Last Updated : 16 Feb, 2017 06:27 PM

 

Published : 16 Feb 2017 06:27 PM
Last Updated : 16 Feb 2017 06:27 PM

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் படம் வெளியானதால் கடும் பாதிப்பு: நடிகர் வேதனை

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் படம் வெளியானதால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக நடிகர் கார்த்திக் நாகராஜன் வேதனையும் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்புகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் லைட்மேன்களின் வாழ்க்கை தரம், மற்ற துறைகளைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளது, என்பதை கூறும் படமாக ‘லைட்மேன்’ அமைந்துள்ளது.

இப்படத்தில் நாயகனாக நடித்த கார்த்திக் நாகராஜன், "எங்கள் படம், ’லைட்மேன்’ பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தால் பிப்ரவரி 9 அன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டது.

ஒரு குழுவாக நாங்கள் எங்கள் நேரம், முயற்சி, பணம் என இந்தப் படத்தை உருவாக்க முதலீடு செய்திருக்கிறோம். இதன் நோக்கம் எங்கள் திறமைகளை காண்பிக்கவேண்டும் என்பதே. ஆனால் இந்த மாதிரி சில சமூக பொறுப்பற்றவர்களின் செயல் எங்கள் கனவுகளை புதைத்துவிட்டன.

இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? இதனால் பல விமர்சகர்கள் எங்கள் படத்தை விமர்சனம் செய்யவில்லை. பல நாளிதழ்கள் எங்கள் படம் பற்றி எதுவும் எழுதவில்லை. ஊடக மக்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கான சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்துவிட்டனர். அவர்கள், முடிந்த வரை படத்துக்கான ஆதரவு தந்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவி செய்வதாகக் கூறியுள்ளனர். இப்போது ஏற்கெனவே படம் கள்ளத்தனமாக இணையத்தில் கிடைப்பதால் இதுபற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக நாங்கள் போட்ட முயற்சி மிக அதிகம். தற்போது நாங்கள் கைவிடப்பட்டு தனியாக இருக்கிறோம். யாரென்று தெரியாத சிலர் திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு தொல்லை கொடுத்து எங்களையும் மோசமாக பாதித்துள்ளனர். இந்தப் படம் மக்களாலும், ஊடகங்களாலும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை சார்ந்தே எங்கள் தொழில்முறை வாழ்க்கை உள்ளது.

கதையின் நாயகனாக நான் நடித்துள்ள முதல் படம். இப்படியான கள்ளத்தனத்தால், அதுவும் வெளியீட்டுக்கு முன்பே, பாதிக்கப்பட்டுள்ளது எனக்கு வேதனையளிக்கிறது. 2005-ம் ஆண்டிலிருந்து திரைத்துறையில் எனக்கான ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சியும் காத்திருப்பும் இப்போது நசுக்கப்பட்டுவிட்டது. எதிர்காலம் பிரகாசமாக இருந்து மக்கள் இந்த கள்ளத்தனத்தை ஆதரிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். நிஜமாக இது ஒருவரது தொழிலை பாதிக்கிறது" என்று வேதனையுன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x