Last Updated : 12 Feb, 2017 04:48 PM

 

Published : 12 Feb 2017 04:48 PM
Last Updated : 12 Feb 2017 04:48 PM

பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு வெற்றிக் கொண்டாட்டம்: லாரன்ஸ் வேண்டுகோள்

பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியைக் கொண்டாட லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியவர் ராகவா லாரன்ஸ். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிலையில் லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோஷத்தை வெற்றிவிழாவாக மாணவர்கள்,இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசைதான்.

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.

பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக்கொண்டு அலங்காநல்லூர் சென்றோம். அலங்காநல்லூரில் இடப்பற்றாக்குறைக் காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஊர்மக்கள் மீது எந்த தவறும் இல்லை. ஊர்மக்களின் அளவுகடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

இம்மாபெரும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காணமுடியவில்லை என்று பல மாணவர்களும் இளைஞர்களும் வருத்தப்பட்டார்கள். கண் கலங்கியும் விட்டார்கள். அதனால் நானும் அவர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்றுவிட்டேன்.

மாணவர்களும் ,இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்ததைப் போக்க ஜல்லிக்கட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ம் தேதி அன்று வெற்றியை கொண்டாடலாம் என்று கூறினேன் அவர்களும் சம்மதித்தனர். அப்போது அவர்கள் முகம் மெரினாவில் எழுந்த அலைபேசியின் வெளிச்சத்தைபோல் ஒளிர்ந்தது.

அதனால் இத்திருநாளை வெற்றி விழாவாக எல்லோரும் இணைந்து கொண்டாடுவோம் என நாம் முடிவெடுப்போம். நமது சந்தோஷக் களம் மெரினாதான் என்றாலும் இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதாலும் மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றுகூடி கொண்டாட உள்ளோம். மற்ற அனைவரையும் இணைப்பது என்பது சிரமம் என்பதால் உலகத்தமிழர்கள் அனைவரும் இருந்த இடத்திலேயே கொண்டாடுங்கள்.

கூலித்தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் என ஜல்லிகட்டுக்காக குரலெழுப்பிய அனைவரும் இதை வெற்றியாக கொண்டாடுவோம்.

வரும் பிப்ரவரி 18-ம் நாள் மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ,உங்கள் அலைபேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.

மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் வரும் பிப்ரவரி 18-ம் நாள் அன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் பிப்ரவரி 18 மாலை 7 மணி கொண்டாட்டதை மறவாதீர்கள்" என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x