Published : 07 Feb 2017 11:29 AM
Last Updated : 07 Feb 2017 11:29 AM
விஜய் - அட்லீ படத்திலிருந்து ஜோதிகா விலகியதைத் தொடர்ந்து, நித்யா மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை - வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.
சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், படப்பிடிப்புக்கு முந்தைய தினம் ஜோதிகா விலகியதைத் தொடர்ந்து படக்குழு அதிர்ச்சிக்குள்ளானது.
முதற்கட்ட படப்பிடிப்பில் விஜய் - ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஜோதிகாவின் விலகலால் முதற்கட்ட படப்பிடிப்பில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது விஜய் மட்டும் பங்குபெறும் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். தற்போது ஜோதிகாவுக்கு பதிலாக நித்யா மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த வாரம் முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று நம்பிக்கையுடன் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT