Published : 22 Oct 2013 01:20 PM
Last Updated : 22 Oct 2013 01:20 PM
சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வரைச் சந்திக்க பெப்ஸி முடிவு செய்திருக்கிறது.
சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை கடந்த மூன்றாண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. இது குறித்து பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
பெப்ஸி சங்கத் தலைவர் அமீர் செய்தியாளர்களிடம், “'பெப்ஸி' அமைப்பில் 23 தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை மூன்றாண்டுகளாக இழுபறியில் உள்ளது. அப்பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து 'பெப்ஸி' தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி 'பெப்ஸி'யின் அனைத்து அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களும் பேரணியாக சென்று முதல்வரை சந்திக்க உள்ளோம்.
இச்சந்திப்பின்போது, திருட்டு வி.சி.டி. விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்; மற்ற மாநிலங்களுக்கு முன் உதராணமாக முதல் முறையாக திரைப்படத் துறைக்கு வீடு கட்ட தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் சில இடர்பாடுகளால் வீடு கட்ட முடியாமல் இருக்கும் நிலையை மாற்றுவது போன்றவை குறித்தும் கோரிக்கை வைக்க உள்ளோம்.
சம்மேளன நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்; பெப்ஸி அமைப்பின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக் கூடிய திரைப்படத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT