Published : 20 Apr 2014 09:52 AM
Last Updated : 20 Apr 2014 09:52 AM
வடிவேலுவின் மறுபிரவேசமாக அமைந்திருக்கும் தெனாலி ராமனில் புதிய இயக்குநர் யுவராஜ் தயாளன் பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹாஸ்யம் கலந்த அறிவு சாகசம் என்பதை வைத்து வடிவேலுவின் பாத்திரத்தை வடிவமைத்துள்ள அவர் அதற்குத் தோதான தெனாலிராமன் பாத்திரத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்.
வெகுளித்தனம் கொண்ட ஒரு அரசன். அந்த வெகுளித்தனத்தைச் சாதகமாக்கி நாட்டைச் சீரழிக்கும் நயவஞ்சக அமைச்சர்கள். இவர்களுக்கு இடையில் இன்னொரு அமைச்சராக வரும் தெனாலிராமன் தன் சமயோசித புத்தியால் நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்கிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் படம்தான் ‘தெனாலிராமன்’. அரசனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு நடித்திருக்கிறார்.
அரசனின் ஒன்பது அமைச்சர்களில் எட்டுப் பேர் சீன அரசின் கைக்கூலிகள். கையூட்டு பெற்றுக்கொண்டு நாட்டைச் சீன வியாபாரத்துக்குத் திறந்துவிட ஒப்புக்கொள்கிறார்கள். அமைச்சர்களில் ஒருவர் மட்டும் நாட்டின் நலன் கருதி இதை எதிர்க்கிறார். அவரைச் சீன ஆட்கள் கொன்றுவிட, அந்த இடத்திற்கு வருகிறான் அகட விகட தெனாலிராமன்.
மக்கள் விரோத ஆட்சி நடத்திவருவதாக மன்னன் மேல் கோபம் கொண்டு அவனைக் கொல்லும் நோக்குடன் செயல்படும் தலைமறைவுக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தெனாலிராமன். இவன் கொஞ்சம் கொஞ்சமாக மன்னனின் நன்மதிப்பைப் பெறுகிறான். மன்னன் மோசமானவன் அல்ல என்பதையும் அமைச்சர்களே விலக்கப்பட வேண்டி யவர்கள் என்பதையும் தெரிந்து கொள்கி றான். கூடவே மன்னன் மகளையும் காதலிக்கிறான்.
சீனர்களின் வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். நாடெங்கும் பட்டினி பெருகுகிறது. ஆனால் அப்பாவியான அரசன், நாடும் மக்களும் நலமாக இருப்பதாக நம்புகிறான். தன் 36 மனைவிகள், 52 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறான்.
நாட்டின் நிலையை அரசனுக்குப் புரிய வைத்து நாட்டைச் சீராக்க தெனாலிராமன் முயல்கிறான். தெனாலிராமனின் முயற்சிகளை முறியடிக்க அமைச்சர்கள் சதித் திட்டம் தீட்டுகிறார்கள். தெனாலி ராமன் எப்படி அந்தச் சதியை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பதே மீதிக் கதை.
நமக்குத் தெரிந்த சரித்திரத் தெனாலி ராமன் கிருஷ்ண தேவராயர் கதை அல்ல இது. இருந்தாலும் புகழ் பெற்ற தெனாலிராமன் பாணியை வைத்து ஹீரோ தெனாலிராமனின் திறமையைச் சொல்லியிருக்கிறார்கள். காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் துணைக் கதைகள் நமக்குத் தெரிந்தவை (உதாரணமாக பானைக்குள் யானை வரும் கதை) என்பதால் அவை அதிக சுவாரஸ்யம் தரவில்லை. அதுபோல பிரதான திரைக்கதையினூடே சொருகப் படும் தெனாலிராமன் கதைகளும் தடைக் கற்களாகின்றன.
அப்பாவி மன்னன், அந்நிய வாணிபத்தின் தாக்குதல் என்பவை 23-ம் புலிகேசியிலேயே கையாளப் பட்டவைதான். மன்னனுக்கு எதிரான புரட்சி, அதில் மன்னனே பங்கு பெறுவது என்பவை எம்.ஜி.ஆரின் அரசகட்டளையில் வந்த விஷயங்கள். அவற்றை வடிவேலுவுக்கு ஏற்ற விதத்தில் மாற்ற யுவராஜ் முயற்சி செய்திருக்கிறார்.
பெரும் இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்துக்கொள்ள வடிவேலு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நவரசங்களையும் வெளிப்படுத்த வேண்டிய பாத்திரம். மற்ற விஷயங்கள் பரவாயில்லை. கதைகளை நிகழ்த்துவதில் வடிவேலுவின் திறமை பளிச்சிடுகிறது. ‘பானைக் குள் யானையைப் போடு’ என்று கேட்கும் காட்சியில் குழந்தைகள் குதூகலம் அடைவார்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு அறிவுரை சொல்லுவது அவருக்கு ஒத்துவரவில்லை. சமகால அரசியல் நெடி சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது.
மீனாட்சி தீட்சித்துக்குப் பெரிய பாத்திரம் இல்லை என்றாலும், தான் வரும் காட்சிகளைத் தன் அழகால் பிரகாசமாக்கிவிடுகிறார். தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பிற நடிகர்கள் தேவையானதை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ஆரூர்தாஸின் வசனங்கள் சில இடங்களில் தெறிக்கின்றன. வண்ண மயமான செட் கண்களுக்குக் குளுமை தருகிறது. அதை ராம்நாத் ஷெட்டி சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமானின் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை.
பெரிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்திருக்கும் படம் என்பதால் உருவான பெரும் எதிர்பார்ப்பைப் படம் ஓரளவு பூர்த்திசெய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT