Published : 18 Feb 2014 03:45 PM
Last Updated : 18 Feb 2014 03:45 PM
ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
'குக்கூ' படத்தின் இசையை நடிகர் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். படத்தின் டிரெய்லரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக் கொண்டார்.
இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், பாண்டிராஜ், அட்லீ, கார்த்தி சுப்புராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
அவ்விழாவில் படத்தின் இசையை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,
"நான் உழைப்பிலும், சிந்தனையிலும் அதிகளவு நம்பிக்கை உடையவன். அந்த உழைப்பையும், சிந்தனையும் நான் பார்த்த காட்சியிலே பார்க்கிறேன். கதை புலப்படுகிறது. கதாபாத்திரங்களுக்கு கண் தெரியவில்லை என்றாலும், அவர்கள் காட்சியை நோக்கி நமக்கு கண் திறக்கிறது.
நாவல்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயங்கள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று குரல் எழுப்பி கொண்டிருந்த கூட்டம் இருந்தது. நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தான். பெரிய தயாரிப்பாளர்கள் காதில் விழாவிட்டாலும், நல்ல சிந்தனையாளர்கள் காதில் விழத்தான் செய்திருக்கிறது. அதற்கான அடையாளம் தான் 'குக்கூ'
வைக்கம் முகம்மது பஷீர் பற்றி ராஜுமுருகன் பேசியதில் இருந்தே எனக்கும் அவரை பிடித்துவிட்டது. இன்னும் நல்ல படங்களை ராஜுமுருகனிடம் எதிர்பார்க்கலாம். 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதற்காக வடநாட்டிற்கு சென்றுவிட்டு வந்ததால் தாமதமாக வந்து சேர்ந்தேன்.
என் ஊரில் என் தம்பிமார்கள் இதே போன்ற சினிமாக்களை எடுத்து வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்து கோவிலில் சிலுவை போட்டவனிடம் விபூதி அடிக்கும் பூசாரி முதலில் எனது மனதில் தங்கிவிட்டார். அதைப் போல நிறைய காட்சிகள் இருக்கிறது. கண் இல்லாதவர்கள் காற்றைத் தொட்டு பார்க்கும் காட்சி அதற்கு சான்று. அதைப் பார்க்கும் போது வைரமுத்து கவிதை தான் ஞாபகம் வருகிறது. ”உங்களுக்கு எல்லாம் ரெண்டு கண்கள். எங்களுக்கு எல்லாம் இருபது கண்கள். இருபது நகக் கண்கள்” என்று எழுதியிருப்பார். தினேஷ் அவர்களின் பயிற்சி, தேடல் எல்லாம் மாறுபட்டு நடிக்க வேண்டும் என்று மாறுக்கண்ணோடு நடித்தது உட்பட. தினேஷிற்கு என் வாழ்த்துகள்.
முக்கியமாக ராஜுமுருகனிடம் தொடங்கி தொழில்நுட்பக் குழு, நட்சத்திரங்கள் என்பது கிடையாது என்பது தான் உண்மை என்றாலும் வர்த்தகம் நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானது தான் நாங்கள் எல்லாம். ஆனால் உண்மை இதன் அடிநாதம் என்று பார்க்கும் பொழுது உண்மையான திறமையும், தொழில்நுட்பமும் தான் என 100 வருட திரையுலகம் நிரூபத்து வருகிறது. அந்த திறமைக்கு தான் சூர்யா வணங்கினார். அவர் வணங்கியது போன்று எல்லாருமே வணங்க வேண்டும்.
சூர்யாவை பொறுத்தவரை எனக்கு ரெட்டை வேஷம் தான். சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தான். அப்பா சிவக்குமார் இருந்தார்ன்னா சித்தப்பாவா மாறிடுவேன். இல்லன்னா அவருக்கு கோபித்துக் கொள்வார். நான் தானே அண்ணன், நீ எப்போ எனக்கு மகன் ஆனே.. என் வயசை எதற்கு கூட்டுறனு கோபிச்சுகுவார். அதனால ரெண்டுமே நான் தான். சூர்யாவின் முயற்சியையும் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.
தகுதியானவர்களுக்கு கிடைத்த வெற்றி எல்லாம், அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல என்று ஒரு பழமொழி உண்டு. இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம், டிரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்கள் மனதில் உருவாக்கும் என்று நான் எண்ணுகிறேன். இப்போது எல்லாம் நல்ல நல்ல தமிழ் படங்கள் வருகிறதாமே என்று என்னிடம் மத்திய பிரதேசத்தில் கேட்டார்கள். அந்த பெருமையை சேர்த்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் ராஜுமுருகன்.
இங்கு வந்திருப்பவர்கள் அனைவருமே என் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். என் தகுதிக்கு சற்று மேலாக தான் என்னை பாராட்டுவார்கள். அதற்கு நன்றி சொல்வதோடு, அதற்கு என்னை தகுதியுள்ளவனாக என்னை இனிமேல் தான் ஆக்கி கொள்ள வேண்டும் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இன்னும் நிறைய தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும். நல்ல திறமைகளை ஊக்குவிப்பது புதிய பழக்கமல்ல. பல மாகாணங்களாக அதை ஹாலிவுட்டில் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை இங்கேயும் செய்வது நமக்கு பெருமை. தென்னகத் திறமைகள் உலகை நோக்கி பயணிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக நான் உணர்கிறேன்." என்று பேசினார்.
விழாவில் பேசிய இயக்குநர் ராஜுமுருகன், "'குக்கூ' படத்தின் கதைக்கு எனக்கு மிகவும் உதவிய முருகேசனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறி அவரை மேடையில் அழைத்து மரியாதை செய்தார். அதுமட்டுமன்றி இளங்கோ, நந்தினி என்ற இரண்டு நிஜமான பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகளை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ”2014ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம் 'கோலி சோடா' தான்.” என்று கூறினார்.
'கண்ணு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயும் இருக்கான். மனசு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயுமா இருக்கான்?' உள்ளிட்ட டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT