Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

இயக்குநர் பாலு மகேந்திரா உடல் தகனம்

ஒளிப்பதிவாளரும், இயக் குநருமான பாலுமகேந்திராவின் இறுதிச் சடங்குகள் சென்னை போரூர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அவரது இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் ஆயிரக் கணக்கான பொது மக்களும், திரைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாலு மகேந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினரின் அஞ்ச லிக்காக சென்னை தசரதபுரத்தில் உள்ள ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை’ ஸ்டுடியோவில் வைக்கப் பட்டிருந்தது.

பாலுமகேந்திரா காலமான செய்தி அறிந்ததும் திரைத் துறையைச்சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக கண்ணீரோடு வந்து குவிந்தனர். இயக்குநர்கள் மகேந்திரன், பாலசந்தர், மணிரத்னம், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல், விஜய், தனுஷ் உள்ளிட்ட திரைப்படத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி மௌனிகா, வெள்ளிக்கிழமை காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.

பாலுமகேந்திராவின் இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு அவரது சினிமா பட்டறையிலிருந்து புறப்பட்டது.

இதில் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, பாலா, அமீர், சீமான், வெற்றிமாறன், ராம் மற்றும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குநர்களும், உதவி ஒளிப்பதிவாளர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பாலுமகேந்திராவின் உடல் அலங்கார வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணியளவில் போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x