Published : 29 Mar 2014 03:19 PM
Last Updated : 29 Mar 2014 03:19 PM
பாலிவுட்டில் இருந்து லேட்டஸ்டாக கோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கும் நடிகை சுகந்தா ராம். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘இனம்’ படத்தில் நாயகியாக நடித்த இவர் ‘மை நேம் ஈஸ் கான்’, ‘தேரே பின்லேடன்’ என்று பல இந்திப் படங்களில் நடித்தவர். ‘ஜக்னி’, ‘காஃபி ப்ளூம்’ என்று பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி இருக்கும் இவரை சென்னைக்கு வந்தபோது சந்தித்தோம்.
பாலிவுட்டில் இருந்து எப்படி தமிழுக்கு வந்தீர்கள்?
சந்தோஷ்சிவன் படங்களின் தரம் எப்போதுமே சிறப்பாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் என்னை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்ததை என் அதிர்ஷ்டமாகத்தான் கருதுகிறேன். நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் படத்தின் கதையைக் கூறினார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கதையில் நான்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. யாரை வேண்டு மானலும் அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம்.
படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள்?
நான் நகரத்தின் பின்னணியில் வளர்ந்த பெண். முதலில் கிராமத்து பெண்ணாக என்னை மாற்றிக் கொள்வதற்கான சூழலே சவாலாக இருந்தது. சின்ன குழந்தைகள் மத்தியில் போரிடும் சூழல் படப்பிடிப்புக்காகத்தான் என்றாலும் வலியாக இருந்தது. படத்தில் நடித்த எல்லாருமே ஏதோ கால்ஷீட் கொடுத்தோம், நடித்தோம் என்று இல்லாமல் கவனமாக எங்களோட வேலைகளை பார்த்தோம். சின்ன யூனிட்தான். ஆனால் பெரிய வேலை. அதுக்கு காரணம் சந்தோஷ்சிவன்.
தமிழ்ப்படங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
நான் தமிழ் சினிமாவைக் காதலிக்கிறேன். இங்கே உள்ள வொர்க் நேச்சர் ரொம்பவே பிடிக்கும். கதைக்கு ஏற்றாற்போல நடிக்கும் நடிகர், நடிகைகள் இங்கே பலர் இருக்கிறார் கள். மணிரத்னம் இயக்கிய படங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு அழகாக அவர் உணர்வுகளை படமாக்குகிறார். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்கிற இயக்குநர் அவர். இப்போ நடித்த ‘இனம்’ மாதிரியான படம் தமிழிலோ, இந்தியிலோ தொடர்ந்து அமைய வேண்டும். அப்படி எதுவும் இல்லாவிட்டால் என்னோட பொழுதுபோக்கான மலை ஏறுதலில் இறங்கிடுவேன்.
மலை ஏறுதல் உங்களோட பொழுதுபோக்கா?
ஆமாம். அதுக்காக தனியே 2 மாதம் படிச்சிருக்கேன். கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரம் வரைக்கும் மலையில் ஏறியிருக்கேன். இது ஆண்களுக்குத்தான் சரியா வரும்னு சிலர் நினைப்பாங்க. அப்படி எதுவும் இல்லை. தெளிவான பார்வை, ஆற்றல், மனதில் உறுதி இதெல்லாம் இருந்தால் போதும். யாரும் டிரக்கிங்ல அசத்தலாம்.
வேற என்னெல்லாம் திட்டம் வைத்திருக்கீங்க?
அப்பா நேஷனல் ஹை வே துறையில் வேலை பார்த்தார். அதனால் புனே, கல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் இப்படி வட இந்தியாவில் பல ஊர்களில் பயணம் செஞ்சிருக்கேன். சின்ன வயதில் இருந்தே ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிறப்பை கவனிக்க தவறியதே இல்லை. எனக்கு ஓவியமும் இசையும் ரொம்பப் பிடிக்கும். நானே சொந்தப்படம் செய்ய போகிறேன். அதுக்கான வேலைகள்தான் அடுத்த திட்டம். சினிமாவில் நடிக்க வரும் பலரும் அதில் மட்டும்தான் கவனம் செலுத்துறாங்க. டெக்னிக்கலாகவும் முயற்சிக்கலாம் என்று ஏன் யோசிக்கலைன்னு தெரியல. இந்தப்படத்தின் ஷூட்டிங்ல சந்தோஷ் சிவன்கிட்ட கேமரா வொர்க் பற்றி தெரிந்துகொள்ள ஆசை இருப்பதை சொன்னேன். ‘‘இப்போதைக்கு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்து’’ என்று கண்டித்தார். கேமராவின் யுத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தால் நடிப்புக்கே அது பயனுள்ளதாக இருக்குமே என்பது என் விருப்பம். சினிமாவில் நிறைய சாதிக்க பல வழிகள் இருக்கு. அதை ஒவ்வொன்றாக கடந்துபோக வேண்டும் என்பதே என் ஆசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT