Published : 18 Oct 2013 10:54 PM
Last Updated : 18 Oct 2013 10:54 PM
'ஜன்னல் ஒரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பல ஆச்சர்யங்களோடு நடந்து முடிந்திருக்கிறது.
விமல், பார்த்திபன், மனிஷா, பூர்ணா நடிப்பில் 'ஜன்னல் ஒரம்' படத்தினை இயக்கி முடித்திருக்கிறார் கரு.பழனியப்பன். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பேருந்தின் ஒட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பந்தப்பட கதை என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவினை வித்தியாசமாக நடத்தினார்கள். படக்குழு சென்னை வடபழனி பஸ் டிப்போவில் இருந்து ஒரு பஸ்ஸில் கிளம்பி தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பஸ் ஸ்டாப்புகளுக்கு சென்று படத்தின் பாடல்கள் சி.டியை மக்களுக்கு விநியோகித்தார்கள்.
இறுதியாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சூர்யா, அமீர், விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சூர்யா படத்தின் இசையை வெளியிட்டார்.
'மெளனம் பேசியதே', 'பருத்தி வீரன்' ஆகிய படங்களின் போது ஏற்பட்ட பிரச்சினையால் சூர்யா, அமீர் இருவருமே எந்த விழாவிலும் சேர்ந்து கலந்து கொண்டதில்லை. ஆனால் இவ்விழாவில் இருவருமே அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவ்விழாவில் பேசிய இயக்குநர் அமீர்,” இவ்விழாவில் நான் ஒருத்தருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். சூர்யாவுக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம். நான் இன்றைக்கு ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக இந்த மேடையில நிக்கறன்னா அதுக்குக் காரணம் சூர்யா.
என்னை முதன் முதலா இயக்குநர்னு நம்புனது சூர்யாதான். நான் இதை கிட்டத்தட்ட 12 வருஷம் கழிச்சி சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. முதல் படம் ‘மௌனம் பேசியதே’வுக்குப் பிறகு நானும், அவரும் மேடைகள்ல சந்திக்கவே இல்லை என்பதுதான் உண்மை.
எங்க இரண்டு பேருக்கும் இடையில் வழக்கமான பேச்சோ, சந்திப்போ இருந்ததில்லை. தமிழ்நாட்டுல ரஜினிகாந்த் சாருக்கு அப்புறம் மக்கள் குடும்பத்தோட போய் பார்க்கற படம் சூர்யாவோட படம்தான். அதை நானே பார்த்திருக்கிறேன். அதை சூர்யா எந்த அளவுக்கு கவனிச்சிருக்காருன்னு தெரியலை.
ஆனால், அவரு என்னடான்னா ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ன்னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள்ல நடிச்சிட்டிருக்காரு. என்னைப் பொருத்தவரைக்கும் நான் எப்படி பார்க்கிறன்னா அவரை ஒரு ‘அமீர்கான்’ மாதிரி பார்க்கிறேன்.
ஏன்னா, அமீர்கான் பண்ற படங்கள் மாதிரி இங்க சூர்யாவால மட்டும்தான் பண்ண முடியும். அதனால, என்னுடைய முதல் பட நாயகன் கிட்ட, என் நண்பன் கிட்ட நான் கேட்டுக்கிறது என்னன்னா, நீங்க குடும்பக் கதைகள்லயும் நடிக்கணும். இவ்வளவு நான் சொன்னதும், உடனே என் படத்துல அவர் நடிக்கிறாரான்னு கேட்டுடாதீங்க.
அதை மாதிரி படங்கள் பார்க்கிறதுக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க. கொடுக்கிறதுக்குத்தான் ஆளில்லை. என்கிட்ட கூட கரு. பழனியப்பன் ‘பாண்டிய வம்சம்’னு ஒரு கதை சொல்லியிருக்காரு. அற்புதமான கதை, அந்தமாதிரியான கதைகள்ல சூர்யா நடிக்கணும். கொஞ்சம் டைம் இருந்தா கேளுங்க சூர்யா” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து சூர்யா “ கண்டிப்பா கரு.பழனியப்பன் கதையை கேட்கிறேன். நல்ல உறவுகள் பாதிக்கப்படக் கூடாதுன்னு சமீபத்துல ஒரு முடிவு எடுத்தேன். அந்த உறவு பிரியாது, அந்த உறவு நிச்சயமாக இருக்கும். அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தருக்கொருத்தர் மேல மரியாதை இருக்கு..
ஆக்ஷன் படங்களைத் தாண்டி நிச்சயமா யோசிச்சிட்டு இருக்கேன். ஒரு படம் முடிக்க ஒரு வருடம் ஆகிடுது. 'மாற்றான்', 'ஏழாம் அறிவு' வேற மாதிரி யோசிச்சிதான் பண்ணினேன். அமீர் அவரகள் சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது.
இப்ப வரைக்கும் மௌனம் பேசியதே எல்லாரும் சொல்லிட்டிருக்காங்க. அதை மாதிரி ஒரு படம் பண்ண முடியுமான்னு எல்லாரும கேட்டுட்டிருக்காங்க.. எனக்கு தெரியலை, ஏதாவது செய்ய முடியனும்னு நானும் விரும்பறேன்,” என்றார்.
எப்போதுமே தனது பேச்சில், சுவாரஸ்யம் கலக்கும் கரு.பழனியப்பன், “ஏன்னா எதையாவது பேசி, யாரையாவது சிக்கல்ல மாட்டி விடுறது அமீருக்கு தினசரி வாடிக்கை. அதுக்காகத் தான் நான் பேசுறேன்.
நானும், சூர்யாவும் எந்த படமும் சேர்ந்து வேலை செஞ்சதில்லை, அவர் நடிச்ச படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா கூட இருந்ததில்ல. அப்படியிருந்தும் கூட தமிழ்நாட்டுல சூர்யாவோட காதலை நான் ஏன் புரிஞ்சிக்கிட்டேன்னா என்னோட திருமணத்துல அவர் முதல் ஆளா வந்து கலந்துகிட்டது தான்.
அதன்பிறகு விஷாலை வைத்து ஆரம்பிச்ச ‘சிவப்பதிகாரம்’ படத்தை துவங்கி வெச்சது சூர்யா தான். அதன்பிறகு நான் இந்த ‘ஜன்னல் ஒரம்’ விழாவுக்கு ஒருமுறை கூட மரியாதை நிமித்தமா அவரை அழைக்கவில்லை. என்னோட தயாரிப்பாளர் தான் அழைத்திருந்தார்.
அப்போ எந்த படமும் பணிபுரியாமலேயே, எனக்கும் சூர்யாவுக்கு இப்படி ஒரு நட்பு இருக்குமானால் பணிபுரியாமலேயே இந்த நட்பு தொடர வேண்டும் என்று டைரக்டர் அமீரைக் கேட்டுக் கொள்கிறேன்.
படங்களை டைரக்ட் செய்வதை விட நெறைய மனிதர்களை சம்பாதிப்பது தான் நல்லது. அந்த வகையில் சூர்யாவை சம்பாதிச்சிருக்கேன்னு நம்புறேன் “ என்றார்.
அமீர் இயக்கத்தில் சூர்யா என்று இன்னும் சில மாதங்களில் செய்தி வரலாம். எதுவும் சாத்தியம்.. சினிமாவில்.!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT