Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM
சினிமா அதன் மரியாதையை இழந்துவிட்டது. ஆனால், அது மேலும் மேலும் புகழ்பெற்று வருகிறது. இது ஒரு முரண்பாடு அல்லவா?
சினிமா புகழ்பெற்றுத்தான் வருகிறது. அப்படித்தான் நடக்கும். ஏனென்றால், இது ஒரு வலுவான ஊடகம். இனிமேல் சினிமா தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு மட்டுமானதல்ல. சினிமா என்ற வடிவத்தின் சகலக் கட்டமைப்புகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. சினிமாவை நுகரும் வழிமுறைகளும் மாறியிருக்கின்றன. ரசிகர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது மாறும். சினிமா கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளி குறைந்திருக்கிறது. ஆண்டி வார்ஹோல் சொன்னது போல், “ எல்லோரும் அவர்களுடைய வாழ்வில் 15 நிமிடங்கள் புகழ் அடைவார்கள்’’ என்ற விதி சினிமாவுக்குப் பொருந்தும் .
இப்போது இணைய யுகத்தில், அனைவரும் தங்களுக்கான சினிமாவை உருவாக்க முடியும். இதுதான் வருங்காலத்தின் பொழுதுபோக்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1970களில் தமிழ் சினிமாவில் பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா மூலம் ஒரு புதிய போக்கு உருவானது. சினிமா ஸ்டுடியோக்களின் வரையறையைத் தாண்டி சினிமா வெளியே வந்து மக்களை நெருங்கியது. இந்தப் போக்கு தொடராமல் போனதற்கோ அல்லது தடங்கல் ஏற்பட்டதற்கோ என்ன காரணம்?
எப்போதுமே சினிமா எனும் ஊடகத்திற்குத் தடை இருந்துகொண்டேதான் இருக்கிறது. அது வர்த்தக ரீதியான தலையீடுதான். அமெரிக்காவையே எடுத்துக்கொள்ளுங்கள். அத்தனை பெரிய நாட்டிலேயே சினிமா பெரும் வர்த்தகமாகத்தான் உள்ளது. போர்களும்கூட வர்த்தகக் காரணங்களால்தான் நடக்கின்றன. அதே விஷயம் எல்லாத் துறைக்கும் பொருந்தும். நான் வர்த்தகத் துறையினரைக் கேலி பேசவில்லை. வர்த்தகர்கள் சினிமா வடிவத்தை எளிமையாக்க விரும்புகிறார்கள். தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுபதுபோல, நகல் செய்யக்கூடிய சிறந்த மாதிரியான சினிமாவை எடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சினிமா அப்படியான வடிவம் அல்ல.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் சகலகலா வல்லவனும் , முரட்டுக்காளையும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தன அல்லவா?
ஆம். எங்கும் எப்போதும் இதுதான் சிறந்தது என்று வர்த்தகர்கள் நினைக்கிறார்கள். உங்களுக்கே தெரியும். நான்கு பாடல்கள், ஐந்து சண்டைகள், கொஞ்சம் கதை. இதுவே போதுமானதாக இருக்கிறது. வர்த்தகர்களிடம் ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. 200 பேர் வேலைக்கு இருக்கிறார்கள். தொடர்ந்து சினிமாவை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒருபோதும் சினிமா அடையும் மாற்றத்தில் பங்குதாரர்களாக இருக்க மாட்டார்கள்.
சினிமா துறையில் உருவான களைகளை அகற்ற மறந்துவிட்டோம். அதனால்தான் இங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்குத்தான் அரசு தலையிட வேண்டும். 57 ஆண்டு காலம் மாறாமல் இருக்கும் சினிமா சட்டத்துடன் போராடிவருகிறோம். இதேபோலத் தணிக்கை முறையும் மாற வேண்டும். குழந்தைகளுக்காகப் படம் எடுப்பதை நாம் நிறுத்தி விட்டோம். எல்லோருக்குமான சினிமா என்ற வணிகக் கணக்கு வந்துவிட்டது. பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களைக் குழந்தைகளுக்கான படங்களாக எடுக்கிறோம். குழந்தைகளுக்கான தர்க்கத்துடன் பெரியவர்களுக்கான படங்களை எடுக்கிறோம்.
இன்றைய இணைய உலகில், போர்னோகிராஃபி அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இணையத்தில் தேடுதல் பொறிகள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த ஊடகங்களாகிவருகின்றன. இதற்குக் காரணம் அறிவியல் அல்ல. சதை மீதான மனிதனின் ஆவல்தான் முக்கியமான காரணம். இணையத்தில் உள்ள அந்தப் படங்கள் இன்னும் சட்டபூர்வமாக்கப்படவில்லை.
குறிப்பிட்ட வயதுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மது விற்க மாட்டேன் என்று சொல்வதுபோல, வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு இருக்கத்தான் வேண்டும். வயது வந்தவர்களை நாம் வயது வந்தவர்களாக நடத்த வேண்டும். நான் செக்ஸ் பற்றி பேசவில்லை. அரசியல் பேசுகிறேன். அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியார் காலத்தில் இருந்த சுதந்திரம் கமல் ஹாசன் காலத்தில் இல்லை.
தெனாலி படத்தில் ஈழத் தமிழர்களின் துன்பங்கள் பற்றி பேசப்பட்டது. அந்த விஷயத்தை நான் நுட்பமாகக் கையாண்டேன். மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஈழப் பிரச்சினையின் ஒரு பக்கத்தைக் காட்டியது. அப்பிரச்சினையின் இன்னொரு பரிமாணத்தை எடுக்க நினைத்தால் அதற்கு அனுமதி கிடைக்காது. அதனால்தான் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான படம் எதுவும் இங்கு எடுக்கப்பட முடியவில்லை. ஒரு சினிமாக் கலைஞனாக எனக்குக் கருத்து சுதந்திரம் இல்லை. பெரியார், ஜெயகாந்தன் போன்றவர்கள் அனுபவித்த சுதந்திரம் தற்போது இல்லை.
நன்றி: ஃப்ரண்ட்லைன் சினிமா சிறப்பிதழ், அக்டோபர் 18, 2013|
தமிழில்: கார்த்திக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT