Published : 18 Oct 2013 11:02 AM
Last Updated : 18 Oct 2013 11:02 AM

சினிமாவை விட்டே விலகத் தயார்: உதயநிதி ஸ்டாலின் சவால்!

தனது மனைவியை இயக்குநராக்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் வசூல், மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு என பிஸியாகக் கணக்கிட்டுக் கொண்டிருந்தவரிடம் பேட்டி என்றதும் ஆவிபறக்கும் காபி கோப்பையொன்றைக் கையில் கொடுத்தபடியே 'கேளுங்க' என்று உற்சாகமானார்...

'வணக்கம் சென்னை' படத்தின் வசூல் எப்படி இருக்கு?

எதிர்பார்த்த அளவுக்கு ஒப்பனிங் இல்ல. ஆனா டீசென்ட்டான ஓப்பனிங் இருந்துச்சு. விமர்சனங்கள் ரொம்ப பாசிட்டிவ்வா வந்திச்சு. ஒவ்வொரு ஷோவுக்கும் மக்கள் வர்றது அதிகமாகிட்டே இருக்கு. கண்டிப்பா லாபமா அமையும்னு நம்பறேன். ஏன்னா இது பெரிய பட்ஜெட் படம் கிடையாது. பப்ளிசிட்டிக்கு நிறைய செலவு பண்ணினேன். இந்த ஓப்பனிங் வந்ததுக்கு காரணமே அனிருத்தோட இசைக்கும், படத்தோட டிரெய்லருக்கு யூட்யூப்ல கிடைச்ச வரவேற்பும்தான்.

நீங்க இப்போ நடிக்கிற 'இது கதிர்வேலன் காதல்' எப்போ வெளியாகப் போகுது ?

இன்னும் 2 பாடல் காட்சிகள் படம் பிடிக்க வேண்டியிருக்கு. அவ்வளவுதான். அதன் பிறகு பின்தயாரிப்பு வேலைகள் முடிஞ்சுட்டா நவம்பர் கடைசில இசை வெளியீட்டுக்கு திட்டமிடுறேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடுற திட்டம் வச்சிருக்கேன். பார்க்கலாம்.

நயன்தாரா - உதயநிதி ஸ்டாலின் ஜோடியின் கூட்டணி திரையில் எப்படி வந்திருக்கு?

அதைச் சொன்னா சுவாரஸ்யம் போயிடலாம். எனக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் ரொம்ப கம்மியாதான் இருக்கும். எனக்கும் சந்தானத்துக்கும்தான் அதிகம் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சிகள்லதான் நயன்கூட முழுசா இருப்பேன்.

சந்தானம் இருந்தாதான் படம் நடிக்கவே ஒப்புக்குவீங்க போல?

நீங்க இப்படி கேட்கக் காரணம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' தான். மக்களும் எங்களை ஏத்துக்கிட்டாங்க. 'வணக்கம் சென்னை' படத்துல ஒரு சீன் அவரோட நடிச்சதுக்கே மக்கள் பயங்கரமா கைத்தட்டுறாங்க. 'இது கதிர்வேலன் காதல்' படத்துல 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சாயல் வந்திரக் கூடாதுனு ரொம்ப தெளிவா இருந்தார் சந்தானம். படத்தோட கதையை நகர்த்துற மாதிரி ஒரு முக்கியமான கதாபாத்தித்தில் வர்றாரு. இப்போ மூணாவதாக நடிக்கப்போற 'நண்பேன்டா' படத்துல, நானும் சந்தானமும் படம் முழுக்க ஒன்றாகவே இருக்குற மாதிரி கதை ரெடி பண்ணிருக்கார் ஜெகதீஷ். ஒரு அளவுக்கு சினிமாவுல ஹீரோவா நிலைச்சுட்டேன்னா, அதுக்கு அப்புறம் நடிக்கிற படங்கள்ல ஏதாவது புதுசா ட்ரை பண்ணுவேன்.

கதிர்வேலன் காதலும் இன்னோரு காமெடி படம் தானா..?

'ஒரு கல் ஒரு கண்ணாடி' எல்லாரும் குடும்பத்தோட ரசிச்ச படம்தானே. ஆனா 'இது கதிர்வேலன் காதல்' ஒரு குடும்பபடம். ஆனா, முழுக்க காமெடி படமும் கிடையாது. நான் கூட ஒரு சீன்ல கிளசிரின் போட்டு அழணும் அப்படினு இயக்குனர் சொன்னாரு. எனக்கு ஷாக்! ‘ ஏங்க நான் எல்லாம் அழுதா காமெடியா ஆயிடும் விட்டுருங்கனு’ சொன்னேன். இதுல புதுசா இல்லன்னா இன்னொரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி'னு சொல்லிடுவாங்க. நீங்க டிரைப் பண்ணுங்கன்னு சொன்னார். நான் முதல்தடவையாக அழுதுருக்கேன். கண்டிப்பா பிடிக்கும்னு சொன்னாரு. இந்தப் படத்துல அப்பா, அக்கா சென்டிமென்ட் இருக்கு. கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.

அடுத்து மனைவி இயக்கத்தில் நடிப்பீர்கள்தானே?

'வணக்கம் சென்னை' படத்துக்கே கேட்டாங்க. இல்ல நீங்க சிவாவை வைச்சே பண்ணுங்கன்னு சொன்னேன். இப்ப இயக்குநரா ஜெயிச்சுட்டாங்க. முதல் படம் மாதிரியே தெரியல அப்படினு எல்லாரும் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு. அடுத்து என்ன பண்ணப் போறாங்க அப்படினு அவங்க இன்னும் முடிவு பண்ணல. இப்போதைக்கு அவங்க நினைப்பு எல்லாம் இன்னைக்கு கலெக்‌ஷன் எவ்வளவு. செலவு பண்ண காசு வந்திருமா லாபம் கிடைக்குமானு டென்ஷனா கேட்டுகிட்டே இருக்காங்க... அவங்க அடுத்த கதை ரெடி பண்ணிட்டு, அந்த கதை எனக்கு பொருத்தமா இருந்தா, கண்டிப்பா பண்ணுவேன்.

உங்களை திரையில முதல்ல கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் நடிக்க கூப்பிடலையா?

பெரிய டைரக்டர். அவருதான் என்னை வற்புறுத்தி 'ஆதவன்'ல நடிக்க வைச்சாரு. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படப்பிடிப்பு சமயத்துல ஒரு கதை சொன்னாரு. அது ஒரு பழைய படத்தோட ரீமேக். ரெண்டு மூணு ஹீரோக்கள் கூட சேர்ந்து பண்ற மாதிரியிருக்கும். நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிருக்கேன். அவர் சொன்ன கதை ஜீவா, ஆர்யா மாதிரி நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய ஒரு பெரிய பட்ஜெட் காமெடி படம். அவர் கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன்.

உங்கள தயாரிப்பாளரா அறிமுகப்படுத்தியவர் விஜய். நீங்க நினைச்சா 'தலைவா' படத்த ரிலீஸ் பண்ணிருக்க முடியுமே?

அந்தப் படத்துக்கு ஏற்கனவே பிரச்சினை. நான் வேற போனா பிரச்சினை இன்னும் கூடியிருக்கும்.. அந்த பிரச்சினையின்போது நான் விஜய் சார்கிட்ட பேசவே இல்ல. அவரோட நண்பர்கள் கிட்ட பேசினேன். சினிமால ரொம்ப தப்பான விஷயங்கள் நடக்குதுன்னு சொன்னேன்.

அதாவது மாணவர் புரட்சி படைன்னு சொன்னாங்க. அவங்களுக்கு என்ன சம்பந்தம் சொல்லுங்க. சந்தானத்தோட 'நீ அரசியலுக்கு ரெடியாயிட்ட'னு ஒரு டயலாக். இதுக்கும் மாணவர் புரட்சி படைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க. தயாரிப்பாளரே இதைப்பத்தி கேள்வி கேட்காதப்போ நமக்கு எதுக்கு அப்படினு விட்டுட்டேன்.

அந்த சமயத்துல என்னால முடிஞ்ச உதவிய பண்றேன்னு அவரோட நண்பர்கள்கிட்ட சொன்னேன். எனக்கு விஜய் சார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல. ஏன்னா அவரே ரொம்ப டென்ஷன்ல இருந்திருப்பார். ஒரு பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படத்துக்கே இவ்வளவு கஷ்டமான்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.

வணக்கம் சென்னை உட்பட நீங்க தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு ரத்து ஆக என்ன காரணம்?

ஊருக்கே தெரிஞ்ச காரணம்தான். பேசாம அவங்க ஒரு சட்டமே போட்றலாம். ரெட் ஜெயன்ட் தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது அப்டினு. நீதிமன்றத்திற்கு கண்டிப்பா போய் போராடுவேன். நிறைய ஆதாரங்கள் எடுத்து வச்சிருக்கேன். இப்போ ஒரு கமிட்டி ஒண்ணு போட்டுருக்க்காங்க இல்ல.. அந்தமாதிரி ஒரு காமெடி கமிட்டியே கிடையாதுங்க.

மத்திய அரசு நடத்துற சென்சார் போர்டு அவ்வளவு சின்சியரா நடத்துறாங்க. ஒரு படத்துக்கு சம்பந்தமில்லாம பாக்குற முதல் ஆளுங்க அவங்கதான். அதுக்கு அவ்வளவு ரூல்ஸ் இருக்கு. 5 பேர் பாக்கணும். அதுல 2 லேடீஸ் இருக்கணும். படம் புரொஜக்‌ஷன் ரூம்லகூட தயாரிப்பாளர், இயக்குநர் இருக்கக் கூடாது.

ஆனா, ரிலீஸ் முன்னாடித்தான் இவங்களுக்கும் (வரிவிலக்கு குழு) படம் போட்டு காட்றோம். அவங்க வீட்டு வேலைக்காரன்ல இருந்து, தோட்டக்காரன் வரைக்கும் வந்து படம் பாக்குறாங்க. இவங்க இப்படி பாத்தா ஒரு தயாரிப்பாளருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க. என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரமிருக்கு. அதுவும் ஒரு பெரிய ஸ்டார் படம்னா ஒரு பிக்னிக் மாதிரி வீட்டுல சொந்தக்காரங்கள்ல இருந்து எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திராங்க.

'தலைவா' படத்துக்கே வரிவிலக்கு கிடையாதே. அப்படின்னா, முதல்லயே தெரியுது இந்த படத்துக்கு எல்லாம் வரிவிலக்கு குடுக்கணும், இதுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு. நான் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர்ல புகார் கொடுக்கப் போறேன்.

வரி தானே கட்டுங்கன்னு சொல்றாங்க. நான் கேட்குறது ஒரே விஷயம்தான். மத்த படங்களுக்கு கிடைக்குறது ஏன் என்னோட படங்களுக்கு கிடைக்கல. ஏன்னா என்னோட அரசியல் பின்னணி. எல்லாத்துக்கும் போதுவா ஒரு சட்டம் போடுங்க. உடனே உங்க ஆட்சில நடக்கலயானு கேட்பாங்க.

என்னால ஒரு படம் வெளிவர முடியாமலோ, தள்ளிப் போச்சுன்னோ சொன்னாங்கன்னா நான் சினிமாவை விட்டே போகத் தயார். வரி விஷயத்தை பொறுத்த வரைக்கும் இந்த விஷயத்தை நான் சும்மா விடப்போவதில்லை.

தயாரிப்பாளர், நடிகர் அடுத்து அரசியல்தானே?

அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. இப்போதைக்கு 'இது கதிர்வேலன் காதல்' என்னோட இலக்கு. என்னுடைய தயாரிப்பு, வெளியீடு அப்படினு பிஸியாக இருக்கேன். அரசியல் எல்லாம் நினைச்சு பாக்கக்கூட நேரமில்லை. எனக்கு அரசியல் தேவையில்லாதது. சினிமாதான் என்னோட ஃபாஷன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x