Published : 06 Apr 2014 12:00 PM
Last Updated : 06 Apr 2014 12:00 PM
பாடல்களால் தாலாட்டி, உணர்வுகளையும், நினைவுகளையும் சினேகமாய் ஸ்பரிசித்த வானொலியின் நினைவுகள் என்றென்றும் நிலையானது.
எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. அப்போதெல்லாம் ஊரெங்கும் ரெண்டே ரேடியோ பிராண்ட்தான். ஒன்று, குழந்தை வாயில் கைவைத்தபடியிருக்கும் விளம்பரத்திற்கு சொந்தமான மர்ஃபி, மற்றொன்று பிலிப்ஸ். நம் வீட்டு குழந்தைக்கு சட்டை தைப்பது போல, ரேடியோவுக்கு அழகாக உறை தைத்து போட்டிருப்போம். அதையும் மீறி பாச்சை, பல்லி ஏதாவது உள்ளே போய், ரேடியோவை மக்கர் பண்ண வைத்துவிடும். அதை எடுத்துக்கொண்டு ரிப்பேர் பண்ண அப்பாவுடன் செல்வேன்.
நற்சாந்துபட்டியில் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு, என்னை அங்கேயே உட்கார்ந்து கையோடு வேலையை முடித்து வாங்கி வர சொல்லிவிடுவார் அப்பா. பிறகு வந்து வாங்கிக்கலாம் என்றால், “இல்லைடா, நம்ம ரேடியோவோட ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ கழட்டிடுவாங்க, பக்கத்துல இருந்து பார்த்துக்க”, என்பார். நானும் மெக்கானிக் அண்ணனையே முறைத்துக் கொண்டிருப்பேன். லேந்தர், பெட்ரமாக்ஸ், டார்ச் லைட் என எல்லாமே அவரிடம் ரிப்பேருக்கு வரும். மாலைவரை காத்திருந்து, அவர் சரி செய்து கொடுத்ததும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருவேன்.
எங்க ரேடியோவுக்கு மூன்று பேட்டரி போடவேண்டும். ஐந்து பேட்டரி ரேடியோ வைத்திருப்பது பெருமையாக பார்க்கப்பட்ட காலம் அது. பேட்டரி தீர்ந்து போகப்போகிறது என்றாலே, ரேடியோ இழுக்க ஆரம்பித்துவிடும். தினமும் பேட்டரியை கழற்றி வெயிலில் காயவைத்து சார்ஜ் ஏற்றுவோம். கடைசியாக வெயிலில் அல்ல, சூரியனுக்கு எடுத்துப்போய் காயவைத்தாலும் சார்ஜ் ஏறாது என உறுதியான பிறகுதான் புது பேட்டரி வாங்கவே கிளம்புவார் அப்பா. பேட்டரி தீர்ந்துபோய் ரேடியோ கேட்காமல் இருக்கும்போதெல்லாம், கை உடைந்தது போலிருக்கும். இதோடு மழை வந்துவிட்டால், இடி விழுந்துவிடுமென பயமுறுத்தி ரேடியோ போடவே விடமாட்டார்கள். ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும் சந்தனம், குங்குமம் வைத்ததன் சுவடில்லாத ரேடியோவை ஊர்ப்பக்கம் பார்ப்பதே கடினம். ஒரு ரேடியோ இருந்தால் அந்த வீட்டுக்கு கடிகாரமே தேவைப்படாது. ரேடியோவில் ஓடும் நிகழ்ச்சிகளை வைத்தே நேரத்தை கணக்கிட்டுவிடுவோம்.
எங்களூரில், திருச்சி வானொலி நிலையம், தெளிவாக எடுக்கும். தினமும் காலை, ‘பக்தி மாலை’யுடன் நாளை தொடங்குவதே, புத்துணர்ச்சியாக இருக்கும். அதைத் தொடர்ந்து தென்கச்சி.கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’. சரியாக ஏழே காலிற்கு, ‘ஆகாசவானியின் செய்தியறிக்கை’ என டெல்லியிலிருந்து சரோஜ் நாராயணசாமி மொறுமொறுப்பான குரலில் செய்திகள் வாசிப்பார். இந்த குரலுக்கு சொந்தகாரர் ஒரு ஆண், என நினைத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன்.
அதன்பின், திரைப்பட பாடல்கள் தொடங்கும். புது பாடல்கள் ஒலிபரப்பாகும் போது பக்கத்து வீட்டிலிருந்து, “அம்மா, கொஞ்சம் சவுண்ட் வைக்க சொன்னாங்க” என்று குழந்தையிடம் சொல்லி அனுப்புவார்கள். கொஞ்சம் சவுண்ட் அதிகரித்து வைத்தாலும், “சத்தத்த கூட்டுனா பேட்டரி சீக்கிரம் தீர்ந்திடும்டா”, என அப்பா விஞ்ஞானியாய் மாறி விளக்கி கொண்டிருப்பார். விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு முடியும்போது ஒன்பதரை மணிக்கு ஒரு இசை ஒலிபரப்புவார்கள். அதை கேட்டவுடன் பள்ளிக்கு நேரமாகி விட்டதென அடித்து பிடித்துக்கொண்டு ஓடுவோம்.
அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சிராப்பள்ளி வானொலியின் சென்னை அஞ்சலில், சுசித்ராவின் குடும்பம் என்ற நிகழ்ச்சி மிக பிரபலம். சரியாக மதியம் மூன்று மணிக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாகும். ‘பாலும் பழமும்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ என டூரிங் டாக்கீசில் பார்த்த படங்களை ஒலிச்சித்திரம் கேட்கும்போது மனதில் ஓட்டிப்பார்ப்பேன். இரவில் வண்ணச்சுடரில் நாடகம் போடுவார்கள். அந்த நாடகத்தை யார் தலைமாட்டில் ரேடியோவை வைத்துக்கொண்டு கேட்பதென்று எனக்கும் என் அக்காவுக்கும் இடையில் போட்டியே நடக்கும்.
மேலும் தமிழில் கிரிக்கெட் கமென்டரியும் எப்போதாவது ஒலிபரப்பாகும். அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, இருவரும் “நன்கு எழும்பி வந்த பந்தை, கபில்தேவ் மிக அழகாக, லாவகமாக அடித்து, இல்லையில்லை அடித்து என்பதை விட சற்று வேகமாக தள்ளி விட்டார் என்று சொல்லலாம்”, என்று விவரிக்கும்போது அந்த ஆட்டம் கண்முன் வந்து போகும். ஹிந்தியில் கமென்ட்டரி வரும்போது, “ஆட் ரன் கேலியே” என்றால் நாங்கள் இங்கே ‘அவுட் அவுட்’ என கத்துவோம். அவ்வளவுதான் நமக்கு அப்போது புரிந்த ஹிந்தி. (இப்போது வரையும் கூட அவ்வளவுதான்!!!)
ஆனால் இதையெல்லாம் தாண்டியும், இலங்கை வானொலி மேல் ஒரு தனி மயக்கம் இருந்தது. “இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை”, என்று அந்த தமிழை கேட்பதே உற்சாகமாயிருக்கும். அப்துல் ஹமீதின் “பாட்டுக்குப் பாட்டு” நிகழ்ச்சியில், “அடுத்ததாக நாம் அழைப்பது(ம்), மட்டக்களப்பை சேர்ந்த திலீபன்”, என அவரின் அறிமுக உரைக்கே அவ்வளவு ரசிகர்கள். ‘மக்கள் குரல்’ நிகழ்ச்சிமூலம் கே.எஸ்.ராஜா, சமூக நடப்புகளை பகிர்வார். அதோடு, ஒரு நிமிடம் வரை தமிழில் மட்டுமே பதில் சொல்லும் போட்டியையும் நடத்துவார்.
“நாளை சந்திப்போம், கலந்து சிந்திப்போம்” என்றும், சில நாட்களில், ‘நீயா’ படத்தின், “என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா?” என ப்ரியா பேசும் வசனத்தை போட்டுவிட்டு, “போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன்”, என அசத்தலாக விடைபெறுவார். இவர்களோடு மயில்வாகனன் சர்மானந்தா, நித்யகல்யாணி, ராஜேஸ்வரி சண்முகம், என ஒவ்வொரு அறிவிப்பாளருக்கும் தனி பாணி, அத்தனை தனித்துவம்.
நேயர் விருப்பத்தில் கடிதம் போட்டவர்களின் பெயரை அவர்களின் ஊர்ப் பெயரோடு சேர்த்து எதுகை மோனையோடு சொல்வார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிரும்போது, “அம்மா, அப்பா, அம்மப்பா, அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா”, என உறவுமுறைகளை பட்டியலிடுவதே தனி சந்தோஷம். ஒரு முறையாவது என் பெயரும் ரேடியோவில் வந்துவிடாதா என்ற ஏக்கத்தில் இந்நிகழ்ச்சிக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட எனது வாழ்த்து செய்தி ரேடியோவில் வந்ததில்லை. அதன் பின்தான் தெரியவந்தது, இன்லேன்ட் லெட்டர் இந்தியாவுக்குள் மட்டும்தான் போகும், இலங்கைக்கு ஏர்மெயிலில் எழுதவேண்டும் என்பது !!!
இவ்வளவு சந்தோஷமான நினைவுகளையும் தாண்டி, எம்.ஜி.ஆர். மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் திடீர் மறைவின்போது, இடைவிடாது ஒலித்த சோகமான சாரங்கி இசைக்கும், இறுதி ஊர்வலத்தின் நேரடி வர்ணனைக்கும் நடுவில் பஞ்சாயத்து ரேடியோவில் குழாய் ஸ்பீக்கர் கட்டி, “உலகத்த ஆண்ட உத்தமர காணோமுன்னு ஊரே அழுகுதுங்க, நாட்ட ஆண்ட நல்லவர காணோமுன்னு நாடே அழுகுதுங்க”, என்ற ஊர்ப்பக்கத்து ஒப்பாரியை இடையிடையே போட்டு, ஒட்டுமொத்த ஊரும் ரேடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது இன்றும் கண்முன்னே காட்சியாக விரிகிறது.
இப்படி வானொலியோடே வளர்ந்த என்னை கடந்த ஆண்டு, சென்னை அகில இந்திய வானொலி நிலையம், சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்து விருது கொடுத்தபோது, அடைந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது. தொலைவில் நின்று பார்த்து ரசித்த ஒரு ஆளுமையின் தோள்களில், கை போட்டு பேசும் சிலிர்ப்பை தந்தது, அவ்விருது.
இன்றோ காரில் ஏறினால், மாற்றி மாற்றி கேட்க பத்து பண்பலைகள் வரிசைகட்டி நின்றாலும், ஆயுதபூஜைக்கு பொட்டு வைத்து கும்பிட்டு, கலர் கலராக உறை தைத்துப்போட்டு அழகு பார்த்து, ஸ்பேர் பார்ட்ஸ மாத்திடுவாங்களோ என பயந்து கையோடு ரிப்பேர் பண்ணி வந்த, என் பால்ய கால ரேடியோவின் நினைவலைகளில் மீண்டும் ஒரு நாள் மூழ்காதா என்றே, ஏங்குகிறது மனது !!!
தொடர்புக்கு:pandirajfb@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT