Last Updated : 08 Mar, 2017 04:25 PM

 

Published : 08 Mar 2017 04:25 PM
Last Updated : 08 Mar 2017 04:25 PM

கதிர் முதல் கபாலி வரை: பெண்கள் விரும்பும் நாயகர்கள்!

'சமகால தமிழ் சினிமாவில் பெண் படைப்பு ஆளுமைகள்', 'தமிழ் சினிமாவின் துணிச்சல்மிகு நடிகைகள்', 'முன்னுதாரணமாகத் திகழும் பெண் கதாபத்திரங்கள்', 'பெண்மையின் வல்லமை சொல்லும் திரைப்படங்கள்'...

'மகளிர் தினம்' சிறப்புக்காக சினிமா சார்ந்த கட்டுரை ஏதேனும் எழுத உந்துதல் ஏற்பட்டால் உடனே இதுபோன்ற மகத்துவம் வாய்ந்த தலைப்புகள்தான் சட்டென மனதுக்குள் உதிக்கின்றன. மகளிர் தினத்தில்கூட பெண்களை ஆண்களின் கோணத்தில் சிந்திப்பதன் விளைவுதான் இது.

பெண்களின் பார்வையில் தமிழ் சினிமாவை அணுக முயற்சிக்கும்போதுதான், அவர்கள் விரும்பக் கூடிய ஆண் கதாபாத்திரங்கள் குறித்து அசைபோடலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த வகையில், கடந்த 2016-ஐ மட்டுமே எடுத்துக்கொண்டால், தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான படங்களில் வர்த்தக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் கவனம் ஈர்த்த படங்களில் அப்படி ஏதேனும் கதாபாத்திரங்கள் தேறுகின்றதா என்று பார்ப்போம்.

கதிர்:

பெண்கள் பொதுவாக விரும்பக் கூடிய நிழல் நாயகர்களின் பண்புகளைக் கருத்தில்கொள்ளும்போது, தமிழ் சினிமா 2016-ல் முதன்மை வகிக்கிறார் 'காதலும் கடந்து போகும் கதிர்'. தமிழ் சினிமாவின் காதல் இலக்கணமும் சூத்திரங்களும் ஏதுமின்றி, நம் சமூகத்தில் பெரும்பாலான ஆண்களிடம் புதைந்துகிடக்கும், எளிதில் வெளிப்படுத்த தெரியாத காதலை இயல்பு மீறாமல் சொன்னது இந்தப் படம். யாழினியை மையப்படுத்திய கதிர் கதாபாத்திரம் மீது கவனம் செலுத்தினால், யாழினிக்கு குடும்ப ரீதியில் எழும் சின்னச் சின்ன பிரச்சினைகளைத் தீர்க்க கதிர் மனப்பூர்வமாக உறுதுணை புரிவதை உணரலாம்.

இருவரும் மது அருந்தும் காட்சி ஒன்றே போதும், தன்னிலை மறந்த சூழலிலும் காமத்துக்கு இடம்தராத ஆண்கள் மீது பெண்கள் ஈடுபாடுகொள்ள. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் நினைத்ததை அப்படியே செய்து முடிக்க களமிறங்கும் கதிர் கதாபாத்திரம், ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் எனும் கதாபாத்திரத்துக்கு ஒப்பானது.

நம்மில் பலராலும் கதிர் மாதிரி நடந்துகொள்வது என்பது கனவிலும் சாத்தியம் இல்லாதது. தன்னுடைய யாழினி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னை பைத்தியமாக பலரும் நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று தனக்குத் தெரிந்த யுக்திகளைக் கையாள்கிறாரே... அந்த இன்டர்வியூ காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கலாம்; கைதட்டி ரசிக்க வைக்கலாம்... ஆனால், அந்த கதிரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்க முடியுமா?

நிச்சயம் முடியவே முடியாது. அதுதான் கதிர். தனக்காக தன் சுயத்தையே இழக்கத் தயங்காத ஆண்களை எந்தப் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகும்?

மன்னர் மன்னன்

ஏழைகளின் சொர்க்க இடம் 'கழிப்பறை'. உணர்வுபூர்வ விவாதப்பொருள் 'கருணைக்கொலை' இவ்விரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்து கலங்கடித்த படைப்பு 'ஜோக்கர்'. ப்ரொட்டாகனிஸ்ட் மன்னர் மன்னனை நிஜ காதல் மன்னனாக பார்க்கலாம். தனது காதல் இணையை மகிழ்ச்சியை ஊட்டுவதும், சுயமதிப்பு எந்தச் சூழலிலும் சீர்குலையாமல் காப்பதும்தான் பேரன்பின் வெளிப்பாடு. அதை மன்னர் மன்னன் கதாபாத்திரம் தன் ஒவ்வோர் அசைவிலும் வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

செயலிழந்த மனிதரை இயல்பாக நடத்தும் விதம் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காட்சியளிக்கலாம். ஆனால், அதன் ஆழத்தை உணர்பவர்களுக்கு அந்த நேசத்தின் உன்னதம் தெரியக் கூடும்.

"ஓல ஓல குடிசையில…

ஒண்ட வந்த சீமாட்டி!

ஒண்ணா நான் வச்சுக்குவேன்

உசுருக்குள்ள தாலாட்டி..."

இப்படிச் சொல்பவன் எவனாக இருந்தாலும் இப்படித்தானே சொல்வாள் எந்தப் பெண்ணும்:

"ஆறே காஞ்ச போதும்

அன்புல நீ நீராடு!

சோறே இல்லேன்னாலும்

சொந்தம் இருக்கும் உன்னோடு!"

பிரபு

தமிழ் சினிமாவில் உருப்படியான 'ஸ்போர்ட்ஸ் டிராமா' என்றால் அது 'இறுதிச்சுற்று'தான். தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் அதிகம் கவனிக்கப்படாத குத்துச்சண்டையை மையக்களமாகக் கொண்டதே கெத்துதான். இந்தப் படத்தின் ப்ரொட்டாகனிஸ்ட் பிரபுவை பெண்களில் பலருக்கும் தோற்றம் காரணமாக சட்டென பிடிக்கக் கூடும். ஆனால், போகப் போக புறத்தோற்றம் மறைந்து அகத் தோற்றம் மீது ஆர்வம் தொற்றும் என்பது உறுதி.

ஆண்களிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் பெண்களை ஆண்களுக்கு எப்படிப் பிடிக்குமோ அப்படித்தான் பெண்களுக்கும். குறிப்பாக, மகிழ்ச்சியோ கோபமோ எதிரே இருப்பது சக மனிதர் என்ற ஒற்றை நினைப்பில் மட்டும் உணர்வுகளை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தும் நபர்களை நிச்சயம் பிடிக்கும்தானே. தனிப்பட்ட பண்புகளை மூடி மறைத்துவிட்டு, வெளியே உத்தமனாக உலா வருவோரை விட, தன் இயல்புத் தன்மைகளை வெளிப்படுத்தத் தயங்காக நேர்மையான ஆண்கள் மீது பெண்கள் கவன ஈர்ப்பு கொள்வதைத் தடுக்க முடியாது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில். அப்படி உள்ளொன்றும் புறமொன்றுமின்றி ஒரே ஆளாக இருக்கும் பிரபுவும் பெண்கள் விரும்பும் நாயகர்தான்.

கபாலி

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவான 'கபாலி'யில் கமர்ஷியல் அம்சங்கள் தாண்டி உணர்வுபூர்வ பகுதிகளும் நிறைந்திருந்தன. குறிப்பாக, கபாலி தன் பிரிந்த குடும்பத்தைத் தேடும் படலம். அது உணர்வுபூர்வ தேடல்.

எல்லாம் அனுபவித்து ஓய்ந்த பிந்தைய வாழ்நாட்களில் உயிர்ப்பான காதலன்பு வேண்டுவதன் அவசியத்தையும், அந்த அன்பின் வெளிப்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கபாலி கதாபாத்திரம் கச்சிதாக சொல்லியிருக்கும். குறிப்பாக, பிரிந்தவர்கள் சேர்ந்த பின் வரும் அந்த 'மாயநதி' பாடலும் காட்சிகளுமே போதும். "தூய நரையிலும் காதல் மலருதே..." என்ற வரிகள் மிதக்க, தன் காதலி மீது கபாலி பார்வை வீசும்போது பார்வையாளர்களுக்கு கிடைக்கக் கூடிய பூரிப்பு எளிதில் விவரிக்க முடியாதது.

காதலன்பு கரைவதற்கு வயது ஒரு விஷயமே இல்லை என்று இரண்டாம் குழந்தைப் பருவத்திலும் குழந்தையாய் மாறி அன்பை வெளிப்படுத்தும் கபாலிகளை விரும்பாத பெண்கள் உண்டோ?

கபாலி படத்தில் டெலிட்டட் காட்சிகள் சிலவற்றை சில மாதங்களுக்கு முன்பு யூடியூபில் காண நேர்ந்தது. அவை இந்த உணர்வுபூர்வ பகுதியைச் சேர்ந்தவைதான். அந்தக் காட்சிகள் படத்தில் சேர்க்கப்படாதது நினைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கபாலியின் பேரன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் அவை.

நெடில்கள்

சினிமாவைக் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு நல்ல சினிமாவைப் போட்டுக் காட்டுவது மிகவும் அவசியம். அதைவிட மிக முக்கியமானது, அவர்களுக்கு மொக்கைப் படங்களையும் போட்டுக் காட்டவேண்டும். ஏனென்றால், அப்போதுதான் அவர்களால் எப்படி எல்லாம் சினிமா எடுக்கக் கூடாது என்பதை எளிதில் கற்க முடியும்.

இதைப் போலவே, பெண்கள் விரும்பக் கூடிய முன்னுதாரண ஆண்களை திரையில் காட்ட விழையும் படைப்பாளிகள், பெண்கள் வெறுக்கத்தக்க முன்னுதாரண ஆண்களையும் திரையில் வடிக்க வேண்டும். ஆனால், இது அரிதாகவே இங்கே நிகழ்கிறது. அப்படி ஓர் அரிய படைப்பு 'இறைவி'. ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டி, அதில் பெண்களின் நிலையைப் பதிவு செய்த முக்கியமான படைப்பு.

நெடில்கள் என்ற திமிருடன் வாழும் ஆண்கள் 'இறைவி'யில் முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பார்கள். அந்தக் கதாபாத்திரங்கள் மீது பெண்களுக்கு நிச்சயம் கோபம் எழும். ஆண்களில் பெரும்பாலானோருக்கோ எரிச்சல் வரும். வராதா பின்னெ... தங்களின் நிஜ முகத்தை திரையில் அப்படியே காட்டினால்..?

- சரா சுப்ரமணியம் | தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x