Published : 07 Apr 2017 02:37 PM
Last Updated : 07 Apr 2017 02:37 PM
போர்க் கைதியாக இருக்கும் இந்திய விமானப் படை பைலட்டின் காதலும், காதல் சார்ந்த தேடலுமே 'காற்று வெளியிடை'.
காஷ்மீரில் விமானப் படையில் பைலட்டாக பணிபுரிகிறார் கார்த்தி. அவர் தன் தோழியுடன் ஜீப்பில் பயணம் செய்யும்போது விபத்து நிகழ்கிறது. ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்படும் கார்த்தியை டாக்டர் அதிதி ராவ் ஹைதரி சிகிச்சை மூலம் குணப்படுத்துகிறார். அதற்குப் பிறகான இருவரது சந்திப்பில் காதல் மலர்கிறது. சின்ன சின்ன சண்டைகள், ஈகோ, கருத்து வேறுபாடுகள் என பெரிதாக வளர புரிதல் இன்றிப் பிரிகிறார்கள். அதற்குப் பிறகு கார்த்தி எப்படி போர்க் கைதி ஆகிறார், அங்கிருந்து எப்படி மீள்கிறார், காதலி என்ன ஆகிறார் என்பது மீதிக் கதை.
காதல் எனும் அஸ்திரத்தை மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், அது வழக்கமும் பழக்கமுமான பாதையிலேயே பயணிப்பதால் புத்தம் புதுசா என்று சொல்லும்படி எதுவும் இல்லை.
லந்து செய்யும் கார்த்தி காற்று வெளியிடை படத்தில் பார்க்க முடியவில்லை என்பது மாற்றம்தான். ஆனால், மீசை இல்லாமல் மழித்த முகம், ஒட்டாத முக பாவனை, இயல்பு மீறிய புன்னகை என்று கதாபாத்திரத்துக்கு அந்நியப்பட்டே நிற்கிறார். மணிரத்னம் படத்தின் முந்தைய கதாநாயகர்களை நினைவுபடுத்துவதாகவே கார்த்தியின் நடிப்பு அமைந்துவிடுவதால் சவாலாகவோ, சபாஷ் சொல்லும் அளவுக்கோ இல்லை. காதல் காட்சிகளில் கொஞ்சும் போதும், பாவனைகளிலும் செயற்கைத்தனம் அதிகம் தெரிகிறது.
அதிதி ராவ் ஹைதரியின் நடிப்பு அபாரம். மகிழ்ச்சி, கோபம், அழுகை, கெஞ்சல் என்று உணர்வுகளை கண்களின் வழியே மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார். உள்ளச் சிக்கலை மிகச் சரியாக கையாண்டுள்ளார்.
இந்தப் படத்தில் எதற்கு ஆர்.ஜே.பாலாஜி என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. குணச்சித்ர நடிப்புக்கான களம் என்று நினைத்தாலும், அதற்கான முயற்சி எடுபடவில்லை. ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஷ்ரதா ஸ்ரீநாத், விபின் ஷர்மா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ரவிவர்மன் காஷ்மீர் அழகையும், பனிப் பகுதிகளையும், மலைத் தொடரையும் கேமராவுக்குள் அள்ளி வந்து கண்களுக்குள் கடத்துகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வான் வருவான், சாரட்டு வண்டியில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்துடன் ஒன்றிப் போகிறது. ஸ்ரீகர் பிரசாத் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
மணிரத்னம் முந்தைய படங்களுக்கான அதே டெம்ப்ளேட்டில் படம் இயக்கியிருப்பது ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்துவிடுகிறது. கிளிஷே காட்சிகள் பொறுமை இழக்க வைக்கின்றன. கதாபாத்திரங்களுக்கான ஆட்டிட்யூட் சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. இதனால் வரும் மோதல், கசப்புகள் பெரிய அளவில் ரசிகனை பாதிக்கவில்லை. திரைக்கதை எந்த வித அழுத்தமும் இல்லாமல் வெறுமனே கடந்து போகிறது.
கார்கில் போர், கைதி, சிறைவாசம் என்பவை வெறும் சடங்குகளாகவே நிறுவப்பட்டுள்ளன. 1999 காலகட்டம் என்று இயக்குநர் புத்திசாலித்தனமாக தப்பிக்க நினைத்தாலும் அவை நம்பும்படியாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ இல்லை. கார்த்தியின் பெற்றோர் தொடர்புடைய காட்சிகளில் நாடகத் தன்மையே மேலோங்கி நிற்கிறது.
மொத்தத்தில் 'காற்று வெளியிடை' வழக்கமான மணிரத்னம் சினிமாவாக அமைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT