Published : 03 Sep 2016 06:31 PM
Last Updated : 03 Sep 2016 06:31 PM
சாதிய ரீதியிலான சமூகத்தை திமிருடன் சத்தமாகப் பேசும் சினிமா 'கிடாரி'.
சாத்தூரில் ஆட்டு சந்தை நடத்தும் வேல ராமமூர்த்தி பெரிய தாதாவாக வலம் வருகிறார். அவரின் அடியாளாக வரும் சசிகுமாரைப் பார்த்து பஞ்சாயத்து செய்பவர்களே கூட பம்முகிறார்கள். பகையை மட்டுமே சம்பாதித்து வைத்திருக்கும் வேல ராமமூர்த்தியை கொல்ல பல கூட்டங்கள் புறப்படுகின்றன. அப்படி வரும் பகையாளிகளிடமிருந்து வேல ராமமூர்த்தி தப்பித்தாரா? சசிகுமார் என்ன செய்கிறார்? என்பதை அரிவாள், வெட்டு, ரத்தம், சத்தம் என பார்த்தும் பழகியும் போன சங்கதிகளை அத்தியாயங்களாக சொல்கிறது கதையும் திரைக்கதையும்.
மாஸ் மசாலா படத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசனின் முயற்சி பலன் அளித்திருக்கிறது.
தாதாவாக வலம் வரும் வேல ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். குரோதம், விரோதம், நயவஞ்சகம், வீரம், மரண பயம்,சீற்றம் என அத்தனை உணர்வுகளையும் குறைவில்லாமல் கொடுத்த விதத்தில் கவனிக்க வைக்கிறார்.
'உப்பு போட்ட வீட்டுக்கு தப்பு பண்ணக்கூடாது' என்று விசுவாசத்தைக் காட்டும் அடியாள் பாத்திரத்தில் சசிகுமார் சரியாகப் பொருந்துகிறார். மீசையை அரிவாளால் சீவி விடுவது, காதலில் கிறங்குவது, துரோகம் உணர்ந்து கலங்குவது, சூழல் உணர்ந்து புத்திசாலித்தனம் காட்டுவது, பஞ்சாயத்தில் லந்து பண்ணி அலப்பறை கூட்டுவது, ஈகோ எகிறாமல் இருக்க ஒதுங்கிப் போவது என சசிகுமார் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஆனால், 10 படங்களை நெருங்கிவிட்ட நிலையிலும் பாதையை மாற்றாமல் ஒரே மாதிரியாக பயணம் செய்ய அடம்பிடிப்பது ஆரோக்கியமா என்று சசி இனியாவது சிந்திக்க வேண்டும்.
நிகிலா விமலின் ரொமான்ஸ் படலம் என அனைத்திலும், 'நாடோடிகள்' அனன்யாவின் ஜெராக்ஸ் தெரிகிறது.
வேல ராமமூர்த்தியின் மகனாக நடித்துள்ள வசுமித்ர (அறிமுகம்), மூக்கையாவாக வரும் காளை, நாடகப் பேராசியர் மு.ராமசாமி, ஓ.ஏ.கே.சுந்தர், சுஜா வாருணி ஆகியோர் கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளனர்.
நெப்போலியனின் மறு வருகை படத்துக்கும், திரைக்கதை அமைப்பில் மாற்றத்தை நிகழ்த்துவதற்கும் மிகப் பெரிய பலமாய் அமைந்துள்ளது.
கதிரின் ஒளிப்பதிவு வறண்ட பகுதியை, கரிசல் காட்டை கண் முன் நிறுத்துகிறது. தர்புகா சிவாவின் இசையில் வண்டியில நெல்லு வரும், தல காலு புரியல பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை எந்த உறுத்தலும் இல்லாமல் படத்தோடு ஒன்றிப் போகிறது.
கதாபாத்திரத் தேர்வு, நிலப்பரப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையில் அலுப்பையும், சலிப்பையும் தந்துவிட்டார். ஒவ்வொரு அறிமுகத்துக்கும் ஓர் அத்தியாயத்தால் விவரிப்பது மிகப்பெரிய சோர்வைத் தந்துவிடுகிறது. முதல் பாதியைக் கடந்த பின்னும் அந்த அத்தியாயம் நீள்வதை என்னவென்று சொல்ல? சண்டியர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போலீஸ் துணை போவதாகக் காட்சிப்படுத்தி இருப்பதிலும் நம்பகத்தன்மை இல்லை.
மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்திய பிறகு அந்தக் கதாபாத்திரத்தின் இன்னொரு முகத்தை காட்டும் விதம், துரோகத்தின் பதிவை, நயவஞ்சகத்தின் இருப்பை ஏன் அவ்வளவு கொண்டாட்டத்துடன் பதிவு செய்ய வேண்டும்?
ஆரம்பத்தில் இருந்தே ரத்தச் சகதியில் ஊற வைப்பது, உருட்டி எடுப்பது, குழந்தையைக் கடத்தி வைத்து கேஸ் கொடுக்கக் கூடாது என்று மிரட்டுவது என வன்முறையை மட்டுமே அதிகாரத்துடன் பேசுவது ஏன்?
அதிகாரம், மோதல், தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான சதித் திட்டங்கள் என இப்படியே நீளும் திரைக்கதை பயத்தை மட்டுமே விதைக்கிறது.மொத்தத்தில் 'கிடாரி' ரத்த ராஜ்ஜியம் நடத்தும் ரத்த பூமியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT