Last Updated : 22 Nov, 2013 12:00 AM

 

Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

திரையிசை : இவன் வேற மாதிரி

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாடல்கள் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் சத்யா – இயக்குநர் சரவணன் ஜோடி, மீண்டும் இணைந்திருக்கும் படம். சமூகக் கோபம் கொண்ட துணிச்சலான இளைஞன் பாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் இளமை துள்ளலுடன் உருவாகியுள்ளன. நா. முத்துக்குமார், விவேகா, மணி அமுதவன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

‘புதியதோர் கவிஞன் செய்வோம் டீம்’ என்ற பெயரில் ஒரு குழுவும் ஒரு பாடலை எழுதியுள்ளது. ‘மலைய பொரட்டல’ பாடலில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திப்புவின் குரல் ஒலிக்கிறது. உத்வேகம் கூட்டும் ராக் இசை பாணியில் அமைந்திருக்கிறது பாடல். ‘என்னை மறந்தேன்’ பாடலை மது பாடியிருக்கிறார். காதல் மயக்கத்தில் இளம்பெண் பாடும் வழக்கமான வரிகள் என்றாலும், வளமான வயலின் இசைக்கோவை பாடலுக்குச் சுவை கூட்டுகிறது.

ரீட்டா பாடியிருக்கும் ‘ரங்க ரங்கா’ பாடல் வேகமான தாளக்கட்டுடன் இருந்தாலும் ஈர்க்கவில்லை. ‘தனிமையிலே’ பாடலில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் குரலில் காதல் வலி தெரிகிறது. சோகம் கூட்டும் வயலின் பாடலுக்குப் பலம். நாயகன் தனது காதலைப் பற்றி நண்பர்களிடம் பகிரும் பாடல் வரிசையில் ‘லவ்வுல’ பாடலும் சேரும். கதையோட்டத்துடன் இசைந்து ஒலிக்கும் பாடல்கள் என்ற வகையில் இந்த ஆல்பம் வெற்றிபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x