Published : 24 Jul 2016 09:04 AM
Last Updated : 24 Jul 2016 09:04 AM

ஜெயம் ரவி வில்லன்; அரவிந்த் சாமி நாயகன்: ‘போகன்’ பற்றி இயக்குநர் லக் ஷ்மன்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுக மானவர் லக்‌ஷ்மன். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் இணைந்து தற் போது ‘போகன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். பட வேலைகளில் பரபரப்பாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

‘போகன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. இதில் முதல் பாதியில் அரவிந்த் சாமி வில்லன் - ஜெயம் ரவி நாயகன். இரண்டாம் பாதியில் ஜெயம் ரவி வில்லன் - அரவிந்த்சாமி நாயகன். அது எப்படி என்பதை நீங்கள் திரையில்தான் பார்க்க வேண்டும். இதற்கு மேல் நான் ஏதாவது கூறினால் படத்தின் கதையைக் கூறியதுபோல் ஆகிவிடும்.

இப்படத்தின் கதையை இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வருகிறார்களே?

இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என நினைக்கிறேன். தினமும் ‘போகன்’ படத்தைப் பற்றி ஒவ்வொரு கதை எழுதுகிறார்கள். அவை அனைத்துமே நன்றாக இருக்கிறது. அதில் ஒன்றை ‘போகன்’ படத்தின் இரண்டாவது பாகத்துக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

இப்படத்தில் முதலில் ஜெயம் ரவியுடன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதே?

உண்மைதான். இக்கதையை எழுதும் போது அரவிந்த் சாமி என் மனதில் இல்லை. மேலும் சமீபத்தில் அரவிந்த் சாமி நடித்த ‘தனி ஒருவன்’ மிகப் பெரிய வெற்றிப்படம். இந்நிலையில் ‘போகன்’ படத்தில் அவர் நடித்தால் ரசிகர்கள் 2 படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்களோ என்று தயங்கினேன். ஆனால் ஜெயம் ரவிதான், “இப்படத்தின் கதையே வேறு மாதிரி இருக் கிறது. ‘தனி ஒருவன்’ படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. நீ ஏன் பயப்படுற?’ என்று தைரியம் கூறினார்.

அரவிந்த் சாமியை சம்மதிக்க வைத்து காட்சிப் படுத்தியவுடன் “நல்லாயிருக்குடா.. எனக்கு செட் ஆகுது. புதுசா இருக்கு!” என்றார். இதுவரைக்கும் அரவிந்த் சாமி சார் ரொம்ப ஹை-பை படங்களையும் செய்திருக்கிறார், படு லோக்கலான படங்களையும் செய்திருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படம் வேறு மாதிரியாக இருக்கும். எனக்கு அரவிந்த் சாமி சாருடன் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. அவரை வைத்து ஒரு ஹாலிவுட் படமே இயக்கலாம். அவருக்கு எந்த இடத்தில் வைத்து எப்படி காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என தெரிந்திருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

ஏற்கெனவே ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த உங்களுக்கு மீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா?

பணம் இருக்கும்போது கண்டிப்பாக பண்ணு வேன். நான் உண்மையில் ஒரு சோம்பேறி. இயக் குநராக நிறைய உழைக்க வேண்டும். ஒரு கதைக்கு 2 வருடங்கள் உழைத்து, யோசித்து எழுதி சரியாக கொண்டு வர வேண்டும். ஆனால், தயாரிப்பாளராவது அத்தனை கஷ்டமில்லை. நாம் கேட்கும் கதை எப்படியிருக்கிறது என்று முடிவு செய்தாலே போதும். உண்மையில் 'கள்வனின் காதலி' வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக நான் தயாரிப்பாளராகி இருப்பேன்.

உங்கள் குருநாதர் எஸ்.ஜே.சூர்யா நடிகராகி விட்டாரே?

திரையுலகுக்குள் அவர் வந்ததே நடிக்க தான். வாய்ப்பு தேடி அலைந்தபோது யாருமே அவரை தூக்கிவிடவில்லை. அப் போதுதான் அவர் இயக்குநரானார். ரசிகர் களுடைய பார்வையில் ஒரு அற்புதமான இயக்குநர், அவருடைய பார்வையில் அவர் ஒரு அற்புதமான நடிகர். அவரை மக்கள் உள்ளுக்குள் ரசித்தாலும், அவருக்கான கதைகள் சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர்.

உங்கள் முதல் 2 படங்களிலும் ஜெயம் ரவி தான் நாயகன். 3 வது படத்தையும் அவரை வைத்துதான் இயக்குவீர்களா?

உதாரணத்துக்காக ஒரு விஷயம் சொல்கிறேன். ஒருவேளை ரஜினி சார் என்னை அழைத்து ஒரு படம் இயக்கச் சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் ஜெயம் ரவி என்னை அழைத்து அவருக்காக ஒரு படத்தை இயக்கச் சொன்னால் கண்டிப்பாக ஜெயம் ரவி படத்தைத்தான் இயக்குவேன். ஏனென்றால் பல பேர் என்னுடைய கதையை நம்பவில்லை. ஆனால் ரவி சார் மட்டும்தான் என்னை நம்பி உன்னால் முடியும் என்று ஊக்கமளித்தார். அவரை கடவுளுக்கு அடுத்தபடியாக நான் வைத்திருக்கிறேன். அவர் எப்போது அழைத்தாலும் நான் படம் பண்ண தயாராக இருப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x