Published : 06 Aug 2016 05:23 PM
Last Updated : 06 Aug 2016 05:23 PM
கௌதம் மேனன் தயாரிப்பில் ஜெய் நடிப்பில் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் உருவாகிறது என்று அறிவிக்கப்பட்ட போது எதிர்பார்ப்பு கிளம்பியது. தூது அஞ்சல் கொடுக்க வேண்டியவர்கள், நிறையவே தாமதப்படுத்தி இருக்கிறார்கள்.
தனியார் அஞ்சல் தனித்துவமாய் இருக்கும் என்ற எண்ணத்துடன் தியேட்டரில் அமர்ந்தோம்.
கதை: ஸ்டெம்செல்லை முறைகேடாகப் பயன்படுத்தும் சர்வதேச கும்பலின் சதியை, கொரியர் கொடுக்கும் சாதாரண இளைஞன் எப்படி முறியடிக்கிறார் என்பதே 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் கதை.
எந்த வேலையும் பிடிக்காமல், காதலிக்காக கொரியர் கொடுக்கும் வேலையில் சேரும் தமிழ்ச்செல்வனாக ஜெய் சரியாகப் பொருந்துகிறார். காதலியைப் பின் தொடர்வது, காதலியைக் கவர முயற்சிப்பது, நட்புக்கு முக்கியத்துவம் தருவது, பாசமான தம்பியாக அக்கறை விதைப்பது என ஜெய்க்கு பொருத்தமான பாத்திரம். அதை எந்த வித அலட்டலும் இல்லாமல் நிறைவாக செய்திருக்கிறார்.
யாமி கௌதம் ஓவியம் போல அழகாக வந்து போகிறார். தோற்றம், உடல் மொழி மூலம் கதாநாயகிக்கான பங்களிப்பை கச்சிதமாக வழங்குகிறார்.
சந்தானம்- விடிவி கணேஷ் இடையே நடக்கும் உரையாடல்களுக்கு தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. சந்தானத்தின் வழக்கமான ஒன் லைன் பஞ்ச்களுக்கு அதிக அப்ளாஸ் கிடைத்தது.
நாசர், பிரேம், அஷுதோஷ் ராணா ஆகியோர் கதாபாத்திரத்துகான நடிப்பை நல்கியுள்ளனர்.
சத்யா பொன்மார் கேமரா காதல், ஆக்ஷன் என எல்லா தடங்களிலும் முத்திரை பதிக்கிறது. கார்த்திக் இசை படத்துக்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை.
சட்டை பண்ற மாதிரி ஏதாவது செய் என சந்தானம் சொல்ல, அதற்காக சட்டை எடுக்கவே போய் ஜெய் செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது.
மிகப் பெரிய சட்டவிரோதப் பிரச்சினையை வசனங்கள் மூலம் விளக்கும் இயக்குநர் பிரேம்சாய், அதற்கான அழுத்தத்தை ரசிகர்களுக்கு கடத்தத் தவறிவிட்டார்.
முதல் பாதியில் காதலுக்காக காத்திருப்பது, பின் தொடர்வதை கொஞ்சம் கத்தரி போட்டு, ஸ்டெம்செல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்துக்கு விறுவிறுப்பு கூடியிருக்கும். அதுவும் அந்த பப் பாடலை எந்த யோசனையும் இல்லாமல் தடா போட்டிருக்கலாம்.
தாமதமாய் வெளியான படம் என்பதால் சில அப்டேட் வெர்ஷன்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், கொரியர் இளைஞன் எப்படி அந்த சதியை முறியடிக்கிறான் என்று திரைக்கதை முடிச்சை அவிழ்த்த விதத்தில் இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
மொத்தத்தில் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' குறிப்பிடத்தகுந்த கவன ஈர்ப்பு முயற்சியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT