Published : 06 Jun 2016 06:47 PM
Last Updated : 06 Jun 2016 06:47 PM

இது நம்ம ஆளு முதல் பில்லா ரீமேக் வரை: ரசிகர்களுக்கு சிம்பு அளித்த பதில்கள்

'இது நம்ம ஆளு' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரசிகர்களுடன் PERISCOPE மூலமாக வீடியோ வடிவில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு சிம்பு அளித்த பதில்களின் தொகுப்பு:

"'இது நம்ம ஆளு'வெற்றியைப் பற்றி எல்லாம் ஒன்று நினைக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், படம் நன்றாக போகிறது என்பதில் தான் எனக்கு சந்தோஷம். செல்வராகவன் சார் இன்னொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் முடித்துவிட்டு வந்தவுடன் 'கான்' படம் தொடங்கப்படும்.

உடல் எடையை படத்துக்காக கூட்டியிருக்கிறேன். எப்போதுமே ஒல்லியாக தான் இருப்பேன். 'சிலம்பாட்டம்' நேரத்தில் ஒரு பாத்திரத்துக்கு என்னால் எடையைக் கூட்ட முடியாமல் போனது. இப்போது வயதானதால் உடல் எடை அதிகமாகிவிட்டது என நினைக்கிறேன். ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஒரு பாத்திரம் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் எடையை குறைக்க இருக்கிறேன்.

திருமணம் செய்யலாம் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். பெண் வருகிற அன்றைக்கு வரட்டும். அமீர் சார் படம் இருக்கிறது. அவர் மற்றொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் அடுத்தாண்டு அவருடன் படம் பண்ணுவேன்.

'வேட்டை மன்னன்' படத்தில் பிரச்சினை தயாரிப்பாளர் தான். அவர் பண்ணுங்கள் என்றால் நாங்கள் பண்ண தயாராக இருக்கிறோம். LOVE ANTHEM பொறுத்தவரை அதில் ஒரு பெண் குரல் இருக்கிறது. அதில் சர்ப்ரைஸ் இருக்கிறது. அதை முடித்தவுடன் வெளியிட்டு விடுவேன். 'மன்மதன் 2' பண்ண நேரமே இல்லை.

விஜய் எனக்கு அண்ணன் மாதிரி. சின்ன பையனாக இருந்ததில் இருந்தே தெரியும். நான் அஜித் ரசிகனாக இருப்பதால், விஜய் அண்ணாவுடன் நான் எவ்வளவு க்ளோஸ் என்பது தெரியாது. நான் அதைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. விஜய் அண்ணாவுக்கு நான் எவ்வளவு க்ளோஸ் என்பது அவருக்கு தெரியும்.

வித்தியாசமான கதைகள் எல்லாம் யோசித்து வைத்திருக்கிறேன். அதை தமிழில் பண்ண முடியுமா என்று பிரச்சினை இருக்கிறது. வருங்காலத்தில் பண்ணுவேன். ரஜினி சார் மற்றும் அஜித் சார் இருவருடன் நடிப்பேன். ஆனால் அதே மாதிரி கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தனுஷ் ஒரு நல்ல நடிகர், எனக்கு நல்ல நண்பர். தலைவர் ரஜினி படம். 'கபாலி' படத்தை முதல் நாள் பார்த்துவிடுவேன்.

அடுத்தாண்டு இறுதியில் தலைவர், தல பண்ணிய 'பில்லா' படத்தை பண்ணவிருக்கிறேன். 'ப்ரேமம்' ரீமேக் பண்ணும் அளவுக்கு நேரமில்லை. நான் இசையமைக்கலாம், ஆனால் அனைத்து இசையமைப்பாளர்களும் எனக்கு நல்ல நண்பர்கள். அதனால் நான் இசையமைக்கவில்லை.

'இது நம்ம ஆளு' படத்தில் நடித்ததிற்கு நயன்தாராவுக்கு நன்றி தான் சொல்லணும். இந்த வெற்றிக்கு அவங்களுக்கு ஒரு காரணம்" என்று தெரிவித்தார்.

'பில்லா' ரீமேக் இணைந்த வெங்கட்பிரபு

சிம்புவின் 'பில்லா' அறிவிப்பு வெளியானவுடன், இயக்குநர் வெங்கட்பிரபு "நான், யுவன், நீங்கள் இணைப்பில் 'பில்லா 2018'. என்ன சொல்கிறீர்கள். நான் தயார்" என்று ட்விட்டர் தளத்தில் கேட்டார். அதற்கு சிம்பு "பொறந்ததில் இருந்தே ரெடி.கண்டிப்பாக" என்று வெங்கட்பிரபுக்கு பதிலளித்தார்.

சிம்புவின் பதிலால் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 2018' உருவாகும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ரசிகர்களுடன் சிம்பு உரையாடியது வீடியோ வடிவில்!