Published : 08 Oct 2013 11:39 AM
Last Updated : 08 Oct 2013 11:39 AM

சடங்குகளை நாம் உதற முடியாது!

காதல் படங்களால் மூச்சு திணறுகிறது தமிழ்த்திரை. இந்தச் சூழ்நிலையில் கல்யாணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அனீஸ்! நாசரிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த அனீஸ், தி இந்துவுக்காக பேசினார்...

படத்தின் தலைப்பே திருமணம் எனும் நிக்காஹ் என்று இருக்கிறது. திருமணத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையா?

“இல்லை; இரண்டு கலாச்சாரங்களில் இருக்கும் சடங்குகளின் அழகியல்தான் கதைக்களம். ஒரு இஸ்லாமியத் திருமணத்தை முழுமையாக காட்டுகிறோம்.அதேபோல வடகலை ஐயங்கார் கலாச்சாரத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்தத்தைக் காட்டுகிறோம். இரண்டு சமூகங்களின் தனித்துவமான கலாச்சாரங்களில் பின்பற்றப்படும் சடங்குகளில் உள்ள அழகுகளும், அவற்றில் ஆச்சர்யகரமாக வெளிப்படும் ஒற்றுமைகளும்தான் இந்தப்படத்தின் பின்புலம்! அதேநேரம் ஒரு அழகான காதலைப் பேசும் படம் இது.”

ஒரு காதல் வழியாக சடங்குகளை பேசுவதன் மூலம் என்ன சொல்ல வருகீறீர்கள்?

“சடங்குகளை நாம் உதறமுடியாது. சடங்குகள் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் தருபவை என்பதை மறைமுகமாகச் சொல்ல நினைக்கிறேன். வழக்கமான காதல் படங்களில் இருப்பதுபோல அல்லாமல், காதலர்களின் சமூகப்பின்புலத்தையும், கலாச்சாரப் பின்புலத்தின் அழகையும், மிக சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சடங்குகளால் மனித வாழ்க்கை எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் பேச நினைத்தேன். அது மிக அழகாக வந்திருக்கிறது.”

காதலுக்கு எப்போதுமே மதம் எதிரிதான் என்பதையும் சொல்லிருப்பீர்கள் இல்லையா?

“நல்ல வேளை கேட்டீர்கள்! காதலுக்கு மதம் எந்த விதத்திலும் எதிரி அல்ல என்பதைச் சொல்லும் படம் இது. அது எப்படி என்பதுதான் சஸ்பென்ஸ்!”

கலாச்சாரப் பின்னணியை பேசும் படத்திற்கு பின்னணி இசை பெரிய சவாலாக இருந்திருக்குமே?

“ஆமாம்! இந்தப் படத்தின் இசைக்காக கொல்கத்தாவரை சென்று இசைக் கலைஞர்களைத் தேடிப் பிடித்தோம். ஜிப்ரான்தான் இசையமைப்பாளர். இஸ்லாமி யக் கலாச்சாரத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான சூஃபி இசையில் காதலைச் சொல்லும் ஒரு பாடலை, தமிழ்சினிமாவில் முதல்முறையாக கொண்டு வந்திருக்கிறோம். 300 ஆண்டுகளாக மகான் ‘அஜ்மீர் காஜா ஷெரிப்’ மீது பாடப்பட்டு வரும் மெட்டில் அமைந்த பாடல் அது.அதை வாழையடி வாழையாக பாடிவரும் சூஃபி பாடகர்களை வைத்தே பாட வைத்திருக்கிறோம்.

ஆறரைக்கட்டையில் ஜலதரங்கம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியபோது 95 வயது தமிழ்பாட்டி ஒருவர் கிடைத்தார். தள்ளாத முதுமையிலும் மிகச்சிறப்பாக ஜலதரங்கம் வாசித்து அசத்தினார் அவர்!. ஜலதரங்கம் போலவே கடமும் முக்கிய இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது! விக்கு விநாயக்ராமின் சகோதரார் கலை மாமணி சுபாஷ் சந்திரன் கடம் வாசித்துள்ளார்.”

கதாதாபாத்திரங்களுக்கான நடிகர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

“கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக ஜெய், நஸ்ரியா, ஹெப்பா ஆகிய மூன்று பேரையும் தேர்வு செய்தேன். ஜெய் ஐடி துறையைச் சார்ந்த இளைஞராக நடித்திருக்கிறார். இதற்கு முன் நீங்கள் பார்த்த ஜெய்யை இந்தப் படத்தில் கண்டிப்பாக பார்க்க முடியாது! அதேபோல நஸ்ரியா. தோழமையான அழகு இவரது மிகப்பெரிய பலம். இதைவிட மிக இயல்பாக, மிகையோ பிசிரோ இல்லாமல் நடிக்கும் ரகசியம் இவருக்கு தெரிந்திருக்கிறது! அடுத்து அந்தந்த கலாச்சாரங்களை பல புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறோம் இது கண்டிப்பாக படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது!”

உங்களைப் பற்றிச் சொல்லவே இல்லையே?

“நான் இந்த இடத்தில் நிற்பதற்கு நான்கு தரப்பினருக்கு நன்றி சொல்லவேண்டும். முதலில் நான் பாண்டிச்சேரி பல்கலைக்கழ கத்தின் நாடகத்துறை மாணவன். அங்கே எம்.ஏ, எம்.ஃபில் என்று நாடகத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களை முடித்தேன். எனது துறையின் ஆசிரியர்களால்தான் நான் இன்று திரையுலகில் நிற்கிறேன்.

எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வகுப்பு எடுக்க வந்த நாசரின் அறிமுகம் கிடைத்து அவரிடம் உதவியாளனாக சினிமா பயின்றேன். அவர் இயக்கிய படங்களில் மட்டுமல்ல... அவர் நடித்த படங்களுக்கும் அவரது உதவியாளனாக சென்று சினிமா நுட்பங்களை படித்தேன்.

நான் நேசித்து படித்து உருவான எனது பல்கலையில் இருந்தே பேராசிரியர் பணிக்கு உத்தரவு வந்தது! ஆனால் உங்களுக்கு பிடித்த சினிமாவிலேயே இருங்கள் என்று என்னை அனுமதித்த என் மனைவி முக்கியமானவர். சினிமா மீது தேர்ந்த ரசனை இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு படத்தை இத்தனை செலவு செய்து தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன்வர முடியும்! அந்தவகையில் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு என் நன்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x