Published : 06 Jun 2016 09:08 AM
Last Updated : 06 Jun 2016 09:08 AM
'இறைவி'யில் தங்களை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் எனக் கூறி தயாரிப்பாளர்கள் பலரும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'இறைவி'.
சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
ஒரு தயாரிப்பாளருடான ஈகோ யுத்தத்தின் விளைவாக முடக்கப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநரை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு, அதையொட்டி நகரும் வகையில் இறைவி கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் காட்டப்பட்ட தயாரிப்பாளர் கதாபாத்திரம் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களையும் அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சை எழவே, ஜூன் 4ம் தேதி மாலை சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் 'இறைவி' படத்தின் காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது.
இதில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பார்த்திருக்கிறார்கள். சிலர் தவறில்லை என்று கூற, பலரும் இது தவறான சித்தரிப்பு என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
'ஜிகர்தண்டா' படத்தின் தயாரிப்பாளருக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த தயாரிப்பாளரை மேற்கோள் காட்டித்தான் காட்சி அமைத்திருக்கிறார் என்று பலரும் குற்றச்சாட்டி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கார்த்திக் சுப்பராஜூக்கு ரெட் (ரெட் என்றால் எந்த ஒரு தயாரிப்பாளருமே கார்த்திக் சுப்பராஜை வைத்து படம் இயக்க மாட்டார்கள்)போட்டாக வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருக்கிறது.
ஞானவேல்ராஜாவின் ஆதங்கம்
மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்று ஒரு வாட்ஸ் - அப் குரூப் இருக்கிறது. அதில் பல்வேறு தயாரிப்பாளர்களும் இப்படம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இப்படம் குறித்து "தயாரிப்பாளர்களின் கருத்தைக் கேட்டேன். அது தான் என்னுடைய கருத்தும். கார்த்திக் சுப்பராஜ் வந்த 6 மாதத்தில் வாய்ப்பு கிடைத்தது. சி.வி.குமார் என்ற புது தயாரிப்பாளர் அவருடைய கதையை தயாரிக்க சம்மதித்தார். அப்படிப்பட்ட சி.வி.குமாருக்கு பிரதிபலனாக பல நடிகர்களை வைத்து, சொன்ன பொருட்செலவை விட அதிகமான பொருட்செலவில் படத்தை முடித்திருக்கிறார்.
போன படத்தில் கதிரேசன் என்ன அவஸ்தை பட்டாரோ, அதை விட 2 மடங்கு அவஸ்தை சி.வி.குமாருக்கு இப்படத்தில் இருந்தது. அனைத்தையும் தாண்டி இப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டிய சூழ்நிலையில் சி.வி.குமார் இருந்தார்.
1 கோடி, 2 கோடி படம் எடுத்தவரை இப்படத்தில் 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். சொன்ன பட்ஜெட் என்பது வேறு. இப்படத்தை பார்க்கும் போது யாருக்கு வலியோ இல்லயோ, கார்த்திக் சுப்பராஜை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்தது. சி.வி.குமாரின் வேதனை நமது அனைவருடைய வேதனையை விட தாண்டிய வேதனை.
இதை கண்டிக்ககூடாது என்ற எண்ணம் சி.வி.குமாருக்கு கிடையாது. கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஞானவேல்ராஜா
அவசர செயற்குழு கூட்டம்
'இறைவி' படத்துக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருவதால், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
என்ன சொல்கிறது படக்குழு?
இது குறித்து 'இறைவி' படக்குழுவிடம் விசாரித்த போது, "படத்தின் கதைக்களத்தின் படி அவர் ஒரு தயாரிப்பாளர் அவ்வளவு தான். மற்றபடி நாங்கள் யாரையும் தவறாக சித்திரிக்க வேண்டிய எண்ணமில்லை. பல படங்களில் வக்கீல் தப்பு செய்வது போல காட்டுகிறார்கள். அதை நாயகன் தட்டிக் கேட்பது போன்று காட்சிகள் இருக்கிறது. உடனே வக்கீல்களை அவமதித்து விட்டார் என்று எப்படி சொல்ல முடியும்" என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்கள்.
இப்பிரச்சினை குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட யாருமே கருத்து சொல்ல மறுத்துவிட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT