Published : 26 Feb 2017 03:27 PM
Last Updated : 26 Feb 2017 03:27 PM

நடிகர் தவக்களை மாரடைப்பால் காலமானார்

'முந்தானை முடிச்சு' மூலம் அறிமுகமான நடிகர் தவக்களை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42.

பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் தவக்களை. சிட்டிபாபு என்ற பெயரை, அப்படத்துக்காக பாக்யராஜ் தான் 'தவக்களை' என மாற்றினார்.

கேரளாவில் மலையாள படமொன்றில் நடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். வடபழனியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.

இவருடைய சொந்த ஊர் நெல்லூர். 3 அடி உயரம் கொண்ட இவர் 'முந்தானை முடிச்சு' படத்துக்கு முன்பாக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாரியா' பாடலில் மட்டும் தோன்றியுள்ளார்.

'ஆண்பாவம்', 'காக்கி சட்டை', 'என் ரத்தத்தின் ரத்தமே', 'நல்ல பாம்பு', 'மதுரை சூரன்', 'நீங்கள் கேட்டவை' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

தெலுங்கில் மோகன்பாபு நடித்த ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். கலைக்குழு மூலமாக தமிழகமெங்கும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். சொந்தமாக 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

தவக்களையின் இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு ஏ.வி.எம் மயானத்தில் நடைபெறவுள்ளது. தவக்களையின் மறைவுக்கு அவருடைய நடித்த பலரும் தங்களுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x