updated : 15 Sep 2016 10:08 AM

இதுதான் நான் 43: ‘சிங் இன் த ரெய்ன்!’

சினிமாவில் முக்கியமா கத் துக்கிட்ட ஒரு விஷயம் பொறுமை! இந்தப் பொறுமையை நான் டைரக்‌ ஷன் பண்ணும்போதுதான் முழு மையா கத்துக்கிட்டேன். ஒரு பாட்டு பண்ணும்போது எனக்கு வேகம் அதிகமா இருக்கும். முன்னெல்லாம் எந்த மாதிரி பாட்டுன்னாலும், அதிகபட்சம் மூணே நாட்கள்ல முடிச்சுடணும்னு உள்ளுக் குள்ள ஓடிட்டே இருக்கும். ஆனா, இப்போ வெல்லாம் ஒரு பாட்டோட ரிகர்சலுக்கே ஏழெட்டு நாட்கள் எடுத்துக்கிட்டு அதை ஒண்ணு, ஒன்றரை நாட்கள்ல ஷூட் பண்ணி முடிச்சிடுறேன். கிட்டத்தட்ட நடிப்பும் அப்படித்தான். கூப்பிடுவாங்க… போவேன்… நடிப்பேன்… வந்துடுவேன். ஆனா, ஒரு படத்தோட டைரக்‌ஷன்னு இறங்கிட்டா பயங்கர பொறுமை தேவைப் படுது. ஷூட்டிங்ல ‘ஏ டு இசட்’ நம்ம தான்னு ஒரு சூழல் உருவாகும். வேகம் வேகம்னு ஓடிட்டிருக்கிற நமக்கு, இது புதுசா இருக்கேன்னு ஆரம்பத்துலெல்லாம் தோணும். போகப் போக அந்த பொறுமை பிடிக்கவும் ஆரம்பிச்சுது.

‘‘சார் ஷூட்டிங் டைம் எக்ஸ்டர்ன் ஆகுது. ஈவ்னிங் எல்லாருக்கும் டிபன் சொல்லிடட்டுமா?, ஆர்டிஸ்டோட மேக்கப் மேனுக்கு உடம்பு சரியில்லை; டிரெஸ் இன்னும் தைக்கல?’’ன்னு பல விஷயத்தோடு அசிஸ்டென்ட் ஓடி வந்து நிற்பான். இப்படி நாம எதிர்பார்க்காத, அதுக்கு முன்னாடி காதுல வந்து விழாத கேள்விங்கல்லாம் வந்து வரிசை கட்டி நிற்கும். என்னடா, இதெல்லாம்கூட நம்ம வேலையான்னு அந்த இடத்துல இருக்கவே முடியாது. இப்படி ஒவ்வொண்ணும் டென்ஷன் தந்தாலும் அந்த டென்ஷனை நான் ரசிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு டைரக்டர் வேலைக்காரனாவும் இருக்கணும்; தலைவனாவும் இருக்கணும். இன்னும் சொல்லணும்னா அடிமையாவும் இருக்கணும், சேனாதிபதியாவும் இருக் கணும். அந்த மாதிரி இருக்குறப்ப நாம பெருசா கோபத்துல எழுந்துபோயிட முடியாது. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான். அந்தப் படம், நம்ம குழந்தை. எனக்குத் தெரிஞ்சு ஒரு படத்தோட டைரக்டர், தான் டைரக்‌ஷன் செஞ்ச படத்தை பாதியிலேயே விட்டுட்டு போனதா நான் கேள்விப்பட்டதே இல்லை. எவ்வளவோ பேர் தன்னோட குடும்பம், ஆரோக்கியத்தை கூட கவனிக்காம டே அண்ட் நைட் படத்துக்காக உழைச்சிட்டு இருக்குறதை நான் பார்த்திருக்கேன்.

இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பாட்டோட ஷூட்டிங். விடிகாலை அஞ்சரை மணி. எழுந்திருக்கலாம்னு முயற்சி செஞ்சேன். முதுகு பிடிச்சுக்கிச்சு. சுத்தமா எழுந்திருக்கவே முடியலை. எந்தப் பக்கமும் திரும்ப முடியலை. அப்படி ஒரு வலி. கொஞ்சம் முயற்சி செஞ்சு எழுந்திருச்சாலும், சரியா நிற்க முடியலை. பின்னி எடுத்துச்சு வலி.

அந்த அஞ்சரை மணிக்கே அக்குபிரஷர் டாக்டரிடம் போனேன். வலி குறையலை. அடுத்து இன்னொரு டாக்டரிடம் போய் ஊசி, மாத்திரைங்க எடுத்துக்கிட்டேன். அப்பவும் சரியாகலை. நடக்கவும் முடியலை. டாக்டர் ‘கண்டிப்பா ஓய்வு எடுத்தே ஆகணும்’னு சொல்லிட்டார். ஆனா, நான் ஷூட்டிங்ல ஆடணும். என்னை நம்பி எல்லாரும் வந்திருக்காங்க. நிறையப் பணம் போட்டிருக்காங்க. அதெல்லாம் விட்டுட்டு என்னால இருக்க முடியலை. இடுப்புக்கு மேலதான் வலி. அப்போ இடுப்புக்குக் கீழே என்னென்ன மூவ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணலாம்னு ஸ்பாட்டுக்கு போய் யோசிச்சு ஆட ஆரம்பிச்சேன். ஆடிட்டிருக்கும்போதே பின்னாடி ரெண்டு பேர் பிடிச்சு இழுத்தா எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு வலி. ஒருவழியா அந்தப் பாடலை இரவு 2 மணிக்கு முடிச்சோம். இப்போதான் வலி குறைஞ்சிருக்கு. அன்னைக்கு காலையில டாக்டரைப் பார்க்க காரில் போறப்ப ‘என்ன இப்படி ஆயிடுச்சே’னு யோசிச்சேன். அப்போதான், இன்னும் எவ்வளவு நாள் இப்படி நம்மால ஆட முடியும்னு தோணுச்சு. சரி ‘ஓ.கே, பார்ப்போம்’னு சிரிச்சுக்கிட்டேன். பக்கத்தில் துணைக்கு வந்த என் ஃபிரெண்ட், ‘‘என்ன இப்படி சிரிக்கிறீங்க’’ன்னு கேட்டார். ‘‘வலி தாங்க முடியலை. அதான் சிரிச்சேன்’’னு சொன்னேன். ஆனா, எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த தெய்வமா நினைக்கிற குருவோட ஆசி இருக்குறதுனாலதான் வலியையும் மீறி என்னால ஆட முடியுது. நான் சமீபத்தில் ரெண்டு மூணு டான்ஸ் ஷோவுக்கு போயிருந்தேன். என்னைவிட எல்லாரும் அங்கே ரொம்ம்ம்ப நல்லா ஆடுறாங்க. என்னை பார்க்கும்போது அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அதை என்னால உணர முடியுது. அவங் களோட சந்தோஷமும் என்னை ஆட வைக்குதுன்னு நினைக் கிறேன்.

டைரக்‌ஷன்ல எனக்கு பெரிய அறிவு இருக்குன்னு சொல்றதை விட பெரிய அளவு ஈடுபாடு இருக்கு. ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு பாட்டோட டியூனை கேட்டா எப்படி ரியாக்ட் ஆவேனோ, அந்த மாதிரிதான் ஒரு கதையோ, ஒரு சீனையோ கேட்டால் அப்படியே ஒரு விஷுவல் எனக்குள்ள வரும். அந்த விஷுவலை, ‘இப்படி இருந்தா நல்லா இருக்கும், அப்படி இருந்தா நல்லா இருக்கும்!’னு காம்ப்ரமைஸ் பண்ணியும், பண்ணிக்காமலும் ஷூட் பண்ணும்போது அது மிகப்பெரிய அளவுல ஹிட் ஆகவும் செஞ்சிருக்கு. நான் டைரக்‌ஷன் பண்ண வர்றதுக்கு முன்னாடி நடிச்சிட்டிருக்கும்போதே அந்த மாதிரி விஷயங்கள் நடந்திருக்கு.

‘மனதை திருடிவிட்டாய்’னு ஒரு படம். அப்போ நான் டைரக்‌ஷன்குள்ள வரலை. அந்தப் படத்துல வடிவேலு காமெடிங்க வரும். அதில் வடிவேலு இங்கிலீஷ் பேசினா ரொம்ப நல்லா இருக்கும்னு டைரக்டர் ஆர்.டி.நாராயணமூர்த்தியோட டிஸ்கஷன் பண்ணோம். டைரக்டருக்கும், எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, படத்தோட டைரக்‌ஷன் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தர், ‘வடிவேலு இங்கிலீஷ் பேசினா யாருக்கு பிடிக்கப் போகுது?’ன்னு வேணாம்னு சொன்னார்.

அதை ஷூட் பண்ணும்போது பெருசா அவருக்கு பிடிக்கலை. ஆனா, இன்னைக்கு அந்தப் படத்துல, ‘சேம் ப்ளட்’, ‘சிங் இன் த ரெய்ன்’, மம்மி பாவம்... மம்மி பாவம், டாக் மீ’னு வர்ற வசனம் எல்லாமே சூப்பரா வொர்க்-அவுட் ஆச்சு. அதை மக்களும் பெருசா வரவேற்க செஞ்சாங்க. சில சமயத்துல நம்மோட ஆறாவது அறிவு ரொம்ப சரியா வொர்க் -அவுட் ஆகும். அதனாலதான் நான் எப்பவுமே மனசு சொல்றதை பாலோ பண்ணணும்கிறதுல தெளிவா இருப்பேன். சில சமயம் தெரிஞ்சே மனசை பாலோ பண்ணாம, அது தப்பா ஆயிருக்கு.

காதல், டான்ஸுன்னு கமர்ஷியல் கலந்து ஆரம்பத்துல நான் டைரக்‌ஷன் பண்ணின படங்கள்தான் என் டைப் படம். ஆனா, இப்போ நான் டான்ஸ் படம் பண்றேன்னு யார்கிட்டயாவது சொன்னா, அவங்க சொல்ற பதில் இருக்கே.. அதை அடுத்த வாரம் சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x