Published : 17 Feb 2017 04:40 PM
Last Updated : 17 Feb 2017 04:40 PM
கார்த்திக் நரேன் இயக்கவுள்ள ’நரகாசுரன்’ கதையில் அரவிந்த்சாமியோடு நாக சைத்தன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தனது அடுத்த படம் 'நரகாசுரன்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெரிவித்தார் கார்த்திக் நரேன்.
அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை, இயக்குநர் கார்த்திக் நரேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், "மற்றொரு முக்கிய கதாபாத்திரத்துக்கு நாக சைத்தன்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கார்த்திக் நரேன். கவுரவ கதாபாத்திரமாகயின்றி, படம் முழுவதும் வருவது போன்று அரவிந்த்சாமிக்கு இணையான முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்" என்று கார்த்திக் நரேனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாக சைத்தன்யா. முழுநீள கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் முதல் படமாக 'நரகாசுரன்' அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தயாரிக்கவுள்ளார் கவுதம் மேனன். படக்குழுவினர் தேர்வு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT