Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

நட்சத்திரங்களும் என் வானமும்: வைரமுத்து தீப்பந்தமா, எரிமலையா?

வீட்டுத் தொலைபேசி ஒலிக்க என் மனைவி அதை எடுத்தார். எதிர்முனை குரல், ‘நண்பர் முருகேஷ் பாபு இருக்காரா..?’ என்றதும் என் மனைவிக்கு கேள்விக்கு முன்னே அந்தக் குரல் உள்ளே போய்விட்டது. இது எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என்ற யோசனையோடு, ‘அவர் குளிச்சுகிட்டிருக்கார்… நீங்க யாரு..?’ என்று கேட்டிருக்கிறார். ‘நான் வைரமுத்து… அவருடைய நண்பர்… வந்ததும் எனக்கு பேசச் சொல்லுங்க… இன்னிக்கு காலையில் சந்திப்பதாக திட்டம் வெச்சிருந்தோம். நான் எதிர்பாராத சிக்கலில் இருக்கேன். அதுக்காகத்தான் கொஞ்சம் பேசணும்…’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட என் மனைவிக்கு ஆச்சரியம்!

குளித்த தலையோடு வந்த என்னிடம், “வைரமுத்து சாருக்கு நம்ம வீட்டு நம்பர் தெரியுமா… இப்ப போன் பண்ணுனாரு..?” என்றார். “ஆமாம்… ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரே ஏரியாகாரங்க… (அப்போது இருவருமே டிரஸ்ட்புரம் கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம்) தொடர்பு எண் கொடுங்கனு வாங்கினார். இன்னிக்கு சந்திக்கறதா பேசியிருந்தோம்…” என்றேன்.

அவரைச் சந்திக்க சினிமா பிரபலம் யாரோ வருவதாகச் சொல்ல, என்னிடம் கேட்டுவிட்டு பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு எனக்குத் தொலைபேசியில் அழைத்திருந்தார் கவிஞர். நான் மீண்டும் அழைத்துப் பேசியபோது, “உங்கள் வசதியைச் சொல்லுங்கள்” என்றார்.

எப்போதுமே அவரிடம் அந்தக் குணத்தை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு சந்திக்க நேரம் கொடுத்தால் அதை மாற்ற மாட்டார். மாற்ற வேண்டிய சூழல் வந்தால் சம்பந்தப்பட்டவரின் வசதியையும் கேட்டுக்கொள்வார்.

சினிமாவில் இயங்கிக்கொண்டிருந்தாலும் பத்திரிகையின் குணம் அவருக்கு நன்றாகவே தெரியும். நம்மைச் சங்கடப்படுத்தாமல் சூழலைப் புரிந்துகொள்வார். ஒரு முறை சினிமா ஸ்பெஷல் இதழுக்காக ஒரு கட்டுரை தயாரித்தோம். ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பது ஐடியா. கதை விவாதத்தில் தொடங்கி சென்சார் ஆகிற வரையில் எல்லா வகையான வேலைகளைப் பற்றியும் எழுதுவது திட்டம். அதில் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதைச் சொல்ல, வைரமுத்து பாடல் எழுதும் சூழலை வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி அவருக்கு போன் செய்து விவரம் சொன்னேன். காலை பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்றார்.

நான் அவர் வீட்டுக்குப் போனதும், என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்துவிட்டு இயக்குநருக்கு போன் பண்ணினார். “ஆமாம்… அங்குதான் வந்து கொண்டிருக்கிறோம்… நம்முடையதை கவர் ஸ்டோரியாக போட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு இயக்குநரிடம் பேசினேன்” என்றார் என்னிடம்..! நான், “சார்…” என்று தொடங்க, “வாங்க… வண்டியிலே போயிட்டே பேசுவோம்…” என்றார். “இல்லை சார்… அங்கே இருந்து நான் வேற அசைன்மெண்டுக்குப் போகணும். பைக்கில் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு, பெருசா எதிர்பார்க்கிறாரே… என்ற கவலையோடு நின்றேன்.

“வாங்க பிரதர்… அங்கே போய் பேசிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிவிட்டார். நானும் பின் தொடர்ந்தேன்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய சாமுராய் படத்துக்கான பாடல் உருவாக்கம். ஹாரிஸ் கொடுத்த மெட்டுக்கு வைரமுத்து பாடல் எழுதி வைத்திருந்தார். முதலில் போட்டோ எடுத்துடலாம் என்று சொல்லிவிட்டு மூவரையும் அமர வைத்து படம் எடுத்தோம்.

“பாலாஜி… உங்கள் கதைச் சூழலை ஒருமுறை விளக்கமாச் சொல்லுங்க… பாடல்ல மாற்றம் செய்யணும்னாலும் பயன்படும்… பத்திரிகைல எழுதணும்னாலும் பயன்படும்…” என்றார் வைரமுத்து.

அவர் சூழலைச் சொல்லி முடிக்க, ஹாரிஸ் ஒரு முறை மெட்டை வாசித்தார். கவிஞர் தன் கம்பீரக் குரலில்,

ஆகாய சூரியனை ஒற்றைச் சடையில் கட்டியவள்,
நின்றாடும் விண்மீனை நெற்றிப் பொட்டில் ஒட்டியவள்
இவள்தானே தீப்பந்தத்தை தீப்பெட்டிக்குள் செருகியவள்…

என்று பாடிக் காட்டினார்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, வைரமுத்து டைரக்டரிடம், “நாயகன் முரட்டுத்தனமானவன்… அவனையே காதலில் மயக்கிவிட்டாள் நாயகி என்ற உங்கள் சூழலுக்கு நானும் சூரியன், தீப்பந்தம் எல்லாம் கொண்டு வந்துவிட்டேன்… சம்மதம்தானே..!” என்றார். ஒருவேளை சூரியன், தீப்பந்தம் என்ற உதாரணங்கள் டைரக்டர் சொன்னதாக இருக்குமோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, பாலாஜி சக்திவேல், ‘தீப்பந்தம் அனலாவும் நாயகனோட குணத்தைச் சொல்றதாகவும் இருக்கு… ஆனா, முந்தைய ரெண்டு வரிகள்ல வர்ணனை பெண்மையோட… பெண்ணின் அலங்காரத்தைச் சொல்றதா இருக்குது… இதுக்கு தீப்பந்தம் ஒட்டாமல் இருக்கோன்னு தோணுது…” என்றார்.

வைரமுத்து அடுத்த காகிதத்தை எடுத்து மேலே வைத்துவிட்டு தொண்டையை செருமிக்கொண்டார். “உண்மைதான்… ஆனால், பெண்ணை வர்ணிப்பதும் அவள் அலங்காரத்தை மெச்சுவதும்தானே கவிதையின் அழகு… கடைசி வரியை மாற்றிவிடலாமா என்றார்.

“மாத்திடலாம் சார்… ஆனா, தீப்பந்தம் மாதிரி ஃபோர்ஸா இருக்கட்டும் சார்…” என்றார் பாலாஜி சக்திவேல்.

வைரமுத்து ஏற்கனவே எழுதிக் கொண்டுவந்ததை அங்கேயே பாடினார்…

ஆகாய சூரியனை ஒற்றைச் சடையில் கட்டியவள்,
நின்றாடும் விண்மீனை நெற்றிப் பொட்டில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

பாடிவிட்டுச் சொன்னார், “என்ன இயக்குநரே… தீப்பந்தத்தை விட எரிமலை பெரிதுதானே?”

இந்த மாற்றத்தை எதிர்பார்த்து ஏற்கனவே யோசித்து வைத்திருக்கிறார்.

அங்கே பாடல் ஓகே ஆகிவிட்டது, ஆனால் எனக்குள் தயக்கம் இன்னும் எரிமலையாக, தீப்பந்தமாகக் கனன்றுகொண்டிருந்தது. கட்டுரையின் ஒரு பகுதி இது என்று எப்படிச் சொல்வது என்ற என் கேள்விக்கு பதிலாக வைரமுத்து கீழிறங்கும்போது சொன்னார்.

“என்ன ப்ரதர், அரைப் பக்கம் வருமா? அட்டையிலே வரும்னு சொன்னா எல்லாருக்கும் உற்சாகமா இருக்கும்னு சொன்னேன். ஆனா, என்ன வரும்னு எனக்குத் தெரியும். உங்க பயத்தை இங்கேயே உதறிட்டு போயிருங்க… ஹாரிஸ் கிட்டேயும் பாலாஜி சக்திவேல் கிட்டேயும் நான் பேசிக்கிறேன்” என்றார்.

மருதாணி பூசியது போல இதமாக இருந்தன அவருடைய வார்த்தைகள்!

தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x