Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM
ஒரு திருமணத்தில் நாயகன் கௌதமும் (கௌதம் கார்த்திக்) நாயகி நித்தியாவும் (ராகுல் ப்ரீத் சிங்) சந்தித்துக்கொள்கிறார்கள். இரண்டு பேருமே மணமக்களை வாழ்த்த வரவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை கௌதம் காதலித்த பெண்ணின் திருமணம்தான் இது.
நித்தியாவைக் கழற்றி விட்டவன்தான் மணமகன். தங்களை விட்டுப் பிரிந்தவரைச் சபிப்பதற்காகத் திருமணத்திற்கு வந்திருக்கும் கௌதமும் நித்யாவும் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். பாதிக்கப்பட்ட இந்த இருவருக்கும் இடையில் காதல் முளைத்ததா, இருவரும் இணைந்தார்களா என்பதுதான் கதை.
நானி, நித்யா மேனன் நடிப்பில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கமே இந்தப் படம். கதாநாயகன், கதாநாயகி இடையில் ஏற்படும் காதலை, ஒரு கட்டத்தில் அவர்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதனால் வரும் குழப்பமும், அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளும்தான் திரைக்கதையில் அடுத்தடுத்த திருப்பங்களைக் கொண்டு வருகின்றன.
இதில் இயக்குநர் கைவைக்கவில்லை. ஆனால் நாயகன், நாயகியின் பெற்றோர் கதாபாத்திரங்களை தமிழ் மனப்பாங்குக்கு ஏற்ப மாற்றியிருக்கலாம். மகன் நண்பர்களோடு பப்பில் அடிக்கடி மது அருந்துவதை அனுமதிப்பது, ஒவ்வொரு முறையும் அடுத்தடுத்து வேறு பெண்ணைக் காதலிக்க முனை வதைக் கண்டிக்காமல் இருப்பது என்று கௌதமின் அம்மா கதாபாத்திரம் இடிக்கிறது.
அடுத்தடுத்து வேவ்வெறு ஆட்க ளுடன் காதல் ஏற்படுவதையும், அது முறிந்துபோவதையும் சரியான கால அவகாசத்துக்கு இடையில், லாஜிக் இடிக்காமல் சித்தரித்திருந்தாலும், கடைசியில் இந்த ஜோடிதானே இணையப்போகிறது என்ற சஸ்பென்ஸ் ஆரம்பத்திலேயே உடைந்துவிடுவதால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பெருமூச்சு விட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங், திஷா பாண்டே, பிரபு, அனுபமா, அழகம்பெருமாள் என்று கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரவி தியாகராஜன். நடிகர்களும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்தி ருக்கிறார்கள். குறிப்பாக கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங் இருவரும் இளமைத் துடிப்பு மிக்க நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
காட்சிகளை ‘ரிச்’சாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். காதலும் காதல் முறிவும் திரும்பத் திரும்ப வந்து அலுப்பூட்டினாலும் அந்த அலுப்பை மறக்கடிக்கிறது இமானின் துள்ளலான இசை. ஒரு பாடல்கூடச் சோடை போகவில்லை. பின்னணி இசையிலும் குறையில்லை.
தெலுங்கு தேசம் பக்கத்து வீடுதான். என்றாலும் அங்கிருந்து மறு ஆக்கத்திற்குத் தேர்ந்துகொள்ளும் கதையில் எதை நீக்கலாம், எதைச் சேர்க்கலாம் என்று ஆராய்ந்து மூலக்கதையின் ஆன்மா கெட்டுவிடாமல் திரைக்கதை அமைக்க வேண்டிய சவால் இருக்கிறது.
அதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார். தமிழ் ரசனைக்கும் சூழலுக்கும் ஏற்பச் சில காட்சிகளை நீக்கியும் சிலவற்றைச் சேர்த்தும் படத்தை மெருகேற்றியிருக்கலாம். வசனங்களிலும் தமிழ் வாசனை குறைவு. இவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் ‘என்னமோ... ஏதோ…’ என்று அலுப்புடன் சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT